கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் : கழுவேத்தி மூர்க்கன் ஜாதி அரசியலுக்கு எதிராக களமிறங்கும் கழுகு பார்வை கொண்ட அரக்கன் | ரேட்டிங்: 4/5

0
683

கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம் : கழுவேத்தி மூர்க்கன் ஜாதி அரசியலுக்கு எதிராக களமிறங்கும் கழுகு பார்வை கொண்ட அரக்கன் | ரேட்டிங்: 4/5

அருள்நிதி நடிப்பில் இயக்குநர் SY.கௌதமராஜ் இயக்கியுள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இதில் துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோகித்சவா, ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன், ஜக்குபாண்டி. மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு AIM.

சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இரு நண்பர்களின் வாழ்க்கையை சூழ்நிலைகள் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. ஜாதியால் பிளவுபட்டு, பள்ளி நாட்களில் உருவான நட்பால் பிணைக்கப்பட்ட இரண்டு இளைஞர்களான மூர்க்கனும் (அருள்நிதி நடித்தார்), பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் உயிர் நண்பர்கள். சாதியின் கோரங்களை விளங்கிக் கொண்டு அதிலிருந்து தனது மக்களை வெளியில் கொண்டுவர அமைதியாகவும் பொறுப்பாகவும் செயல் படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூமிநாதனுக்கு ஆதரவாக நின்று சொந்த சாதியினரையே எதிர்த்து எந்த ஒரு சூழ்நிலையிலும் நண்பனை காப்பாற்றுகிறான், உயர்சாதி என சொல்லப்படும் பிரிவைச் சேர்ந்த முரட்டுத்தனமாக இருக்கும் மூர்க்கசாமி என்னும் மூர்க்கன் (அருள்நிதி). இருப்பினும், ஒரு அரசியல் கட்சி சாதி அடிப்படையிலான கூட்டங்கள் மற்றும் பிரச்சாரத்தின் மூலம் கிராமத்தில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது. அரசியல் கட்சியைச் சேர்ந்த முனியராஜ் (ராஜசிம்மன்) எப்படியாவது தேர்தலில் போட்டியிட தனது தலைமையிடமிருந்து சீட் பெற சாதி பலத்தைப் பயன்படுத்த நினைக்கிறார். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமிநாதன் கொல்லப்படுகிறார். கொலை பழி மூர்க்கன் மீது விழுகிறது. போலீஸ் மூர்க்கனை தேடுகிறது. மூர்க்கனும் தான்தான் கொலை செய்ததாக எண்ணிய நிலையில்; ஆபத்துக் காலங்களில்  அவருக்கு உதவி செய்யும் தாய்மாமன் உண்மை (முனிஷ் காந்த் ராமதாஸ்) பூமிநாதனை பற்றிய ஒரு செய்தியை கூறும் போதும் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. பூமிநாதனை பற்றி உண்மை கூறியது என்ன? பூமிநாதனை கொலை செய்தது மூர்க்கன் தானா? மூர்க்கனை போலீஸ் பிடித்ததா? என்பதே கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் மீதிக்கதை.

கோபமான இளைஞனாக வேட்டியும், கம்பீரமான மீசையும் கொண்ட ஆறடி தோற்றத்தில் வெறித்தனமான உடல்மொழியில் மூர்க்கசாமி என்னும் மூர்க்கனாக அருள்நிதி அதிரடியாக மிரட்டும் முற்றிலும் மாறுபட்ட அவரது கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை அளித்து தனது பலத்திற்கு ஏற்றவாறு அற்புதமாக நடித்துள்ளார். மேலும், அவரது தனித்துவமான ஸ்கிரிப்ட் தேர்வு பாராட்டத்தக்கது. மூர்க்கன் அவரது குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் ஒன்றாக என்றும் குறிப்பிடப்படும்.  வெள்ளை வேட்டியில் கண்களைச் சுருக்கிப் பார்த்த பார்வையிலும், சிலிர்ப்பான ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பும் அருள் காதலில் கவிழும் காட்சிகளில் அசத்திவிட்டார்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இழிநிலையில் வாழும் தனது மக்கள் அதிலிருந்து முன்னேற வேண்டும். அதற்கு கல்வி அவசியம் என்பதை தனது மக்களுக்கு உணர்த்தி, கல்விக்காக வாதிடும் நற்பண்புடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக வரும் சந்தோஷ் பிரதாப், அருள்நிதிக்கு இணையான அமைதியான மற்றும் எதிர்ப்பு குணம் கொண்ட இளைஞராக பூமிநாதன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

வேட்டியும், கம்பீரமான மீசையுடன் ஆறடி தோற்றத்தில் வலம் வரும் முரட்டு ஆளை (அருள்நிதி) மிரட்டும் காட்சிகளிலும், அவருடனான காதல் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்து ரசிக்க வைக்கிறார் துஷாரா விஜயன்.

ஒரு லோக்கல் அரசியல்வாதியாக சாதி வெறி பிடித்த மாவட்ட செயலாளர் கதாபாத்திரத்தில் ராஜசிம்மன், பதவி ஆசையும், சாதி வெறி பிடித்த மூர்க்கனின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, முரட்டு இன்ஸ்பெக்டராக பத்மன், சந்தோஷ் காதலியாக சாயாதேவி, ஜக்குபாண்டி மற்றும் சுப்ரமணியன் போன்ற நடிகர்களும் குறிப்பிடத்தக்க அந்தந்த கதாபாத்திரங்கள் மூலம் ஒவ்வெருவரும் தங்களது சிறந்த பங்களிப்புகளை வழங்கி ஈர்க்கப்பட்டு கவனம் பெறுகிறார்கள்.

கணேஷ் குமாரின் மிரட்டரான சண்டைப் பயிற்சி, கிரமத்தின் அழகை கண்முன் நிறுத்திய ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பு, டி இமானின் பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்கள் அழுத்தமான  திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

தனது முதல் படமான ராட்சசி படத்தின் மூலம் சாதிவெறிக்கு எதிராக தனது வலுவான கருத்துக்களை பதிவு செய்த இயக்குனர் கௌதமராஜ், நிஜ உலக அரசியலை நேரடியாக குறிப்பிடும் ஒரு அழுத்தமான சமூக பிரச்சனையை மீண்டும் கையாண்டுள்ளார். ஆரம்பத்திலேயே, பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குறிப்பிட்ட தண்டனை முறையைப் பற்றி விளக்கி அதை அதிரடியான திரைக்கதையின் மூலம் வழங்கியுள்ளார்.

மொத்தத்தில் ‘ஒலிம்பியா மூவீஸ்’ சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் ஜாதி அரசியலுக்கு எதிராக களமிறங்கும் கழுகு பார்வை கொண்ட அரக்கன்.