கிடா சினிமா விமர்சனம் : கிடா அனைவரின் மனதையும் தொடும்  உணர்வு பூர்வமான படம் | ரேட்டிங்: 3.5/5

0
232

கிடா சினிமா விமர்சனம் : கிடா அனைவரின் மனதையும் தொடும்  உணர்வு பூர்வமான படம் | ரேட்டிங்: 3.5/5

ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
 இப்படத்தில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜா, கருப்பு, ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-எம்.ஜெயப்பிரகாஷ், இசை-தீசன், எடிட்டர்-ஆனந்த் ஜெரால்டின், பாடல்கள்- ஏகாதசி, கலை-கே.பி.நந்து, சண்டை-ஒம் பிரகாஷ், பிஆர்ஒ- ஏய்;ம் சதீஷ்.
மதுரை மாநகரின் ஒட்டு மொத்த ஊரும் அடுத்த நாள் தீபாவளி கொண்டாட்டங்களுக்காக  தயாராகிக் கொண்டிருக்க,  ஊருக்கு வெளிப்புறம் இருக்கும்  ஒரு சிறு கிராமத்தில், பெற்றோர் விபத்தில் உயிரிழக்க, பேரனை அரவணைப்புடன் பார்த்துக் கொள்கிறார் செல்லையா (பூ ராமு). வயது முதிர்வு காரணமாக உரிய வேலை கிடைக்காமல் வறுமையில் துவண்டு கொண்டிருக்கும் தாத்தாவிடம் பேரன் கதிர் (மாஸ்டர் தீபன்) தீபாவளிக்கு துணி எடுத்து தர சொல்லி கேட்கிறான். தாத்தாவுக்கு தன் பேரன் ஆசையாக கேட்ட ஆடையை வாங்கி கொடுப்பதற்கு அவன் ஆசையோடு வளர்த்த ”கிடா”-வை விற்கத் துணிந்தும், அதை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன ஆள் இன்னும் வரவில்லையே என்ற பதட்டம். மறுபுறம் பேரனுக்கு தான் ஆசைப்பட்டு கேட்ட ஆடைக்காக தான் ஆசை ஆசையாக வளர்த்த கிடாவை நம்மிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என்ற பதட்டம். இவர்கள் இருவரின் பதட்டம் இதுவென்றால், கறி கடையில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமி (காளிவெங்கட்), அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு வருகின்ற காரணத்தால், தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது கடையை விட்டு அனுப்பிய தன் முதலாளி மகனுக்கு எதிராக தீபாவளி அன்றே போட்டிக்கு கடை போடுகிறேன் என்று சவால் விட்டு, அதற்கான கிடா’வை தேடி அலைந்த அவனுக்கு, கையில் பணம் இல்லாத காரணத்தால் கடை போடுவதற்கு கிடைத்த ”கிடா” அந்த பெரியவரின் பேரன் ஆசையாக வளர்த்த அந்த ஒற்றை ”கிடா”. கடைசியில் ஒற்றை கிடாவை வைத்தாவது கடை போடுவோம் என்று பணத்தை திரட்டிக் கொண்டு கிடாவை கொண்டு செல்ல வரும்போது வேறொரு கும்பல் அந்த கிடாவை களவாடி செல்கிறது. உடனே அனைவரும் திருட்டு கும்பலை துரத்தி செல்கின்றனர். இறுதியில் கிடா கிடைத்ததா, இல்லையா? பேரனுக்கு தாத்தா துணி எடுத்து கொடுத்தாரா? வெள்ளைச்சாமி சவாலில் ஜெயித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயலாமை, சோகம், வலி, அவமானங்களை என அனைத்தையும் சுமந்து பேரனுக்காக துணி வாங்க போராடும் தாத்தா செல்லையாவாக ‘பூ’ ராமு படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவர் உடல்மொழியில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
 செல்லையாவின் மனைவியாகவும் பேரனின் பாட்டியாகவும் மீனம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டி அம்மாவும் அற்புதமான நடிப்பு வழங்கி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ‘பூ’ ராமு மற்றும் பாண்டி அம்மாவும் பல காட்சிகளில் இருவரும் எமோஷனல் காட்சிகள் நம்மை கண்கலங்க வைத்து விடுகிறார்கள்.
குடிகாரராகவும் கசாப்பு கடையில் கறி வெட்டும் வெள்ளைச்சாமியாக வரும் காளி வெங்கட் கலக்கியுள்ளார்.
பேரன் கதிராக நடித்திருக்கும் மாஸ்டர் தீபன், டீக்கடைக்காரன் பாண்டி கதாபாத்திரத்தில் வரும் கருப்பு, காளி வெங்கட் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார்கள்.
எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு, தீசனின் இசை மற்றும் பின்னணி இசை, ஏகாதசியின் பாடல் வரிகள், ஆனந்த் ஜெபாஸ்டின்னின் படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு உணர்வுபூர்வமான திரைக்கதைக்கு உயிர் கொடுத்து மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
தீபாவளிக்கு விடியும் போது தங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மூன்று கதாபாத்திரங்கள் சுற்றி வருகிறது – ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் அவரது செல்ல ஆடு மற்றும் ஒரு கசாப்புக் கடை தொழிலாளி. இப்படி மூன்று விதமான கதாபாத்திரத்திற்கும் மூன்றுவிதமான தேவை இருக்கிறது. முக்கோணத்தில் சுழலும் கதையில் எமோஷனல், பாசம், மனிதம், போராட்டம், இயலாமை, சோகம், வலி, அவமானம், காதல், மற்றும் காமெடி என அனைத்தையும், ஒரு சிறுவனுக்கும் அவனது தாத்தா மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பில் கச்சிதமாக புகுத்தி முதல் படத்திலேயே நேர்த்தியாக படைத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் ரா.வெங்கட். அத்துடன் உணர்வு பூர்வமான படைப்புகளை படைத்த சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் இயக்குனர் ரா.வெங்கட்.
மொத்தத்தில் ஸ்ரீஸ்ரவந்தி மூவீஸ் தயாரித்திருக்கும் கிடா அனைவரின் மனதையும் தொடும்  உணர்வு பூர்வமான படம்.