குயிலி சினிமா விமர்சனம் : குயிலி சமூக அக்கறை உள்ள போராளி | ரேட்டிங்: 3/5
நடிகர்கள்: லிஸி ஆண்டனி, தஷ்மிகா லெக்ஷ்மண், புதுப்பேட் சுரேஷ், ரவிஜா, அருண்குமார், சரண் பாஸ்கர், இயக்குனர் முருகசாமி மற்றும் பலர்.
படக்குழுவினர்:
இயக்கம்: முருகசாமி
தயாரிப்பு நிறுவனம் : பிஎம் பிலிம் இன்டர்நேஷனல்
தயாரிப்பாளர்: விவி அருண்குமார்
ஒளிப்பதிவு: ப்ரவீன்ராஜ்
இசை: ஜோ ஸ்மித்
படத்தொகுப்பு: ராஜேஷ் கண்ணா
ஸ்டண்ட் மாஸ்டர்- மிரட்டல் செல்வா
கோவை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் மதுப்பழக்கத்தினால் சிறு வயதிலேயே தந்தையை இழந்த குயிலி (பருவ வயது கதாபாத்திரத்தில் தஷ்மிகா). பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓவியர் ரவிஜா இந்த கிராமத்தில் மதுப்பழக்கம் இல்லாத நபர் குயிலி மீது காதல் வயப்படுகிறார். அந்த கிராமத்தில் சுந்திரமூர்த்தி என்பவர் சாராயம் காய்ச்சி ஊரில் உள்ள அனைத்து ஆண்களுக்கு முதலில் சாராயத்தை இலவசமாக கொடுத்து நாளடைவில் அவர்கள் அனைவரையும் குடிக்கு அடிமையாக்கி விடுகிறார். பின் போலீஸ் மற்றும் அரசியல்வாதி உதவியுடன் அங்கு சாராய பேக்டரி நடத்துகிறார். ரவிஜாவுக்கு மதுப்பழக்கம் இல்லாததால் குயிலியும் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களது வாழ்க்கை ஒரு ஆண் குழந்தையுடன் ஆனந்தமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெக்னாலஜி வளர்ச்சியால் ஓவியம் வரைதல் வேலைக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. . செங்கல் சூளையில் தின கூலி வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார். வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டு காலில் காயம் அடைந்து துடித்துக் கொண்டிருக்கும் போது வலி தெரியாமல் இருக்க மாமன் அவரை மது அருந்த வைக்கிறார். நாளடைவில் ரவிஜா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார். இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை வெடிக்கிறது. வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமை ஆகிய ரவிஜா மதுக்கடையில் குடிக்கும் போது நடக்கும் அடிதடியில் ரவிஜாவும் அவரது தந்தையும் கொல்லப்படுகிறார்கள். சாராயத்துக்கு அடிமையாகி பெண்கள் தாலி இழந்ததற்கு சுந்தரமூர்த்தி தான் காரணம் என்று ஒட்டு மொத்த கோபத்தை அவர் மீது காட்டி அவருடைய சாராய கடையை எரித்து விடுகிறார் குயிலி. தனது குழந்தையோடு தனி மரமாக நின்று தினக்கூலி வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். காலம் உருண்டோட, (தஷ்மிகா) லிசி ஆண்டனி ஆக மாறி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று குரல் கொடுத்து போராடி வருகிறார். இந்நிலையில் லிசி ஆண்டனியின் மகன் கலெக்டராகி, மதுபான ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தியின் மகளை மணக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் அம்மா லிசி ஆண்டனி மகன் மீதும், சுந்தரமூர்த்தி மீதும் கடுமையான கோபத்தில் ஒரு விபரீத முடிவு எடுக்கிறார். அதன் விளைவு என்ன என்பதே பரபரப்பான மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியில் குயிலியாக வரும் தஷ்மிகா ஒரு கிராமத்து பெண்ணின் எதார்த்தமான வாழ்வியலை காதல், திருமணம், குடும்பம் என தனது கதாபாத்திரத்தில் அழகாக சித்திரித்துள்ளார்.
பிற்பாதியில் குயிலியாக வரும் லிசி ஆண்டனி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு ஒரு லட்சிய போராட்டக்காரராக தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான நடிப்பு தந்து திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்.
புதுப்பேட்டை சுரேஷ், ரவிஜா, அருண்குமார், சரண் பாஸ்கர், படத்தின் இயக்குனர் முருகசாமி உட்பட அனைவரும் யதார்த்த நடிப்பு வழங்கியுள்ளனர்.
பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு, ஜோ ஸ்மித்தின் இசை மற்றும் பின்னணி இசை மற்றும் ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பு படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.
தமிழ் சினிமாவில் சமூக அக்கறையை மனதில் கொண்டு வரும் கதைகள் குறைந்து காணப்படும் இந்த நேரத்தில், மது போதைக்கு ஒருவர் அடிமையானால், அவர்களது குடும்பம் எப்படி எல்லாம் சீரழிந்து போகிறது என்பதை காதல், குடும்பம், அரசியல் என திரைக்கதை அமைத்து இருந்தாலும் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம் இயக்குனர் முருகசாமி.
மொத்தத்தில் பிஎம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விவி அருண்குமார் தயாரித்திருக்கும் குயிலி சமூக அக்கறை உள்ள போராளி.