எறும்பு சினிமா விமர்சனம் :  எறும்பு கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஃபீல் குட் மூவி | ரேட்டிங்: 4/5

0
383

எறும்பு சினிமா விமர்சனம் :  எறும்பு கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஃபீல் குட் மூவி | ரேட்டிங்: 4/5

சுரேஷ் ஜி தயாரித்து இயக்க, சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியான், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள் நடிப்பில் வந்திருக்கும் படம் எறும்பு.

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம்,
‘எறும்பு’. ஒளிப்பதிவு காளிதாஸ் கே.எஸ் கவனிக்க, அருண் ராஜ் இசையமைத்துள்ளார். மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார். மக்கள் தொடர்பு யுவராஜ்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே ஒரு கிராமத்தில் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் அண்ணாதுரை (சார்லி), அவரது இரண்டு குழந்தைகள்  மகள் பச்சையம்மா (மோனிகா)  மகன் முத்து (மாஸ்டர் சக்தி ரித்விக்), தாய் பொம்மி (பரவை சுந்தராம்பாள்) மற்றும் இரண்டாம் மனைவி  கமலம் (சூசன் ஜார்ஜ்), ஒரு கைக் குழந்தையுடன் பயத்தில் வாழ்கிறார். முதல் மனைவியின் குழந்தைகளை சித்திக்கு அவ்வளவாக பிடிக்காது. அப்பாவின் தாயார்தான் வீட்டில் அப்பா இல்லாத போது அந்த குழந்தைகளுக்கு ஆதரவு. வட்டிக்கு பணம் தரும் சுறாவிடம் (எம் எஸ் பாஸ்கர்)  வட்டிக்குக் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாததால் சிரமப்படுகிறார். கடன் வாங்கியவரிடம் அண்ணாதுரை அவமானப்படுகிறார். குறிப்பிட்ட தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதாக கூறி கடன் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில், அண்ணாதுரையும் கமலமும் கரும்பு வெட்டும் கூலி  வேலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு செல்கிறார்கள். இந்த நேரத்தில்  சித்தி குழந்தையின் மோதிரத்தை பேரன் ரித்விக்கிடம் கொடுத்து பாட்டி போட்டுக் கொள்ளச் சொல்ல, அவன் அதை தொலைத்து விடுகிறான்.அக்காவிடம் அவன் அதை சொல்ல பாட்டியிடம் கூட சொல்லாமல் மறைத்து விட்டு, அக்காவும் தம்பியும் சித்தி அடிக்கு பயந்து அப்பா, சித்தி வருவதற்குள் அதே மாதிரி மோதிரம் வாங்க திட்டமிடுகிறார்கள். இருவரும் தங்கள் பக்கத்தில் வசிக்கும் சிட்டுவின் (ஜார்ஜ் மரியன்) உதவியுடன் பல சிறு சிறு வேலைகளை செய்து பணம் சேகரிக்கிறார்கள். இருந்தாலும் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேரவில்லை. கூலி வேலைக்கு சென்ற அப்பாவும், சித்தியும் வீடு வந்து சேர்கிறார்கள். குறிப்பிட்ட தேதி அன்று வட்டிக்கு பணம் கொடுத்தவன் நெருக்கடி கொடுக்க அதன் பின் என்ன நடந்தது? தொலைந்த மோதிரம் கிடைத்ததா? காசு சம்பாதிக்க குழந்தைகள் என்ன என்ன வேலைகள் செய்தார்கள்? குறிப்பாக முழு குடும்பமும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் இவர்கள் தாங்களாகவே பிரச்சனையைத் தீர்க்க என்ன செய்தார்கள்? என்பதை அறிய மீதி படத்தை வெள்ளித்திரையில் காண்க.

இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா மற்றும் மாஸ்டர் சக்தி ரித்விக் நடிப்பு குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு அப்பாவித்தனம் மற்றும் பாதிப்பு உணர்வைக் கச்சிதமாக கொண்டு வருகிறார்கள். இரண்டு உடன்பிறப்புகளுக்கு இடையிலான அக்கா தம்பி பாசம் தெளிவாகவும் உள்ளது.

சிட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஜார்ஜ் மரியன் கதைக்கு நிறைய வலு சேர்த்துள்ளார். அறிவுசார் குறைபாடுகள் உள்ளவராக அவர் முன்னிறுத்த பட்டாலும், அவர் செய்யும் சிறு விஷயங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. நகைச்சுவைக்கான ஸ்பேஸையும் அவர் சிறந்த நடிப்பால் நிறைவு செய்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், சார்லி, ஆகிய இருவரின் கதாபாத்திரங்களும் கிராமிய கதை களத்திற்கு ஏற்ற அற்புதமான தேர்வு. சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள், ஜெகன் மற்றும் அனைத்து தணை கதாபாத்திரங்கள் அளவான நடிப்பை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

அண்ணாதுரையின் மகள் தனது இறந்த தாயுடன் தொலைபேசியில் கற்பனையாக உரையாடும் காட்சி பின்னணி இசையில் அருண் ராஜ் ஸ்கோர் செய்துள்ளார். அழகிய கிராமத்து இயற்கை அழகை ரசிக்க நம்மை அந்த சூழலுக்கு சிறந்த ஒளிப்பதிவு மூலம் அழைத்து சென்றுள்ளார் ஒளிப்பதிவாளர் காளிதாஸ் கே.எஸ்.
அப்பா பாசம், அக்கா தம்பி பாசம் என அனைத்தையும் அழுத்தமான கதைக்களத்துடன், ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட, அதில் எமோஷனல் எனும் உணர்வையும், வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களும் கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து படைத்துள்ளார் இயக்குனர் சுரேஷ் ஜி.
மொத்தத்தில் மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கும் எறும்பு கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஃபீல் குட் மூவி.