இறுகப்பற்று  திரைப்பட விமர்சனம் : இறுகப்பற்று திருமணமான தம்பதிகள், இல்லற வாழ்க்கையில் இணைய போகும் ஜோடிகள், என அனைத்து தரப்பினரும் காண வேண்டிய ஒரு மகத்தான படம் | ரேட்டிங்: 4/5

0
798

இறுகப்பற்று  திரைப்பட விமர்சனம் : இறுகப்பற்று திருமணமான தம்பதிகள், இல்லற வாழ்க்கையில் இணைய போகும் ஜோடிகள், என அனைத்து தரப்பினரும் காண வேண்டிய ஒரு மகத்தான படம் | ரேட்டிங்: 4/5

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “இறுகப்பற்று”.
​மல்டி ஸ்டாரர் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு கோகுல் பெனாய், படத்தொகுப்பு ஜேவி மணிகண்ட பாலாஜி. கலை  இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி மற்றும் ஏகன் ஏகாம்பரநாதர்.

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். மக்கள் தொடர்பு ஜான்சன்.

விக்ரம் பிரபு மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் மற்றும் அபர்நதி மற்றும் ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் ஆகிய மூன்று ஜோடிகளுக்கு இடையிலான திருமண உறவுகளைச் சுற்றி இறுகப்பற்று சுழல்கிறது. ஐடி ஊழியரான ரங்கேஷ் (விதார்த்) க்கு, குழந்தை பிறந்த பிறகு  அவரது மனைவி பவித்ராவின் (அபர்நதி) எடை அதிகரித்ததால் கணவனுக்கு மனைவியை பிடிக்காமல் போகிறது. மேலும் மனைவியை இழிவுபடுத்துகிறார். அதனால் விவாகரத்து தான் இதற்கு ஒரே வழி என்று நம்புகிறார். இருபது வயதுடைய அர்ஜுன் (ஸ்ரீ) மற்றும் திவ்யா (சானியா ஐயப்பன்) ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் திருமண வாழ்க்கையில் போராடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கொண்டிருந்த காதல் எங்கே காணாமல் போனது என்று இருவரும் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களும் விவாகரத்து தான் இதற்கு தீர்வு என்று நம்புகிறார்கள். மேலும் விவாகரத்து செய்ய முன் வரும் தம்பதிகளுக்கு நீதிமன்றத்திலும் தனது அலுவலகத்திலும், முறையான கவுன்சிலிங் வழங்கி அவர்களை சேர்த்து வைக்கும் பணியை செய்து வருகிறார் மித்ரா மனோகர். விவாகரத்து தான் இதற்கு ஒரே வழி என்று இருக்கும் ரங்கேஷ் – பவித்ரா மற்றும் அர்ஜுன் – திவ்யா தம்பதிகளுக்கு கவுன்சிலிங் வழங்கி வருகிறார் மித்ரா மனோகர். இந்நிலையில், இந்த இரு ஜோடிகளின் வாழ்வை நினைத்து குழம்பும் மித்ரா, இது போன்ற சண்டை தன் வாழ்விலும் வந்து விட கூடாது என தன் கணவர் மனோகரிடம் (விக்ரம் பிரபு) சண்டையே போடாமல் வாழ்கிறார். சிறுசிறு சண்டை இல்லாத வாழ்க்கை, தம்பதியினருக்கு ஒரு சர்ச்சையாக மாறுகிறது, இதனால் அவர்கள் வாழ்வில் சந்தோஷத்தை தொலைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த 3 தம்பதியினர் உறவில் அதிகப்படியான விரிசல் ஏற்படுகிறது. இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு? இறுதியில் பிரிந்த காதல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

மூன்று ஜோடிகளுக்கு இடையிலான திருமண உறவுகளைச் சுற்றி சுழலும் கதைகளத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் மற்றும் அபர்நதி, மற்றும் ஸ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் ஆகியோர் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, நேர்த்தியான நடிப்பின் மூலம் சுவாரஸ்யமான திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். குறிப்பாக அபர்னதி அனைவரின் மத்தியிலும் தனித்து நிற்கிறார். அபர்நதி பவித்ராவின் அப்பாவித்தனத்தை தனது நுட்பமான உடல் மொழி மற்றும் அவரது குரல் மாடுலேஷன் மூலம் வெளிப்படுத்தியதுடன் உடல் எடையை கூட்ட, குறைக்க அவர் எப்படி சிரமப்பட்டு உழைத்திருப்பார் என்பதை நாம் உணர முடிகிறது. அதே போல விக்ரம் பிரபுவுக்கு இது ஒரு கம்பேக் படமாக அமையும்.

ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத் தொடும் இசையில் கார்த்திக் நேதாவின் உணர்வுகளை தொடும் பாடல் வரிகள், தெளிவான வார்த்தைகள் புரியும் வகையில் அமைந்துள்ளது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

கேமராமேன் கோகுல் பினோய் காட்சி கோணங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்.மற்றும் ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு, சக்தி வெங்கட்ராஜ் கலை, பூர்ணிமா ராமசாமி மற்றும் ஏகன் ஏகாம்பரநாதர் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு அபாரம்.

உறவுகள் நம் வாழ்வின் ஒரு அங்கம். அவை நமக்கு மகிழ்ச்சியையும், ஆதரவையும், சவால்களையும் தருகின்றன, அவை வளரவும், நம் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளவும் உதவுகின்றன. திருமணமான தம்பதிகளுக்கிடையே யான உறவுகள் சிக்கலான தன்மைகளைப் பற்றியும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும் அவர்களுக்கிடையே உள்ள சிறிய பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினால் இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை மூன்று திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான உறவு பிரச்சனைகளை ஒரு உணர்ச்சிகரமான, அழுத்தமான திரைக்கதை அமைத்து மறக்க முடியாத அனுபவமாக படைத்துள்ளார் இயக்குனர் யுவராஜ்.

மொத்தத்தில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் ஆகியோர் தயாரித்துள்ள இறுகப்பற்று திருமணமான தம்பதிகள், இல்லற வாழ்க்கையில் இணைய போகும் ஜோடிகள், என அனைத்து தரப்பினரும் காண வேண்டிய ஒரு மகத்தான படம்.