சினம் திரைவிமர்சனம் : சினம் அனைவருக்கும் முக்கியமாக பெண்களுக்கு முன்னெச்சரிக்கை தரும் எமோஷனல் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

0
390

சினம் திரைவிமர்சனம் : சினம் அனைவருக்கும் முக்கியமாக பெண்களுக்கு முன்னெச்சரிக்கை தரும் எமோஷனல் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜயகுமார் தயாரித்துள்ள படம், ‘சினம்’. அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், மறுமலர்ச்சி பாரதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். மதன் கார்க்கி, பிரியன், தமிழணங்கு பாடல்கள் எழுதியுள்ளனர். ஷபீர் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு நேர்மையான எஸ்ஐ பாரி வெங்கட் (அருண் விஜய்) ஒரு கொலை வழக்கில் ஒரு குண்டரை அடுத்த நாள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல அவரைக் கண்டிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் பாரி வெங்கட். கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அந்த காவல் நிலையத்தில்- நேர்மையற்ற இன்ஸ்பெக்டர் (சித்து சங்கர் ) எப்பொழுதும் பாரியை தாழ்த்திக்கொண்டே இருக்கிறார். ஏற்கனவே பாரி, மதுவை (பாலக் லால்வானி) அவளது தந்தையின் அனுமதியின்றி திருமணம் செய்ததால் அவனது மாமனார் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. கணவன் மனைவி குழந்தை புஜ்ஜியுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு நாள் மதுவின் குடும்பத்துடன் பாரி மீண்டும் இணைவதற்கான ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது. பாரியின் மனைவி அம்மா வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக கொலை செய்யப்படுகிறாள். மதுவின் சடலத்துக்கு அருகே மற்றொரு ஆண் சடலமும் இருக்கிறது. இதனால் அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பாரி மீது இருந்த வெறுப்பில் பழி வாங்க இந்த வழக்கை கள்ளக்காதல் என்று சித்தரித்து வழக்கு பதிவு செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் பாரி அந்த இன்ஸ்பெக்டரின் கைகளை உடைத்து விடுகிறார். உயர் அதிகாரியை தாக்கிய வழக்கில் பாரி பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பின்னர் உண்மையை உணர்ந்து மீண்டும் பாரியை வேலைக்கு சேர்த்து கொண்டு, அவரின் மனைவியின் வழக்கை விசாரிக்க சொல்கிறார்கள். பிறகு மீண்டும் வேலைக்கு சென்று தன் மனைவியின் மரணத்திற்கான உண்மை காரணத்தை தேடி வழக்கை விசாரிக்கிறார். அதே சமயம் தன் மனைவியின் மீதான களங்கத்தை துடைக்க வேண்டும் என்று படாத பாடுபடுகிறார் பாரி. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாரியை ஆழமாக காயப்படுத்துகிறது. பின்னர் கொலைக்கான காரணத்தை பாரி கண்டுபிடித்தாரா? இல்லையா? மதுவின் கொலைக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் 25 வருடங்கள் தன்னம்பிக்கை மட்டுமே மூலதனம் கொண்ட அருண்விஜய் ஒரு நேர்மையான எஸ்ஐ பாரி வெங்கட் கதாபாத்திரத்தில் படத்தைத் தன் தோளில் சுமந்துகொண்டு சண்டை காட்சி, கணவன் – மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு, குழந்தை மீதான பாசம் என எல்லாவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி அனைவரும் ரசிக்கும் விதமாக அருண் விஜய் சிறப்பாக செய்துள்ளார்.  எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத கொலை வழக்கில் தன் சாமர்த்தியத்தால் சாதுர்யமாக செயல்பட்டு குற்றவாளிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பாலக் லால்வானிக்கு பங்கு பெரிய அளவில் கதையில் இடம் இல்லை என்றாலும் திரைக்கதைக்கு முக்கிய அம்சமாக இருந்து அதற்கு ஏற்றவாறு தன் பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார்.

படத்துக்கு படம் கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி திறம்பட நடித்துள்ளார் காளிவெங்கட்.

4 – 5 காட்சிகளிலேயே வந்தாலும் சித்து சங்கர் – நேர்மையற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இடைவெளி வரை ஆளுமை செய்கிறார். இவருக்கு சிறப்பான எதிர்கலாம்  உண்டு.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு, ராஜா முகமது படத்தொகுப்பு, மற்றும் சபீர் பின்னணி இசை இரவு நேர காட்சிகளில் திரில்லிங் உணர்வை கொடுத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பை கவனிக்க வைக்கிறது.

யதார்த்தமான ஒரு கதைக் களத்துடன் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள் குறிப்பாக பாலியல் வன்கொடுமை பற்றி திரைக்கதை அமைத்து மக்கள் தவறுகளை கடந்து செல்ல கூடாது, சினம் கொள்ள வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். அரசு முயற்சியால் மட்டும் தவறை சரி செய்ய முடியாது என்ற வலுவான செய்தியை ஆணித்தரமாக  இறுதிக் காட்சியில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன்.

மொத்தத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் விஜயகுமார் தயாரித்திருக்கும் சினம் அனைவருக்கும் முக்கியமாக பெண்களுக்கு முன்னெச்சரிக்கை தரும் எமோஷனல் த்ரில்லர்.