ஐங்கரன் விமர்சனம்: ஐங்கரன் வெற்றி வாகை சூடி சாதிக்க பிறந்தவன் | ரேட்டிங் – 2.5/5

0
128

ஐங்கரன் விமர்சனம்: ஐங்கரன் வெற்றி வாகை சூடி சாதிக்க பிறந்தவன் | ரேட்டிங் – 2.5/5

காமென் மேன் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் ஐங்கரன் படத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெராடி, சித்தார்த்தா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்தை இயக்கியிருக்கிறார் ரவிஅரசு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், அபிமன்யுவின் ஒளிப்பதிவில், ராஜாமுகம்மது எடிட்டிங் செய்துள்ள படத்தின் இணை தயாரிப்பு -சுபா கணேஷ், பிஆர்ஒ-கோபிநாத்.

இளம் பட்டதாரி விஞ்ஞானியான ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். தந்தை ஆடுகளம் நரேன் போலீசில் வேலை செய்கிறார். நண்பன் காளி வெங்கட் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பல உதவிகளை செய்கிறார். எதிர்பாராத விதமாக கோழிப்பண்ணையில் நடக்கும் தில்லுமுல்லுகளை கண்டறியும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு, அந்தப் பண்ணையின் முதலாளியிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதற்கிடையே சென்னை மற்றும் பல இடங்களில் வடநாட்டு கும்பல் வைர நகைகளை கொள்ளையடித்து கொண்டு காரில் வருகின்றனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளின் மூட்டை ஆழ் துளை கிணற்றில் விழுந்து விட,அதைக் கைப்பற்ற கோழிப்பண்ணை முதலாளியின் குழந்தையை கடத்தி அந்த குழிக்குள் திருட்டு கும்பல் போட்டு விடுகிறது. அரசு தரப்பில் அதிகாரிகள், மருத்துவர்கள் என்று பல குழுக்கள் அந்த இடத்திற்கு வந்து குழந்தை மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். அந்த சமயத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் தான் கண்டுபிடித்த இயந்திரத்துடன் வந்து குழந்தையை மீட்கிறார். அக்குழந்தையுடன் நகை மூட்டையும் கூடவே வந்து விட, அதன் பின் வடநாட்டு கொள்ளையர்கள் அந்த மூட்டையை கைப்பற்றினார்களா? போலீஸ் திருடர்களை கைது செய்ததா? ஜி.வி.பிரகாஷ்குமாரின் தந்தைக்கு ஏற்பட்ட ஆபத்து என்ன? என்பதே பரபரக்கும் க்ளைமேக்ஸ்.

விஞ்ஞானியாக ஜி.வி.பிரகாஷ்குமார்; நடிப்பு நன்றாகவும் முதிர்ச்சியாகவும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராகவும் இருக்கிறது. சண்டைக்காட்சிகள் யதார்த்தமானதாகவும்,ஆக்ஷன் காட்சிகளின் போது ஸ்லோ மோஷன் காட்சிகள் நன்றாக செய்துள்ளது இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

ண்பராக காளி வெங்கட், ஜிவியின் நேர்மையான போலீஸ்கார தந்தையாக ஆடுகளம் நரேன், காமம் மற்றும் பேராசை கொண்ட இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ஹரேஷ் பெராடி மற்றும் கிரிமினல் கும்பலின் தலைவனாக நடித்த சித்தார்த்தா சங்கர் உட்பட துணை நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். மஹிமா நம்பியார் ஒரு கண்ணியமான நடிப்பையும் வழங்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையோடு பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

அபிமன்யுவின் ஒளிப்பதிவு கச்சிதமாக உள்ளது.ராஜாமுகம்மது எடிட்டிங் சிறப்பு.

இயக்கம்-ரவிஅரசு.ஆரம்ப காட்சியில் மெதுவாக நகர்ந்தாலும் அதன்பின் எதிர்வரும் சிக்கல்கள், கோழிப்பண்ணையிலிருந்து ஆரம்பித்து கொள்ளைக்கும்பல் வரை நகரும் காட்சிகள் ஒன்றோடொன்று இணைத்து இடைவேளைக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் போராட்டம் வரை காட்சிகளின் நன்பகத்தன்மை மாறாமல் பார்த்துக் கொள்வதில் முழு வெற்றி பெற்றுவிடுகிறார் இயக்குனர் ரவிஅரசு. அதன்பின் எதிரிகளை எதிர்கொள்ளும் ஸ்டண்ட் காட்சிகள் வித்தியாசமானதாக கொடுத்துள்ளார். சமூக அக்கறையோடு, இளம் விஞ்ஞானியின் எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் ரவிஅரசு. வெல்டன்.

மொத்தத்தில் காமென் மேன் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் ஐங்கரன் வெற்றி வாகை சூடி சாதிக்க பிறந்தவன்.