அயோத்தி விமர்சனம்: அயோத்தி மனிதகுலத்தின் மாண்பினையும், கண்ணியத்தையும் பறை சாற்றும் உணர்ச்சிகளின் குவியலோடு அழுத்தமான பதிவு | ரேட்டிங்: 4/5

0
381

அயோத்தி விமர்சனம்: அயோத்தி சிக்கலான சட்ட திட்டங்களையும், சாதி, மதங்களை தாண்டி மனிதகுலத்தின் மாண்பினையும், கண்ணியத்தையும் பறை சாற்றும் உணர்ச்சிகளின் குவியலோடு அழுத்தமான பதிவு | ரேட்டிங்: 4/5

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்த அயோத்தி  படத்தில் சசிகுமார், யஷ்பால் ஷர்மா, பிரித்தி அஸ்ரானி, புகழ், அஞ்சு அஸ்ரானி  மற்றும் அட்வந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி. ஒளிப்பதிவு-மாதேஷ்மாணிக்கம், இசை-என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டர்-சான் லோகேஷ், கலை-ஜி.துரைராஜ், சண்டை-தினேஷ் சுப்பராயன், நடனம்-ஷெரிஃப், உடை-கீர்த்திவாசன், தயாரிப்பு நிர்வாகி-லிண்டா அலக்சாண்டர், பிஆர்ஒ-நிகில்.

அயோத்தியில் வசிக்கும் பல்ராம் தன் மனைவி ஜானகி, மகள் ஷிவானி மற்றும் மகன் சோனு ஆகியோருடன் புனித யாத்திரைக்காக இரயிலில் ராமேஸ்வரம் வர ஏற்பாடு செய்கிறார். மத நம்பிக்கையும், பிடிவாதம், கண்டிப்பு, ஆணாதிக்க எண்ணம் கொண்ட பல்ராமிடம் பேசவே அவரது குடும்பத்தினர் பயப்படும் அளவிற்கு நடந்து கொள்வார். அயோத்தியிலிருந்து புறப்பட்டு மதுரையில் இறங்கும் பல்ராம் குடும்பத்தினர் அதன் பின் கால் டாக்சி பிடித்து மீதிப்பயணத்தை தொடர்கின்றனர். போகும் வழியில் பல்ராம் டிரைவரிடம் வாய் தகராறில் ஈடுபட இந்த நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. அதில் படுகாயம் அடையும் ஜானகியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்து விடுகிறார். பல்ராம் சொந்த ஊருக்கு போஸ்ட் மார்டம் செய்யாமல் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, மகள் ஷிவானி தலையிட்டு டிரைவரின் நண்பர்களான சசிகுமார், புகழுடன் கெஞ்சி ஊருக்கு செல்ல எற்பாடு செய்யுமாறு மன்றாடுகிறார். தந்தையிடம் குழந்தைகள் படும் துன்பத்தை கண்டு உடலை விமானத்தில் எடுத்துச் செல்ல போதியு பணம் வேண்டும் என்பதாலும்,செல்வதற்கான ஆவணங்களை துரிதமாக தயார் செய்ய வெண்டும் என்பதால் சசிகுமார் இவர்களுக்கு உதவ முன்வருகிறார். நண்பர்களின் உதவியோடு பல தடங்கல்களை தாண்டி சசிகுமார் எப்படி வட நாட்டு குடும்பத்தை இறந்த தாயின் உடலுடன் அனுப்பி வைக்கிறார் என்பதே நெஞ்சை நெகிழ செய்யும் க்ளைமேக்ஸ்.

டிரைவரின் நண்பராக முதலில் சிறிய உதவி செய்து விட்டு செல்ல நினைக்கும் சசிகுமார் பின்னர் மொழி தெரிhயாத குடும்பத்திற்காக இரக்கப்பட்டு, பணம், உதவிகள் என்று பிரதிபலன் எதிர்பாராமல் சகோதரனைப் போல் கூடவெ இருந்து செய்யும் செயலால் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். முக்கிய ஆவணங்களுக்காக ஒவ்வொரு இடமாக ஒடி எடுக்கும் முயற்சிகள் கை தட்டல் பெறுகிறது. அதன் பின் விமான நிலையத்தில் விடுக்கும் வேண்டுகோளும், தன் பெயரை சொல்லும் கடைசி காட்சியில் ஆச்சர்ய பட வைக்கிறார். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் மனதை கவர்கிறார்.

தேர்ந்த நடிகராக பல்ராமாக வரும் யஷ்பால் ஷர்மா நடை, உடை, பாவனை என்று மிரட்டலுடன், மற்றவர்கள் வெறுக்கும் அளவு நடந்து கொள்ளும் நடிப்பிற்கு தனித்திறன் வேண்டும் அதை நிறைவாக செய்துள்ளது தான் படத்தின் முக்கியம்சம்.
மகள் ஷிவானியாக பிரித்தி அஸ்ரானி உணர்ச்சிகளின் குவியலாக காட்டும் முகபாவங்கள், தந்தையின் கண்டிப்பை தாங்க முடியாமல் தவிப்பது, எதிர்த்து பேச முடியாமல் இருந்தாலும், முக்கியமான நேரத்தில் தந்தையின் தவறை சுட்டிக் காட்டும் விதம் அற்புதம். படம் முழுவதும் இவரின் நடிப்பு உச்சம் தொட்டுள்ளது.

குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு இந்தப் படத்தில் நடிகர் புகழ்க்கு கிடைத்துள்ளது, அதை சரியாக பயன்படுத்தியுள்ளார். அஞ்சு அஸ்ரானி  அமைதியான, இன்னலை மனதிலேயே சகித்துக் கொள்ளும் அம்மாவாக, குழந்தைகளின் தேவையறிந்து உதவும் தாயாக கொஞ்ச நேரமே நடிக்கும் காட்சிகள் இருந்தாலும், இறந்த பின் அவரைச் சுற்றியே கதை சுழல்வதால் அவரின் புன்னகை மாறாத முகம் கண் முன்னே நிழாலாடுகிறது.மகனாக  அத்வந்த் சிறந்த தேர்வு.

ஒளிப்பதிவு-மாதேஷ்மாணிக்கம், இசை-என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டர்-சான் லோகேஷ், கலை-ஜி.துரைராஜ், சண்டை-தினேஷ் சுப்பராயன் ஆகிய சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பும், முயற்சியும் படத்தின் இன்றியமையாத காட்சிகளுக்கு உயிர் கொடுத்து ஜீவனுள்ள படமாக்கியுள்ளனர்.

வடநாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு வரும் நடுத்தர குடும்பத்தின் கதையை மொழி தெரியாத புரியாத இடத்தில் எதிர்பாராத அசம்பாவிதம் நடக்க அவர்களுக்கு உதவ முன் வரும் மனித நேயமிக்க மனிதர்களை பற்றிய திரைக்கதையில் படம் முழுவதும் தோய்வில்லாமல், உணர்ச்சிகளின் பிரதி பிம்பமாக, மனதை நெகிழ செய்யும் காட்சிகள், சம்பவங்கள், சூழ்நிலைகளை தத்ரூபமாக கொடுத்து அசர வைத்து பிரமிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி. ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பாராத தருணங்களை வித்தியாசமான கோணத்தில் கொடுத்து மொழிக்கு அப்பாற்பட்டது அன்பும், அரவணைப்பும், சகோர பாசமும் என்று நிரூபித்துள்ளார். இந்தியும், தமிழும் ஒரு சேர பேசினாலும் மொழிபெயர்ப்பு இல்லாமல் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு காட்சிப்படுத்தியிருப்பது தான் படத்தின் ஹைலைட்.அயோத்தி என்ற பெயர் படத்திற்கு பொருத்தமான தலைப்பு என்பதை படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள். வெல்டன்.

மொத்தத்தில், டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் அயோத்தி சிக்கலான சட்ட திட்டங்களையும்,  சாதி, மதங்களை தாண்டி மனிதகுலத்தின் மாண்பினையும், கண்ணியத்தையும் பறை சாற்றும் உணர்ச்சிகளின் குவியலோடு அழுத்தமான பதிவு.