குட் நைட் விமர்சனம் : குட் நைட் திரைக்கதையில் வசீகரிக்கும் அனைவரையும் மீண்டும் பார்க்க தூண்டும் | ரேட்டிங்: 3/5

0
349

குட் நைட் விமர்சனம் : குட் நைட் திரைக்கதையில் வசீகரிக்கும் அனைவரையும் மீண்டும் பார்க்க தூண்டும் | ரேட்டிங்: 3/5

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,எம்.ஆர்.பி.என்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிப்பில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் ரெபேக்கா, ஸ்ரீ ஆர்த்தி, பக்ஸ், கௌசல்யா நடராஜன், ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சக்தி பிலிம் பேக்டரி  வெளியீட்டில் வந்துள்ள குட் நைட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விநாயக் சந்திரசேகரன். இசை–ஷான்; ரோல்டன், ஒளிப்பதிவு-ஜெயந்த் சேது மாதவன், படத்தொகுப்பு-பரத் விக்ரமன், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

குறட்டை பிரச்சினையால் போராடி வரும்; கதாநாயகன் மோகன் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். மிகவும் சாதாரணமான வாழ்க்கை என்றாலும் அவனது குறட்டை தான்; மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து அலுவலகத்தில் ‘மோட்டார்’ மோகன் என்று அழைக்கப்படும் அளவிற்கு பாதிக்கப்படுகிறார். மோகன் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசிக்கிறார். மூத்த சகோதரிக்கு திருமணமாகி அவரது கணவரும் (ரமேஷ் திலக்) அவர்களுடன் இருக்கிறார். மோகன் தற்செயலாக அனுவை (மீதா ரகுநாத்) சந்திக்க அவர்களுக்கிடையே மிகவும் அசாதாரணமான முறையில் காதல் மலர்கிறது, மேலும் அது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தின் தொடக்கத்தையும் ஏற்படத்த காரணமாகிறது. மோகனுக்கும் அனுவுக்கும் திருமணமானவுடன்; சிறிய குறட்டை பிரச்சினை அவர்களின் வாழ்க்கையில் பெரிய விரிசலை உருவாக்க காரணமாகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்கள். இவர்களின் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? இவர்கள் நிம்மதியாக ஒன்றாக வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோட்டார் மோகனாக மணிகண்டன் குறட்டையால் அவதிப்படும் இடங்களும், தீர்க்க முடியாத பிரச்சனையால் மனஉளைச்சல் ஏற்படுவதும், காதல் மனைவி துன்பப்படுவதை அறிந்து அழுவதும், கோபப்படுவதும் படத்தின் காட்சிகளை உள்வாங்கி இயல்பாக நடித்து முத்திரை பதித்துள்ளார்.

மனைவி அனுவாக மீத்தா ரகுநாத் சாந்தம் நிறைந்த பெண்ணாக,சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரத்தில் மனதில் நிற்கிறார்.அக்கா கணவராக ரமேஷ் திலக், வீட்டு உரிமையாளராக பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் ரெபேக்கா, ஸ்ரீ ஆர்த்தி, பக்ஸ், கௌசல்யா நடராஜன், ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பலர் படத்திற்கு பக்கபலம்.

ஷான் ரோல்டனின் இசையும், பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவால் அனைத்து காட்சிகளையும் திறம்பட கொடுத்துள்ளார்.

படத்தொகுப்பு – பரத் விக்ரமன் கச்சிதம்.

அறிமுகம இயக்குனர் விநாயக் சந்திரசேகரனின் குட் நைட், ஒரு இளைஞனின் குறட்டை பிரச்சனைகளைப் பற்றிய் படம். இப்பொழுது சரித்திரகால கதைகள், பான் இந்திய படங்கள் என்று டிரெண்டிங்கில் போய் கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் சாமனியமாக சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி வரும் படங்கள் குறைவானதாக உள்ளது. இந்த நேரத்தில் குட் நைட் படம் அன்றாடம் நாம் அனுபவிக்கும் குறட்டையை மையமாக வைத்து அதில் குடும்பம், காதல், திருமணம், காமெடி என்று வேடிக்கையுடன், யதார்த்தமாக தொடர்புபடுத்தி அசத்தலாக அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகர். நேர்த்தியான நடிப்பு, கதாபாத்திர தேர்வு, குடும்ப பின்னணியோடு குறட்டையை மையப்படுத்தி சந்திக்கும் பிரச்சனைகள், அவமானங்கள், கேலி, கிண்டல்கள் என்று ஒரு முழு படத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் தந்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

மொத்தத்தில் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,எம்.ஆர்.பி.என்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி  வெளியீட்டில் வந்துள்ள குட் நைட் திரைக்கதையில் வசீகரிக்கும் அனைவரையும் மீண்டும் பார்க்க தூண்டும்.