கபில் ரிட்டன்ஸ் விமர்சனம் : கபில் ரிட்டர்ன்ஸ் கனவு நிறைவேறுவதற்கு வயது தடையில்லை என்பதை அழுத்தமாக நிரூபிக்கும் பதிவு | ரேட்டிங்: 3/5
தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் கபில் ரிட்டர்ன்ஸ். நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி, மாஸ்டர் ஜான், வர்ஷா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஷியாம் ராஜ், இசை – ஆர்.எஸ்.பிரதாப் ராஜ், எடிட்டிங்-வில்சி, நடனம்-சங்கர், சண்டை பயிற்சி- குன்றத்தூர் பாபு , பாடல்கள்- பா.விஜய், சினேகன், அருண்பாரதி, பாடியவர்கள்- ஸ்ரீனிவாஸ், திவாகர், மானசி, நிர்வாக தயாரிப்பு- ஏ.ஆர்.சூரியன், மக்கள் தொடர்பு – வெங்கட்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்.
ஐடியில் வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கபில் (ஸ்ரீனி சவுந்தரராஜன்), தன் 14 வயது மகன் இன்ஜினியராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே போல் தன் மகன் டாக்டராக வேண்டும் என்று தாயும் கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து மொபைல் கேம்களில் மூழ்கி இருக்கும் பரத், கிரிக்கெட் வீரராக ஆசைப்படுகிறார். இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. தந்தை வேண்டாம் என்று மறுக்கிறார். தான் ஒரு கொலை குற்றவாளி என அடிக்கடி நினைத்து மனம் புழுங்கி மன உளைச்சலுக்கு ஆளாகியதே அதற்கு காரணம்;. இதை அறியும் மனைவி அதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து மீண்டு வர அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தன் கணவனை ஒரு கொலை குற்ற உணர்விலிருந்து மீட்டெடுக்கிறார். கொலை குற்ற உணர்விலிருந்து மீண்டு வந்த கபில் தன் மகனின் ஆசையை நிறைவேற்றும் வேலையில் ஈடுபடுகிறார். இந்த வேளையில் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. அந்த தேர்வில் கலந்து கொள்ளும் கபிலின் மகன் சரியாக பந்து வீசாததற்க்காக நிராகரிக்கப்படுகிறார். ஆனால், ஆடுகளத்தில் இருக்கும் குறைபாட்டினால் தான், வீரர்களால் சரியாக பந்து வீச முடியவில்லை என்று தேர்வுக் குழு தலைவர்களில் ஒருவரான ரியாஸ் கானிடம் வாதிடுகிறார். தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார். ஆனால், அவருடைய வாதத்தை தவறாக புரிந்து கொள்ளும் ரியாஸ் கான் முதலில் கோபப்பட்டு பின் அவரது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கபிலுக்கு ஒரு போட்டி வைக்கிறார். அது தான் கதையின் திருப்புமுனையாக அமைகிறது. அந்த போட்டி என்ன? இதில் கபில் சந்திக்கும் சவால்கள் என்ன? அந்த சவால்களை கபில் எப்படி முறியடித்து ஜெயிக்கிறார் என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீனி சௌந்தரராஜன், முதல் படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர முயற்சி செய்து இருக்கிறார்.
ஸ்ரீனி சௌந்தரராஜனின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா, இயல்பான நடிப்பை வழங்கி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நண்பனாகவும் ஆட்டோ ஓட்டுநராகவும் வரும் வையாபுரி, கிரிக்கெட் பயிற்சியாளராக வரும் ரியாஸ்கான், சிறு வயது கபிலின் வேடத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் கபிலின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான், பருத்தி வீரன் சரவணன், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி, வர்ஷா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
பா.விஜய் எழுதிய “தன்னைப்போலே ஒரு அன்பன், கண் இமை போலே தான் காத்திடும் நண்பன்’’, சினேகன் எழுதிய “வானம் இனி தூரம் இல்லை வாழ்க்கை இனி பாரமில்லை”, மற்றும் அருண்பாரதி எழுதிய ‘’என்னங்க என்னங்க எஜுகேஷன் எல்லாமே இங்க கன்ஃபியூஷன்’’ என்ற பாடல்களுக்கு ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் துள்ளலான இசை அமைத்துள்ளார்.
கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஷியாம் ராஜ் ஒளிப்பதிவு மற்றும் வில்சியின் படத்தொகுப்பு திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
தந்தை மகன் பாசத்தின் அடிப்படையில் அமைந்த கதைகளத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து முதல் படத்தை எளிய முறையில் படைத்துள்ளார் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்.
மொத்தத்தில் தனலட்சுமி கிரியேஷன்ஸ் கபில் ரிட்டர்ன்ஸ் கனவு நிறைவேறுவதற்கு வயது தடையில்லை என்பதை அழுத்தமாக நிரூபிக்கும் பதிவு.