என்ஜாய்  விமர்சனம் : என்ஜாய் சமூக செய்தியை ஜாலியா சொல்லும் பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 2.5/5

0
324

என்ஜாய்  விமர்சனம் : என்ஜாய் சமூக செய்தியை ஜாலியா சொல்லும் பொழுதுபோக்கு படம் | ரேட்டிங்: 2.5/5

நடிகர்கள் – மதன் குமார், விக்னேஷ் (நடனக் கலைஞர் விக்கி) , ஹரிஷ் குமார், நிரஞ்சனா நெய்தியார், சாய் தன்யா, ஜி.வி அபர்ணா, ஷருமிஷா, ஹாசின், பில்லிமுரளி, காலாட்படை ஜெய், யோகிராம் மற்றும் பலர்.
ஒளிப்பதிவாளர் – கே.என்.அக்பர்
இசை – கே.எம்.ரயான்
பின்னணி இசை – சபேஷ்-முரளி
எடிட்டர் – மணி குமரன்
பாடல்கள் – விவேகா, உமாதேவி.
நடனம்- தினேஷ்
சண்டை- டேஞ்சர்மணி
கலை- சரவண அபிராமன்
தயாரிப்பு –  எல்.என்.எச் கிரியேசன், ம.லட்சுமி நாராயணன்
இயக்கம் – பெருமாள் காசி
மக்கள் தொடர்பு – குணா

கதை:
ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு வழி வகுக்கும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் பார்வையாளர்களுக்கு பரந்த நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் பேரழிவு அலைகளையும் உருவாக்கியது. ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள். அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் மூன்று நடுத்தர வர்க்கப் பெண்கள் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் விடுதியில் தங்கி படிக்கின்றனர், நட்பாகிறார்கள். இவர்களை சீனியர்கள் ராக்கிங் செய்யும் போது இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின். அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். ஆரம்பத்தில் அவர்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும். விரைவில் அவர்கள் தங்கள் சீனியர்களைப் போல பணக்கார வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின். மறுபுறம், காதலி இருந்தாலும், சின்னச்சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ண நண்பர்கள் மூவரும் (இன்ப) சுற்றுலா கிளம்பி செல்கிறார்கள். அடுத்து அங்கு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

மதன்குமார், விக்னேஷ், ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே படத்தில் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள்  மூவருமே அந்தந்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேபோல கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்து, வசதி படைத்த பணக்கார மாணவிகளின் கலாச்சாரத்தை பதட்டத்துடன் எதிர்கொண்டு, அதை எப்படி அணுகுவது என ஒரு தெளிவில்லாமல் குழம்பும் இளம்பெண்களின் பிரதிபலிப்பாகவே ஜீவி அபர்ணா மற்றும் சாருமிசா மற்றும் இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனா நெய்தியார் இந்த மூவரும் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடித்துள்ளனர்.
கல்லூரியில் சீனியர் தோழியாக ஹாசின் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் பேசப்படும் கதாபாத்திரத்தில் சாய் தன்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பில்லிமுரளி, வில்லத்தனம் காட்டியிருக்கும் ரிசார்ட் ஓனர் ‘காலாட்படை; ஜெய், சைக்கோ வில்லன் பாத்திரத்தில் யோகிராம் கவனம் பெறும் கதாபாத்திரங்களாக உறுதுணையாக இருந்து திரைக்கதை பலம்  சேர்த்துள்ளனர்.

ஒரு வலுவான சமூக செய்தியை ஜாலியாகவும், கமர்ஷியலாகவும் இருக்க, கே.என்.அக்பரின் ஒளிப்பதிவு, கே.எம்.ரயானின் இசை, சபேஷ்-முரளியின் பின்னணி இசை, மணி குமரனின் படத்தொகுப்பும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

ஒரு வலுவான சமூக செய்தி மற்றும் பல சிக்கல்கள் கதையில் பின்னிப்பிணைந்துள்ளன, புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் இளைஞர்களின் மொழியின் மூலம் தீவிரமான சிரிப்பு பொருட்களுடன் வயது வந்தோருக்கான நகைச்சுவையை இயக்குனர் தேர்ந்தெடுத்தார். இன்றைய பல இளைஞர்களின் மனோபாவம், அது ஆணாக இருக்கட்டும் இல்லை பெண்ணாக இருக்கட்டும்.. திருமணத்திற்கு முன்பே ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது அதற்கேற்றபடி மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களை அந்த மாயைக்குள் தூண்டில் போட்டு இழுக்கிறது. இந்த விஷயத்தை மையப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாக இன்றைய இளைஞர்களின் தாகம், மோகம், வேகம், அதனால் ஏற்படும் குழப்பம் என கலவையான உணர்வுகளை கலந்து திரைக்கதை அமைத்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பெருமாள் காசி.

மொத்தத்தில், எல்.என்.எச் கிரியேசன், ம.லட்சுமி நாராயணன் தயாரித்துள்ள என்ஜாய் சமூக செய்தியை ஜாலியா சொல்லும் பொழுதுபோக்கு படம்.