எமகாதகி சினிமா விமர்சனம் : எமகாதகி சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் | ரேட்டிங்: 4/5
நடிகர்கள்:
ரூபா கொடுவாயூர் – லீலா
நரேந்திர பிரசாத் – அன்பு
சந்திரா – கீதா கைலாசம்
ராஜு ராஜப்பன் – செல்வராஜ்
சுபாஷ் ராமசாமி – முத்து
ஹரிதா – பிரேமா
படக்குழுவினர்:
தயாரிப்பாளர்: ஸ்ரீநிவாசராவ் ஜலகம்
தயாரிப்பு பேனர்: நைசாட் மீடியா ஒர்க்ஸ்
இணை தயாரிப்பாளர்: கணபதி ரெட்டி
கதை, திரைக்கதை, இயக்கம்: பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்
ஒளிப்பதிவு : சுஜித் சாரங்
எடிட்டர் மற்றும் வண்ணம்: ஸ்ரீஜித் சாரங்
இசையமைப்பாளர்: ஜெசின் ஜார்ஜ்
வசனங்கள்: எஸ் ராஜேந்திரன்
கலை இயக்குனர்: பி ஜோசப் பாபின்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்
டிஐ: சாரங்க்ஸ் டிஐ
ஸ்டண்ட் இயக்குனர்: முரளி ஜி
பாடல் வரிகள்: ஞானகரவேல், எஸ் ராஜேந்திரன், தஞ்சை செல்வி
தயாரிப்பு நிர்வாகி: மணவை லோகு
படைப்பு தயாரிப்பாளர்: சுஜித் சாரங்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கட ராகுல்
உலகளாவிய விநியோகம்: யஷ்வா பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM)
தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஊர் தலைவர் செல்வராஜ் (ராஜு ராஜப்பன்) அவரது மனைவி சந்திரா (கீதா கைலாசம்) மகன் முத்து (சுபாஷ் ராமசாமி) மகள் லீலா (ரூபா கொடுவாயூர்) மருமகள் ஹரிதா (பிரேமா) கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். லீலா சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு, அவ்வப்போது இன்ஹேலர் பயன்படுத்துவார். மறுபுறம், ஊர் கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் போது, முத்து அவனது இரண்டு நண்பர்கள் உதவியுடன் முன்பு கோவிலில் உள்ள கீரிடத்தை திருடி அதை அடமானம் வைத்து விடுகிறார். கோவில் திருவிழா தொடங்குவதற்குள் திருடிய கிரீடத்தை மீட்டு திரும்ப கொண்டு சென்று கோவிலில் வைக்க வில்லை என்றால் அனைவரும் மாட்டிக் கொள்வோம் என மூவரும் பயத்தில் சுற்றி வருகிறார்கள். இந்நிலையில், ஊர் தலைவர் செல்வராஜ் கோபமாக வீட்டிற்குள் நுழைகிறார்.கோபத்தில் மனைவி சந்திரா கன்னத்தில் அறைகிறார். அம்மாவை ஏன் அறைகிறீர்கள் என மகள் லீலா கேட்கும் போது மகளையும் கெட்ட வார்த்தையால் திட்டி ஓங்கி அறைகிறார். அழுதுக்கொண்டே லீலா தன் அறைக்குள் செல்கிறார். அண்ணன் முத்துவும் பதட்டத்துடன் வீட்டிற்குள் நுழையும் போது விஷயத்தை அறிகிறான். நடுநிசியில் அம்மா சந்திரா மகள் அறைக்குள் செல்லும் போது அங்கு மகள் லீலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைகிறார். துயரமடைந்து குடும்பத்தினர் அனைவரும் லீலா தூக்கிட்டு தற்கொலை செய்தது வெளியே தெரிந்தால் குடும்ப கௌரவம் போய்விடும் என யோசித்து கிராமத்தினரிடம் லீலா மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். ஊர் மக்களும் சொந்தங்களும் சோர்ந்து அவரது இறுதிச் சடங்கிற்கு தயாராகும் போது, இறுதி சடங்கு செய்வதற்கு பிணத்தை தூக்க கிராமத்து இளைஞர்கள் முயலும் போது, பிணத்தை தூக்க முடியாமல் அதிகம் கனப்பதுடன், பிணம் அசையத் தொடங்குகிறது அதை பார்த்த அனைவரும் நாலாபுறமும் தலைதெறிக்க ஓடுகிறார்கள். மீண்டும் பிணத்தைத் தூக்க முயற்சிக்கும் போது அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்படுகிறது. கண்கள் மூடியபடியே பிணம் கட்டிலுடன் எழுந்து சுவரோடு ஒட்டி நிற்கிறது. இதனால், ஒட்டுமொத்த கிராம மக்களும் வீட்டில் இருந்து வெளியே வந்து பீதியுடன் செய்வதறியாமல் திகைத்து இருக்கிறார்கள். லீலா ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பதை பிறகு ஊர்மக்கள் அறிகிறார்கள். அதன் பின் அவள் மரணத்திற்கு காரணமானவர்கள் ஒவ்வொருவராக மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பின்பும் லீலாவின் ஆத்மா சாந்தி அடையாமல் அவரது உடல் வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறது. அது என்ன என்பதை அற்புதமான திரைக்கதையோடு மீதிக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூபா கொடுவாயூர், லீலா கதாபாத்திரத்தில் அழகிய கிராமத்து பெண்ணாக கதையின் நாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உயிரற்ற சலடமாக படத்தின் 80 சதவீத காட்சிகளில் நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதை முகபாவனை மற்றும் உடல் மொழி மூலம் நேர்த்தியாக வெளிபடுத்தி முழு திரைக்கதைக்கும் உயிர் கொடுத்துள்ளார் இந்த அழகிய எமகாதகி.
அம்மா சந்திராவாக கீதா கைலாசம் யதார்த்தமான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்துள்ளார். மகள் தூக்கில் தொங்கிய காட்சியை பார்த்து பித்து பிடித்தது போல் அமர்ந்து ‘என்னை ஏமாத்திட்டா’ என்று சொல்லும் காட்சிகள் நம் கண்களை குளமாக்குகிறார்.
ஊர் தலைவர் மற்றும் தந்தை செல்வராஜாக – ராஜு ராஜப்பன், மகன் முத்துவாக – சுபாஷ் ராமசாமி, மருமகள் பிரேமாவாக – ஹரிதா, லீலாவின் காதலன் அன்புவாக நரேந்திர பிரசாத், முத்துவின் நண்பகள் மற்றும் ஊர் மக்களாக என ஒவ்வொருவரும் கதையில் வாழும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து, தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள்.
கிராமப்புற வாழ்க்கையின் சாரத்தை தனது காட்சி கோணங்களால் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், சிறந்த ஒளிப்பதிவு மூலம் திரைக்கதையை நம்பகத்தன்மையுடன் கொண்டு சென்றுள்ளார். மேலும், ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங் மற்றும் வண்ணமயமாக்கல்) மற்றும் ஜெசின் ஜார்ஜ் (இசை) ஆகியோரின் தொழில்நுட்பத் தொழில்நுட்பத் திறன்கள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தி உண்மையில் இருப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
கதையின் சாராம்சம் என்னவென்றால், ஒரு குடும்பத்தின் நற்பெயர் ஆண்களின் தவறான செயல்களை விட பெண்கள் மீதான அதன் கட்டுப்பாட்டில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சாதி, சாதி மாறி காதல், அதனால் ஏற்படும் ஆணவக் கொலையை சுட்டிக்காட்டுகிறது. எமகாதகியும் தனது கதையை இயக்க அமானுஷ்ய சக்தியைப் பயன்படுத்தி புறம் பேசி, தவறுகளைச் செய்து மனிதர்களின் வடிவத்தில் அலைபவர்கள் முகத்திரையை கிழிக்கிறது. இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் படத்தின் தொடக்கத்திலிருந்தே தொய்வில்லாத அழுத்தமான திரைக்கதை அமைத்து, அனைத்து நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்புடன் புதுமையான கதைசொல்லல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மொத்தத்தில் நைசாட் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஸ்ரீநிவாசராவ் ஜலகம் தயாரித்துள்ள எமகாதகி சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர்.