குழலி திரைவிமர்சனம் : குழலி இன்றும் சமூகத்தில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளை காதலுடன் யதார்த்தமாக சொல்ல முயல்கிறது| ரேட்டிங்: 2.5/5

0
315

குழலி திரைவிமர்சனம் : குழலி இன்றும் சமூகத்தில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளை காதலுடன் யதார்த்தமாக சொல்ல முயல்கிறது | ரேட்டிங்: 2.5/5

முக்குழி அம்மன் பிலிம்ஸ் சார்பில் கே பி வேலு, எஸ் ஜெயராமன், எம் எஸ் ராமச்சந்திரன் தயாரிப்பில் இயக்குனர் சேரா கலையரசன் இயக்கத்தில் விக்னேஷ் மற்றும் ஆரா நடிப்பில் சர்வதேச விருது பெற்ற திரைப்படம் குழலி. இவர்களுடன் மஹா, ஷாலினி, செந்திகுமாரி, அலெக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
இசை : டி எம் உதயகுமார்
ஒளிப்பதிவு : சமீர்
தொகுப்பு : தியாகு
கலை: எம் பாபு, பிரபாகரன்
சண்டை பயிற்சி : தமிழ்
நடனம் : ஸ்ரீ சங்கர்
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, தனிக்கொட்டி, ராஜகுருசாமி, ஆக்னஸ் தமிழ்செல்வன்
ஸ்டில்ஸ் : மணியன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்
சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் காக்காமுட்டை விக்னேஷ் நாயகி ஆரா ஆகிய இருவரும் ஒரேவகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஒரு பெண்ணை உயர் சாதி நபர் ஒருவர் காதல் என்ற பெயரில் கர்ப்பமாக்கி அவளை ஏமாற்றி விடுகிறார். இந்த காதலை ஏற்காத அந்த உயர் சாதி வகுப்பினர் சம்மந்தப்பட்ட பெண்ணின் தந்தையை நாயை விட்டு கடிக்கவைத்து அவமானப்படுத்தி விடுகின்றனர். இதனை தாழ்த்தப்பட்ட வகுப்பில் நல்ல நிலைமையில் இருக்கும் விக்னேஷின் தந்தை எதிர்த்து கேட்காததால் அச்சமுகத்தை சார்ந்தவர்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனிடையே வெவ்வேறு சாதியைச் சேர்ந்த விக்னேஷும் ‌‌‌‌ஆராவும்  காதலிக்கிறார்கள். இதை பற்றி தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள இளைஞனுக்கு தெரிய வருகிறது. அந்த இருவரின் காதலை எப்படியாவது ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர் பெண்ணுக்கு சம்பந்தப்பட்டவரிடம் இதுபற்றி முறையிடுகிறார்.இந்த விஷயம் பெண் வீட்டிற்கு தெரிந்ததும்,  கோபத்தில் வழக்கமான மேல் சாதி பிரச்சினை எடுக்கிறார்கள். இந்த இருவரின் காதல் என்ன ஆனது? சாதிய பாகுபாட்டில் இருந்து இவர்கள் மீண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களில் அண்ணனாக நடித்த விக்னேஷ் குழலி திரைப்படம் மூலம் ஹீரோவாக விடலைப் பருவத்துக்குரிய கதாபாத்திரத்தில் இனம்புரியாத பள்ளிப் பருவ காதலை யதார்த்தமான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆரா நேர்த்தியான தோற்றத்துடன் மட்டுமல்ல பட்டென்று பேசும் சுதந்திரப்பெண்ணாக வலம் வந்து அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சாதி வெறியால் க்ளைமேக்ஸில் அவருடைய முடிவு அனைவருடைய நெஞ்சை பதற வைக்கிறது.
நாயகியின் அம்மாவாக வரும் செந்திகுமாரி, சாதியப் பெருமிதம் பேசும் இறுதிக்காட்சியில் செய்யும் செயல் யாரும் எதிர்பாராதது.
மஹா, ஷாலினி, அலெக்ஸ் உள்ளிட்ட அனைவரும் அவர்களின் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
கிராமத்து பின்னணியை அழகாக காட்சிப்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களிடம் உள்ள உணர்வை யதார்த்தமாக அப்படியே நம் கண்முன் நடக்கும் காட்சிகளாகப் தெரிகிறது சமீரின் ஒளிப்பதிவு.
கார்த்திக் நேதா, தனிக்கொட்டி, ராஜகுருசாமி, ஆக்னஸ் தமிழ்செல்வன் ஆகியோர் எழுதிய பாடல் வரிகளை டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரசிக்கலாம். சிறந்த பின்னணி இசைக்கு பாராட்டுக்கள்.
தமிழ் சினிமாவில் காலங்காலமாக, சமூகத்தின் கடுமையான யதார்த்தங்களை சித்தரிக்கும் படங்கள் பெரும்பாலும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த பட்டியலில் சேருவது குழலி, வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே விரும்பும் ஒரு இளம் பெண்ணின் போராட்டங்களை ஆராயும் திரைப்படம் – சமூகத்தில் பெண்களுக்கு கல்வி கற்பதன் மதிப்பை மற்றும் ஒரு முழு குடும்பமும் தங்கள் பெண்ணைப் படிக்க வைப்பதற்கு எப்படிப் பல போராட்டங்களை சந்திக்கிறது என்பது போன்ற ஒரு சிக்கலை மையப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. ஆனால் கல்வி மற்றும் காதல் இரண்டையும் கலந்து குழப்பமான திரைக்கதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சேரா.கலையரசன். இந்தப் படம் எதை குறிக்கோளாக வைத்து எடுக்கப்படுகிறது என்பதை மறந்து தெளிவாக சொல்லாமல் சாதி மேல் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார்.  அதுமட்டுமின்றி முதலில் காதல் மையப்படுத்தி தொடங்கும் திரைக்கதை இறுதிக் காட்சியில் திடீரென்று படிப்பை முன்னிறுத்தி முடிக்கப்பட்ட விதம் அதிருப்தி தான்.
மொத்தத்தில் முக்குழி அம்மன் பிலிம்ஸ் சார்பில் கே பி வேலு, எஸ் ஜெயராமன், எம் எஸ் ராமச்சந்திரன் தயாரிப்பில் குழலி இன்றும் சமூகத்தில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளை காதலுடன் யதார்த்தமாக சொல்ல முயல்கிறது.