எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம் : எனக்கு என்டே கிடையாது கட்டழகும், காந்த கண்களும் ஏற்படுத்தும் விபரீத விளையாட்டு | ரேட்டிங்: 3/5

0
362

எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம் : எனக்கு என்டே கிடையாது கட்டழகும், காந்த கண்களும் ஏற்படுத்தும் விபரீத விளையாட்டு | ரேட்டிங்: 3/5

ஹங்கிரி வுல்ஃப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல் எல் பி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘எனக்கு என்டே  கிடையாது’.

இதில் விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன், ஸ்வயம் சித்தா, சிவக்குமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலாச்சரண் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் எனும் பட நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் ஜெனிஷ் வெளியிடுகிறார். மக்கள் தொடர்பு ஏ.ஜான்.

ஒரு கால் டாக்சி ஓட்டுநர் சேகர், ஒரு கவர்ச்சிகரமான இளம் தொழிலதிபர் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் பாரிலிருந்து பிக்கப் செய்து அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார். இந்த சவாரிக்கு இடையே, ஒருவருக்கொருவர் பொதுவான உரையாடலுடன் மகிழ்ச்சியான அந்த பயணம் ஊர்வசியுடன் தொடர்கிறது. டாக்ஸி வீட்டின் வாசலில் நின்றதும், ஊர்வசி காரிலிருந்து இறங்கியதும், சேகரின் அனறைய கடைசி டாக்ஸி சவாரியாக இருந்தால், தன்னுடன் மது அருந்த வருமாறு தன் வீட்டிற்கு சேகரை அழைக்கிறாள். முதலில் சேகர் திகைத்து, கலக்கத்துடன் போகலாமா வேண்டாமா என்று தனக்குள் விவாதம் செய்து கொள்கிறான். தன் கணவன் வெளியூர் சென்றிருப்பதாக ஊர்வசி கூற சேகரின் மனதில் ஆசைகள் பெருக, அவனும் அவளுடன் வீட்டுக்குள் நுழைகிறான். ஊர்வசி சேகரை அமர வைத்து விட்டு ஆடையை மாற்ற செல்கிறாள். பின் கவர்ச்சியான ஆடையில் ஊர்வசியை காணும் போது மெய் மறந்து போகிறான். இருவரும் டகீலா என்ற மதுபானம் அருந்த ஆரம்பிக்கிறார்கள். சேகரும் ஊர்வசியும் சேர்ந்து டகீலா அடிக்கும் போது அனைவரும் எதிர்பார்த்த சம்பவம் நடக்கிறது. போதை தெளிந்ததும் கிளம்ப தயாராகும் போது சேகர் வீட்டிற்குள் ஒரு 60 வயது மதிக்கத்தக்க தேவராஜ் சடலத்தைக் காண்கிறான். பயத்தில் உறைந்து போன சேகர் இந்த மோசமான அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், எதிர்பாராத விதமாக ஊர்வசியும் அவன் கண் முன்னே இறந்து விடுகிறாள். வீடு செக்யூரிட்டி லாக் சிஸ்டம் என்பதால் அவனால் வீட்டிலிருந்து வெளியேர முடியவில்லை. அவனுடைய பேராசை அந்த இரவை புரட்டுகிறது, ஒரு மணி நேரம் கழித்து டேவிட் என்கிற திருடன் ஒருவன் வீட்டிற்குள் நுழைகிறான்.  அடுத்து  மஸ்தான் என்கிற அரசியல்வாதியும் ஊர்வசியை காண அந்த வீட்டிற்குள் நுழைகிறான். மூன்று பேருக்கு இடையே ஒரு சிறிய போராட்டம் ஒன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களால் அன்றைய அந்த இரவு அவனுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது. அன்றைய இரவில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் 4 பேர் இறக்கிறார்கள். முதலில் ஏற்கனவே இறந்து கிடந்த நபர் யார்? ஊர்வசிக்கு அந்த இறந்து கிடந்த நபருக்கும் என்ன சம்மந்தம்? ஊர்வசி எப்படி இறந்தார்? செக்யூரிட்டி லாக் சிஸ்டம் உள்ள வீட்டுக்குள் திருடன், அரசியல்வாதியும் எப்படி உள்ளே, எதற்காக நுழைந்தார்கள்? அந்த இரவில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன? சேகர் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான்? போன்ற என்டே கிடையாத பல கேள்விகளுக்கு எனக்கு என்டே கிடையாது மட்டும் பதில் சொல்லும்.

கால் டாக்சி டிரைவராக விக்ரம் ரமேஷ் கதையின் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். அத்துடன் படத்தை இயக்கவும் செய்துள்ளார். பெண் தொழில் அதிபர் ஊர்வசியாக ஸ்வயம் சித்தா தன் காந்த கண்களாலும் கவர்ச்சியாலும் இளவட்டங்களை சுண்டி ஈர்க்கிறார், மற்றும் நடிப்பிலும் அசத்தியுள்ளார். டேவிட் கதாபாத்திரத்தில் திருடனாக கார்த்திக் வெங்கட்ராமன், மற்றும் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு இருவரும் நேர்த்தியான நடிப்பு வழங்கியுள்ளனர். தேவராஜ் கதாபாத்திரத்தில் முரளி சீனிவாசன், போலீஸ் அதிகாரியாக சக்திவேல் மற்றும் அனைத்து துணை கதாபாத்திரங்கள் திரைக்கதை விறுவிறுப்பாக நகர உதவியுள்ளனர்.

தளபதி ரத்தினத்தின் கேமரா கோணங்கள் த்ரில் அனுபவத்தை தருகிறது. ஓம் சிவபிரகாஷின் ஸ்டண்ட் கோரியோகிராபி சூப்பர். பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறது முகன்வேலின் எடிட்டிங். கலாசரணின் இசையும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே இரவில் பல விதமான பிரச்சனைகளை சந்திக்கும் அவரது வாழ்க்கை அவ்வளவு தான் என்று நினைக்கும் போது மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடங்குகிறது. அதுவே மையக்கருவாக வைத்து மொத்தக் கதையும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடந்தாலும், சுவாரஸ்யம் சற்றும் குறையாத வகையில் திரைக்கதை அமைத்து நகைச்சுவை, சென்டிமென்ட், திரில்லர் என அனைத்து அம்சங்களும் கலவையாக படைத்துள்ளார் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

மொத்தத்தில் ஹங்கிரி வுல்ஃப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல் எல் பி என்ற பட நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள எனக்கு என்டே கிடையாது கட்டழகும், காந்த கண்களும் ஏற்படுத்தும் விபரீத விளையாட்டு.