அயலி விமர்சனம் : அயலி பெண்ணின் வலிமையையும், கல்வியையும் ஒரு சேர பறை சாற்றும் துணிச்சல் நிறைந்த சாகசப்பெண்

0
324

அயலி விமர்சனம் : அயலி பெண்ணின் வலிமையையும், கல்வியையும் ஒரு சேர பறை சாற்றும் துணிச்சல் நிறைந்த சாகசப்பெண்

எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, டிஎஸ்ஆர்.தர்மராஜ், லல்லின், காயத்ரி, தாரா, மேலோடி, பிரகதீஷ்வரன், ஜென்சன்,சிறப்பு தோற்றத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில்வேல், பகவதிபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
அயலி படத்தின் திரைக்கதை, வசனத்தை வீணை மைந்தன், சச்சின் ஆகியோருடன் சேர்ந்து முத்துக்குமார் ஏழுதி இயக்க, 8 எபிசோடுகள் அடங்கிய அயலி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.இசை-ரேவா, எடிட்டிங்-கணேஷ் சிவா, ஒளிப்பதிவு-ராம்ஜி, பிஆர்ஒ ஏய்ம் சதீஷ்.

1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள வீரபண்ணை கிராமத்தில் அயலி என்ற தெய்வ வழிபாடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்துவைக்க வேண்டும். இத்தகைய கிராமத்தில் தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது. அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதனை தனது அம்மாவின் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதும், இவை அனைத்தையும் தாண்டி தமிழ் செல்வி வீரப்பன்னை கிராமத்தைச் சேர்ந்த இதர சிறுமிகளின் வாழ்க்கையில் ஒளி வீசச்செய்து ஒரு வழிகாட்டியாக திகழ்வதில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ்ச்செல்வியாக அபிநயஸ்ரீ நேர்த்தியான தேர்ந்த நடிப்பால் படத்தின் சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறார். துடிக்கான கேள்விகள், போராட்ட குணம் கொண்ட இளம் மாணவியாக படிக்க துடிக்கும் ஆசையை நிறைவேற்ற எந்ந முடிவையும் எடுக்க துணியும் தைரியம் நிறைந்த பெண்ணாக அசத்தியுள்ளார்.

அம்மா குருவம்மாளாக அனுமோல், அப்பா தவசியாக அருவி மதன்,  சத்திவேலாக லிங்கா, திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், தோழி மைதிலியாக லல்லின், ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா, செல்வியாக மேலோடி, முருகனாக  பிரகதீஷ்வரன், சேகராக ஜென்சன் ஆகியோர் கிராமத்து மண் மாறாத கதாபாத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஆங்கில வாத்தியாராக ஸ்மிருதி வெங்கட், கலெக்டராக செந்தில்வேல், எம்எல்ஏவாக பகவதிபெருமாள் ஆகியோர் படத்திற்கு பக்கபலமாக வந்து போகின்றனர்.

திரைக்கதை, வசனம்-வீணை மைந்தன், சச்சின், இயக்குனர் முத்துக்குமார் படத்தின் ஜீவநாடிகள்.

இசை-ரேவா, எடிட்டிங்-கணேஷ் சிவா, ஒளிப்பதிவு-ராம்ஜி சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களாக படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி கொடுத்துள்ளனர்.

மருத்துவராக வேண்டும் என்று கனவு காணும் ஒரு இளம் பெண்ணைப் பற்றிய சமூக விழிப்புணர்வுக் கதை அயலி. வீரப்பன்னை கிராமத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் பருவமடைந்தவுடன் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை சுற்றி கதை நகர்கிறது. இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்றால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒரு இளம் பெண் தனக்கு சாதகமாக்கி மூடநம்பிக்கையை எப்படி ஒட விரட்டுகிறாள் எழுச்சியையும், படிப்பையும்  சொல்லி புரிய வைத்து சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர் முத்துக்குமார். இன்றைய காலகட்டத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் பல கிராமங்களில் சில மூடநம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை கடைப்பிடித்து  வருவதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்த முற்படுகிறார் இயக்குனர் முத்துக்குமார்.

மொத்தத்தில் எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், 8 எபிசோடுகள் நிறைந்த ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் அயலி பெண்ணின் வலிமையையும், கல்வியையும் ஒரு சேர பறை சாற்றும் துணிச்சல் நிறைந்த சாகசப்பெண்.