கண்ணகி விமர்சனம் : கண்ணகி இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் | ரேட்டிங்: 3.5/5

0
488

கண்ணகி விமர்சனம் : கண்ணகி இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் | ரேட்டிங்: 3.5/5

ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இ ஃபைவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எம்.கணேஷ் மற்றும் ஜெ.தனுஷ் தயாரித்துள்ள கண்ணகி படத்தை அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார்.

இதில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை- ஷான் ரஹ்மான்,  ஒளிப்பதிவு -ராம்ஜி, எடிட்டர் -கே.சரத்குமார், பாடல்கள்-கார்த்திக் நேதா, கலை-குமார் கங்கப்பன், பின்னணி இசை- ஷான் ரஹ்மான் மற்றும் அரவிந்த் சுந்தர், ஒப்பனை- சண்முகம், நிர்வாக இயக்குனர்-எஸ்.வினோத்குமார், தயாரிப்பு நிர்வாகி –ஜி.கண்ணன், பிஆர்ஒ- ரியாஸ்

ஆதிக்கம் செலுத்தப் பட்ட சமூகத்தில், வெளிப்புற தாக்கங்களால் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது, மாறுகிறது என்பதுடன் ஒரே மாதிரியான கொள்கைகளிலிருந்து விடுபட்டு தங்களுக்கு பிடித்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்பும் நான்கு பெண்களின் கதை.

அந்த நான்கு கதாபாத்திரங்களின் கதை சுருக்கம் இதே…..

கலையின் கதை:
தனது ஒரே மகள் கலைக்கு (அம்மு அபிராமி) ஆதரவாக இருக்கும் அப்பா சங்கர் அய்யா (மயில்சாமி). தனது மகள் வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கருதும் அம்மா. நீண்ட நாட்களாக கலையை பல முறை மாப்பிள்ளைகள் வந்த பார்த்த போது அம்மா தனது மகளின் எதிர்காலத்தை கருதி ஏதேனும் காரணம் கூறி காலம் கடத்துகிறாள். இதனிடையில் தனக்கு ஆதரவாக இருந்த தந்தை இறந்து விட அந்த குடும்பமே மன வேதனைக்கு ஆளாகிறது. தனக்கு விரைவில் திருமணம் ஆகும் என்ற ஏக்கத்தில் இருக்கும் கலையின் கதை ஒருபக்கம்.

நேத்ராவின் கதை:
திருமணமான நேத்ரா (வித்யா பிரதீப்) இல்லற வாழ்வில் தன்னால் குழந்தை பெற்று தரமுடியாதவள் என்று கூறி தனது கணவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த விவாகரத்து வழக்கை எதிர்கிறாள். கணவர் மற்றும் மாமியார் தன் மீது அந்த குற்றம் சாட்டினாலும் தான் தன் கணவருடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். அதற்காக வழக்கறிஞர் சசியுடன் (வெற்றி) சேர்ந்து போராடுகிறாள். திருமண வாழ்க்கையை நம்பும் நேத்ரா ஒரு கட்டத்தில் நீதிமன்ற விசாரணையின் போது வாழ்வின் உண்மை தன்மையை புரிந்து விவாகரத்துக்கு ஒத்துக்கொள்ளும் கதை.

நதியின் கதை:

ஐடி கம்பெனியில் பணிபுரியும் நதி (ஷாலின் ஜோயா) திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் சுதந்திர வாழ்வு வாழ ஆசைப்படும் பெண். தன்னை போல் உள்ள எண்ணம் கொண்ட தனது பாய் பிரண்டு ஆதேஷ் சுதாகர் (அபிரூப்) உடன் லிவிங் டு கெதர் ரில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் தனது பாய் பிரண்டு ஆதேஷ் சுதாகர் அவளிடம் காதலை சொல்லும் போது. அவள் அந்த காதலை நிராகரித்து விடுகிறாள். இந்நிலையில் நதி ஏற்கனவே விவாகரத்து பெற்றவள் என்பதை பாய் பிரண்டுக்கு தெரியவர வாக்குவாதம் ஏற்பட்டு பிரிகிறார்கள்.

கீதாவின் கதை:
சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று போராடும் உதவி இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் திரையுலகில் பல தயாரிப்பாளர்கள் சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், தன்னுடன் உறவில் இருக்கும் கீதா (கீர்த்தி பாண்டியன்) கர்ப்பமாக இருப்பதை தெரியவருகிறது. கருவை கலைக்கும் கட்டத்தை தாண்டிய நிலையில் கீதாவும் யஷ்வந்த் கிஷோரும் எப்படியாவது கருவை கலைக்க வேண்டும் என்று இருவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். சீர்குலைத்து போகும் இந்த நான்கு பெண்களின் கதை ஒன்றோடொன்று எப்படி இணைக்கப்படுகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நான்கு பெண்களின் வெவ்வேறு பிரச்சினைகளை, இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் நடக்கும் உளவியல் மற்றும் உறவுச் சிக்கல்களை பேசும் ஹைபர்லிங் கதைகளத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு கடின உழைப்பு தந்து நான்கு பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

கோபமும், அக்கறையும் கொண்ட அம்மாவாக மௌனிகா, பாசமிகு தந்தையாக என்றும் அனைவரின் மனதில் நிற்கும் மறைந்த மயில்சாமி, பெண்களுக்கு நியாயம் கிடைக்க போராடும் வழக்கறிஞர் சசியாக வெற்றி, நதியின் பாய் பிரண்டு ஆதேஷ் சுதாகராக அபிரூப், மற்றும் உதவி இயக்குனராக யஷ்வந்த் கிஷோர் உட்பட அனைவரும் நடிப்பில் தங்களது பங்களிப்பை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான ஒளி கோர்வையை தந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ஷான் ரஹ்மான் இசை, ஷான் ரஹ்மான் மற்றும் அர்விந்த் சுந்தர் பின்னணி இசை திரைக்கதை ஒட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

நான்கு கதைகளும் கோர்வையாக நகரும் படி எடிட் செய்துள்ளார் எடிட்டர் கே.சரத்குமார்.

இன்றைய சமூகத்தில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் நடக்கும் உளவியல் மற்றும் உறவுச் சிக்கல்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், வலிகளும் மையப்படுத்தி  திரைக்கதை  அமைத்து எதார்த்தமான காட்சியமைப்போடு இயக்கி உள்ளார் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர்.

மொத்தத்தில் ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட், இ ஃபைவ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எம்.கணேஷ் மற்றும் ஜெ.தனுஷ் தயாரித்துள்ள கண்ணகி இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும்.