கட்டாகுஸ்தி விமர்சனம்: கட்டா குஸ்தி உங்கள் குடும்பத்துடன் ரசிக்க சரியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் | ரேட்டிங்: 4.5/5

0
483

கட்டாகுஸ்தி விமர்சனம்: கட்டா குஸ்தி உங்கள் குடும்பத்துடன் ரசிக்க சரியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் | ரேட்டிங்: 4.5/5

நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ‘ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. கதாநாயகனாக விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனீஸ்காந்த், கருணாஸ், கார்த்திக் சுப்புராஜின் தந்தையான கஜராஜ், காளி வெங்கட் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் : பிரசன்னா ஜி கே
கலை : உமேஷ்
ஆக்ஷன் : அன்பறிவு சகோதரர்கள்
இயக்கம் : செல்லா அய்யாவு
மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்

இந்தத் திரைப்படம் விளையாட்டுக் கருவைக் கொண்ட குடும்ப நட்பு நகைச்சுவை கலந்த படம்.
மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி) சிறுவயதிலிருந்தே மல்யுத்தத்தை விரும்பி தனது சித்தப்பாவுடன் (முனீஷ்காந்த்) சென்று மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொள்கிறார். அதன் விளைவாக இறுதியில் அவர் மாநில மல்யுத்த சாம்பியன்ஷிப்பை வெல்கிறார். கட்டா குஸ்தி போட்டியில் கலந்து பதக்கங்களை வெல்ல வேண்டும் என்கிற கனவை சுமந்து இருக்கும் அவருக்கு, அவள் ஒரு குஸ்தி வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைக்காமல் திணறி கொண்டிருக்கிறது கீர்த்தியின் குடும்பம். அதே நேரத்தில் வீட்டில் திருமண அழுத்தமும் அதிகரிக்கிறது. மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற மாயையில் அவளது தந்தைக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. கீர்த்தியின் பெற்றோர் அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். பிறகு அவள் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். அதோ போல், சிறுவயதிலேயே அப்பா அம்மாவை இழந்த வீராவுக்கு (விஷ்ணுவிஷால்) ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் கருணாஸும், அவர் சந்திக்கும் பிரச்னைகளும்தான் உலகம். அடிப்படையிலேயே பெண் என்பவள் ஆணுக்கு கீழ்தான், அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு இருக்கும் கருணாஸ், அதை வீராவுக்கும் அவ்வவ்போது புகுத்துகிறார். மாமாவோடு ஊர் சுற்றி வலம் வரும் வீரா அவ்வப்போது கபடி விளையாடுவார். இந்த நிலையில்தான் தனக்கு வரும் பெண் தன்னை விட அதிகம் படித்திருக்க கூடாது. முடி நீளமாக இருக்க வேண்டும் என பல கண்டிஷன்களோடு வீராவுக்கு பெண் தேடும் படலம் நடக்கிறது. இந்த நிலையில் கீர்த்தியின் சித்தப்பா (முனீஷ்காந்த்) தன் நண்பன் கருணாஸை யதார்த்தமாக சந்திக்கும் போது வீராவுக்கு பெண் பார்ப்பது பற்றி தெரிய அவர்களிடம் ஒரு சில பொய்களை சொல்லி வீராவுக்கு கீர்த்தியை மண முடித்து வைக்கிறார். திருமணம் முடிந்து சில நாட்கள் நன்றாக இருப்பார்கள். இதற்கிடையே பிரச்னை ஒன்றின் வாயிலாக, கீர்த்தி தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி கணவனை காப்பாற்றுகிறாள். பின்னர் கீர்த்தி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அவள் ஒரு மல்யுத்தப் வீரங்கணை, நன்றாகப் படித்தவள், தலைமுடி உயரம் இல்லாதவள் என்பது வீராவுக்குத் தெரிய வருகிறது. அந்த நேரத்தில் முனீஷ்காந்த் சொன்ன பொய்கள் வீராவுக்கு தெரிய வருகிறது. இந்த விஷயம் மாமன் கருணாஸுக்கு தெரிய வர, கீர்த்தியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது கீர்த்தி கருணாஸை அரைந்து விடுகிறார். கணவன் மனைவி இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது?  கீர்த்தியின் கட்டா குஸ்தி கனவு பலித்ததா? இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா? கருணாஸை கீர்த்தி ஏன் அறைந்தார்? வீரா ஏன் தனது மனைவியுடன் போட்டிகளில் மல்யுத்தம் செய்ய விரும்புகிறார்? இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? மனைவியின் ஆசையை வீரா நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

விஷ்ணு விஷால் தனது கதைத் தேர்வில் மீண்டும் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டு தனக்கென தனி அடையாளத்தைப் பெற்று ஹீரோவாக படிப்படியாக உயர்ந்து வருகிறார். ‘ராக்ஷசன்’ படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்றார். மற்றொரு பரிசோதனையாக மண் மல்யுத்தம் செய்துள்ளார். இதில் விஷ்ணு விஷால் ‘படிச்சவ அதிகாரம் பண்ணுவா… படிக்காதவதான் அடங்கி போவா’, ‘நீளமான முடியில்லன்னா அவ பொண்ணுல்ல் பையன்’ போன்ற பழமையான எண்ணங்களை கொண்ட கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். விஷ்ணு விஷால் தனது கதைத் தேர்வில் மீண்டும் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.  விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி இடையேயான ரொமான்ஸ் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக இண்டர்வெல் சீன் மாஸாகவும், நகைச்சுவை மிகுந்ததாகவும் இருந்தது.

கீர்த்தி வேடத்தில் குஸ்தி வீராங்கனையாக களமிறங்கியிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி வேற லெவல். இந்தப் படத்தில் அவரது பாத்திரம் மிக முக்கியமானது. ஒரு மல்யுத்த வீரராக கச்சிதமாக பெருந்திய அவரது கதாபாத்திரம் ஹீரோவுக்கு நிகரானது அதே நேரத்தில் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். கிராஃப் வெட்டி, சேலையை ஏற்றிக்கட்டி எதிரிகளை பந்தாடுவதாகட்டும், குஸ்தி போட்டிகளிலும், ஆக்ரோஷமான கண்பார்வையிலும், விளையாட்டு வீராங்கனைக்கான லுக்கிலும், நடிப்பில் உச்சம் தொடுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக மிரட்டி தூள்கிளப்புகிறார். அவர் எதிர்பாராத சூழ்நிலையை சூப்பராக எதிர்கொள்கிறார், அதே நேரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி வீராவின் மனைவியாக அண்டைவீட்டுப்பெண் போல் பாந்தமாக இருக்கிறார்.

வீராவின் மாமாவாக ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் கருணாஸ், கீர்த்தியின் சித்தப்பாவாக முனிஷ்காந்த் மற்றும் காளிவெங்கட் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்களுக்கு கிடைத்த இடங்களில் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்து அனைவரின் கவனத்தை பெறுகிறார்கள். விஷ்ணு விஷால், கருணாஸ், காளி வெங்கட் வரும் காட்சிகள் காமெடிக்கு நிச்சயம் கேரண்டி.

தனக்கான ஸ்டைலில் சிரிக்க வைக்கும் ரெடின் கிங்க்ஸ் லீ, ஹரீஷ் பேரடி, கஜராஜ் மற்றும் துணை கதாபாத்திரங்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்ப விஷயங்களைப் பொறுத்த வரை ஜஸ்டின் பிரபாகரனின் இசை மற்றும் பின்னணி இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு, எடிட்டிங் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்.

‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் கைகோத்திருக்கிறார். கட்டா குஸ்தி திரைப்படத்தின் கதைக்களம் எதிர்பார்த்தபடியே விளையாட்டுக் கருவைக் கொண்ட பொதுவான குடும்ப நகைச்சுவை. கதையின் நாயகனாக பெண் கதாபாத்திரத்திற்கு முதல் இடம் கொடுத்து, நிறைய காமெடி காட்சிகளுடன் கூடிய சிறந்த குடும்ப படமாக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இயக்குநர் செல்ல அய்யாவு அனைவரும் சிரிக்கும் படியான கதையை படமாக்கி இருக்கிறார். கணவன் – மனைவி உறவு முறையை படத்தின் முதல் பாதி சிரிப்பலையுடன் பார்வையாளர்களை கவரும் வகையில் வேகமெடுக்க வைத்து திருமணத்திற்காக கூறிய பொய்யை சமாளிக்க போராடும் நாயகி, மனைவியிடம் கெத்து காட்ட நாயகன் செய்யும் செயல்கள், ஆர்ப்பரிக்க வைக்கும் இடைவேளை என ‘கட்டா குஸ்தி’ முதல் ரவுண்டில் ஸ்கோர் செய்கிறது. உணர்வுகள் கலந்த இரண்டாம் பாதியில் வீரா கதாபாத்திரம் வாயிலாக, பெண்களை இன்னமும் அடிமைகள் என நினைத்து சுற்றிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு சொன்ன மெசெஜ்ஜூம், அதை சார்ந்து எழுதப்பட்ட வசனங்களும் சிறப்பு.

மொத்தத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ‘ஆர்டி டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நிறைய சிரிக்கும் தருணங்களைக் கொண்ட கட்டா குஸ்தி  உங்கள் குடும்பத்துடன் ரசிக்க சரியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.