அரண்மனை 4 சினிமா விமர்சனம் : அரண்மனை 4 பட்டி தொட்டி எங்கும் குடும்பங்கள் கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹாரர் காமெடி | ரேட்டிங்: 4/5

0
742

அரண்மனை 4 சினிமா விமர்சனம் : அரண்மனை 4 பட்டி தொட்டி எங்கும் குடும்பங்கள் கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹாரர் காமெடி | ரேட்டிங்: 4/5

நடிகர்கள்
சுந்தர் .சி – சரவணன்
தமன்னா – செல்வி
ராஷி கண்ணா – மாயா
சந்தோஷ் பிரதாப் – இஞ்சினியர்
கோவை சரளா – அத்தை
யோகி பாபு – மேஸ்திரி
டெல்லி கணேஷ் –  ஜமீன்
கருடா ராம் – சுவாமி ஜீ
விடிவி கணேஷ் – கார்பெண்டர்
‘மொட்டை’ ராஜேந்திரன், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, தீரஜ் விஷ்ணு ரத்னம், எஸ்.நமோ நாராயணன் உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி
தயாரிப்பு – குஷ்பு சுந்தர் ( Avni Cinemax P Ltd ), ஏ.சி.எஸ் அருண்குமார் ( Benzz Media Pvt Ltd)
இசை – ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் – குருராஜ்
சண்டை பயிற்சி – ராஜசேகர்
நடனம் – பிருந்தா
பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஸ்ரீ காந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

வங்காளத்தில் ஒரு இளம் பெண் படகில் செல்லும் போது ஒரு தீய அமானுஷ்ய சக்தி பாக், என்ற ஆவியால் கொல்லப்பட அந்தப் பெண்ணின் தந்தை, மகள் உயிரை விடுவதற்குள் அந்த பாக் ஆவியின் சக்தியை ஒரு கலசத்தில் அடைத்து வைத்து, அந்த ஆவியை தனது மகளாக இருக்க வேண்டும் என்று கூற கதை தொடர்கிறது. செல்வி (தமன்னா பாட்டியா) காதல் திருமணம் செய்து கொண்டு அவரது கணவருடன் (சந்தோஷ் பிரதாப்) காட்டில் ஒரு பாழடைந்த அரண்மனையில் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. அதிர்ச்சி அடைந்த அண்ணன் சரவணன் செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று அறிந்துகொள்ள அத்தையுடன் (கோவை சரளா) நகரத்திலிருந்து செல்வியின் இடத்திற்கு விரைகிறார்கள். மேஸ்திரி (யோகி பாபு) மற்றும் கார்பெண்டர் (விடிவி கணேஷ்) ஆகியோர் செல்வியின் இஞ்சினியர் கணவரின் வேளையில் அவருக்கு உதவுகிறார்கள், மேலும், அங்கே, டாக்டர் மாயா (ராஷி கண்ணா) மற்றும் அவரது தாத்தா ஜமீனும் (டெல்லி கணேஷ்) வீட்டில் வசிக்கின்றனர். அங்கு சரவணன் காவல்துறையுடன் சேர்ந்து தங்கை சாவின் மர்மத்தை ஆராயும்போது, அவர்களின் வீட்டில் ஒரு பேய் தோன்றுவதோடு, பல விவரிக்க முடியாத மரணங்கள் நடக்கத் தொடங்குகிறது. இந்த கொடூரமான தாக்குதலில் இருந்து தங்கையின் குழந்தைகள் தப்பிப் பிழைக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் தனது  சகோதரியின் மரணத்தின் பின்னணியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரித்து குழந்தைகளை பாக் பேய் இடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் சரவணன் இருக்கையில், இந்த பேயைப் பற்றி அதிகம் தெரிந்த ஒரு சுவாமி ஜீயை (கருடா ராம்) கண்டுபிடித்து, போலீசார் அவரைப் பிடிக்கும் போது, மற்றொரு தீய சக்தி பாக், இருப்பையும் அவர் வெளிப்படுத்துகிறார். செல்வியின் வீட்டில் பேய் ஏன் அலைகிறது? அந்த பேய் யார்? பாக் பேய் ஏன் குழந்தையை கொல்ல முயற்சிக்கிறது? சரவணன் தனது தங்கை குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக செல்வி கதாபாத்திரத்தில் தமன்னா பாட்டியா உணர்ச்சிவசப்பட்ட பாசமிகு தாயின் பாத்திரத்தை சுமந்து மிகவும் வியக்கத்தக்க வகையில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரிய பலம் சேர்த்ததுள்ளார். தமன்னா பாட்டியா கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டுவதுடன், இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

இயக்குனர் சுந்தர் சி உடன் நட்சத்திர பட்டாளம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், வி.ஜெயபிரகாஷ், ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், டெல்லி கணேஷ், கருடா ராம், தீரஜ் விஷ்ணு ரத்தினம், எஸ்.நமோ நாராயணன் உட்பட அனைவரும் கலக்கியுள்ளார்கள்.

குடும்பத்துடன தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களை கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மறைந்த நகைச்சுவை நடிகர் சேஷு ஆகியோர் நிச்சயம் தியேட்டரை சிரிப்பலையில் மிதக்க வைப்பார்கள்.

அம்மன் பாடலில் சிம்ரன் மற்றும் குஷ்பூவும் நடனத்தில் கவர்ந்துள்ளனர். அதே போல கடைசியில் டைட்டில் கார்டு போகும் போது இடம்பெறும் அந்த 3 நிமிட பாடல் தீயாக இருக்கிறது.

அருமையான விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை மற்றும் பின்னணி  இசை – ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி, படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர், கலை இயக்குனர் – குருராஜ், சண்டைப்பயிற்சி – ராஜசேகர், நடனம் – பிருந்தா, பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஸ்ரீ காந்த், முத்தமிழ் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பேய் படம் போல இல்லாமல் ஹாரர் காமெடி ஜானருக்கு என்ன தேவையோ அதை வழங்கி விறுவிறுப்பான திரைக்கதைக்கு உயிர் கொடுத்து தியேட்டரை அதிர வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் ஹீரோக்கள் சப்ஜெக்ட் படங்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள். அதில் எல்லை மீறும் வசனம் மற்றும் கவர்ச்சி, அருவா, ரத்தம் இடம் பெறும் வகையில் அதிகம் செலுத்தும் வேளையில் இயக்குனர் சுந்தர் சி. பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார். இன்றும் நகைச்சுவை உணர்வு உள்ள இயக்குனர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி. பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் வைத்து, ஆங்காங்கே திரையரங்கமே அதிரும் வகையில் காமெடி, அருமையான விஷுவல் எஃபெக்ட்ஸ், திகில், என மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து ஹாரர் காமெடியாக பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.

மொத்தத்தில்  Avni Cinemax P Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும்  Benzz Media Pvt Ltd சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் இணைந்து தயாரித்திருக்கும் அரண்மனை 4 பட்டி தொட்டி எங்கும் குடும்பங்கள் கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹாரர் காமெடி.