காதல் என்பது பொதுவுடமை சினிமா விமர்சனம் : காதல் என்பது பொதுவுடைமை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ள ஆபாசமற்ற ஒரே பாலின உறவு | ரேட்டிங்: 3/5

0
677

காதல் என்பது பொதுவுடமை சினிமா விமர்சனம் : காதல் என்பது பொதுவுடைமை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ள ஆபாசமற்ற ஒரே பாலின உறவு | ரேட்டிங்: 3/5

நடிகர்கள் : லிஜோமோல், வினித், ரோகிணி, காலேஷ் ராமானந்த், தீபா, அனுஷா பிரபு.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
ஒளிப்பதிவு : ஸ்ரீசரவணன்​
இசை : கண்ணன் நாராயணன்
எடிட்டிங் : டேனி சார்லஸ்
கலை : ஆறுசாமி
பாடல் : உமாதேவி
தயாரிப்பு : ஜியோ பேபி, மேன்கைண்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், மற்றும் நித்திஸ் புரொடக்ஷன்
வெளியிடுபவர் : BOFTA G.தனஞ்ஜெயன்
இயக்கம் : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
பத்திரிக்கை தொடர்பு : குணா

சாம் (லிஜோமோல்) தனது காதலை தனது தாய் லட்சுமியிடம் (ரோகிணி) வெளிப்படுத்துகிறாள், லட்சுமி உற்சாகமாக ஆதரித்து காதலனை வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறுகிறாள். தன் மகளின் காதலனை சந்திக்க லட்சுமி (ரோகினி) ஆவலாக இருக்கிறாள். சாம் குழந்தையாக இருந்தபோது குடும்பத்திலிருந்து பிரிந்திருந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வரும் தன் கணவர் தேவராஜை (வினீத்) சாமின் காதலனை பார்ப்பதற்கு மதிய உணவிற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். சாமின் நண்பர் ரவீந்திரன் (காலேஷ் ராமானந்த்) நந்தினி (அனுஷா பிரபு) என்ற பெண்ணுடன் வரும்போது, சாம் திருமணம் செய்து கொள்ள விரும்புவது ரவீந்திரனைத்தான் என்று எல்லோரும் கருதுகிறார்கள். ஆனால் சாம் தான் நந்தினியைக் காதலிப்பதாக வெளிப்படுத்துகிறாள், இதனால் அவளுடைய தாயார் அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். லட்சுமி நந்தினியை உடனடியாக வெளியேற சொல்கிறாள், இது லட்சுமியினுடைய பாரம்பரிய  எதிர்பார்ப்புகளுக்கு சவாலாக அமைகிறது. சாம் மற்றும் நந்தினியின் காதலைப் புரிந்து கொள்ள லட்சுமியும் தேவராஜும் போராடுகிறார்கள், மேலும் அவர்களின் பாலியல் தன்மைக்காக அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். படத்தின் மீதமுள்ள பகுதி பெற்றோர்கள் அவர்களைப் பிரிக்க முயற்சிப்பது, பாலியல் பற்றிய கடுமையான வசனங்கள், ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களை சுற்றியுள்ள சமூகத் எதிர்ப்புகள் மற்றும் சாம் நந்தினி மீதான தனது உணர்வுகளுக்கும் உண்மையாக இருக்க முயற்சிப்பதும், மற்றும் அவர்களின் சொந்த மன அதிர்ச்சிகளுக்கு இடையில் போராடுவதுமாக படத்தின் மீதிக்கதை விரிவடைகிறது.

லிஜோமோல், ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் அழகாக கட்டுப்படுத்தப்பட்ட நடிப்புடன், அவர் உடல் மொழி மூலம் வலுவான உணர்ச்சிகளை கச்சிதமாக வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

காதலி நந்தினியாக அனுஷா பிரபுவின் எளிமையான நடிப்பு அமைதியான உணர்ச்சித் தீவிரத்தை சேர்க்கிறது. லிஜோமோல் மற்றும் அனுஷா பிரபு இருவரின் முகபாவனைகளிலும் ஏற்படும் எளிய மாற்றங்கள் அவர்களின் உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்துகின்றன.

ரோகிணி, முற்றிலும் மாறுபட்ட நாயகிக்கு இணையான அம்மா கதாபாத்திரத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மேலும், முற்போக்கு சிந்தனை உடைய அம்மாவாக இருந்தாலும், தன் குடும்பத்தில் தனது மகளின் மூலம் வரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு முக்கிய ப்ரச்சனையை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாத அம்மாவின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறார்.

சாம் மற்றும் நந்தினியின் நண்பன் ரவீந்திரனாக காலேஷ் ராமானந்த் தனது கதாபாத்திரத்தின் இருப்பை நன்றாக பதிவு செய்துள்ளார்.

தந்தையாக, பதற்றத்தைத் தணிக்க அடிக்கடி புகைபிடிக்கும் வினீத், தனது மகளின் லெஸ்பியன் உறவை முறிக்கும் முயற்சியில் தோல்வி அடைகிறார், ஆனால் அவர் கதாபாத்திரத்தில் ஈர்க்கக்கூடிய நடிப்பை வெளிப்படுத்த வில்லை.

வீட்டு வேலைக்காரி மேரியாக தீபா மிகைப்படுத்தாத நடிப்பை தந்துள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன், இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், படத்தொகுப்பாளர் டேனி சார்லஸ் ஆகியோரின் பணி கதையை உண்மையானதாகவும் தொடர்புபடுத்தக் கூடியதாகவும் வைத்திருக்கிறது.

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், மன ஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய காதல் குறித்து பேசுகிறது. இரண்டு பெண்களுக்கு இடையிலான உணர்வுகளையும் காதலையும் சமூகம் பார்க்கும் விதம் குறித்தும், மனிதர்களுக்குள் நவீன பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் எழுதி திரைக்கதை அமைத்து எந்த ஒரு விரசம் இல்லாமல் இயக்கி உள்ளார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் ஜியோ பேபிஇ மேன்கைண்ட் சினிமாஸ்இ சிமெட்ரி சினிமாஸ்இ மற்றும் நித்திஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள காதல் என்பது பொதுவுடைமை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ள ஆபாசமற்ற ஒரே பாலின உறவு.