அஞ்சாமை சினிமா விமர்சனம் : அஞ்சாமை நீட் தேர்வு நடைமுறைக்கு எதிரான சாட்டையடி | ரேட்டிங்: 3.5/5

0
471

அஞ்சாமை சினிமா விமர்சனம் : அஞ்சாமை நீட் தேர்வு நடைமுறைக்கு எதிரான சாட்டையடி | ரேட்டிங்: 3.5/5

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், வெளியிட்டுள்ள படம் ‘அஞ்சாமை’. திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார்.

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு  கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, ராமசுதர்சன் எடிட்டிங் கவனிக்க, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு ஜான்சன்.

அருந்தவம் (கிருத்திக் மோகன்) திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள காவல்நிலையத்திற்குள் ஓடி வந்து அரசாங்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, ஒரு காவலரிடம் இருந்து பறிக்கும் துப்பாக்கியுடன்  தன்னைத் தானே சுட்டுக்கொள்வதாக மிரட்டுவதில்  படம் தொடங்குகிறது. காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் (ரஹ்மான்) அந்த மாணவனை சமாதானப்படுத்தி, அவனுடைய கதையை கேட்க முடிவு செய்கிறார். காந்திகிராமத்தில் கூத்து கலைஞரும் விவசாயியுமான சர்க்கார் (விதார்த்), தனது மனைவி சரசு (வாணி போஜன்), மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் மூத்த மகன் அருந்தவம் (கிரிதிக் மோகன்) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில்  முதலாவதாக வர மருத்துவராக ஆசைப்படும் மகனின் கனவை நிறைவேற்ற தந்தை பாடுபடுகிறார். மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுக்காக வயல், பாசமாக வளர்த்து வந்த பசு மாடு என ஒவ்வொன்றாக விற்று படிக்க வைக்கிறார். மகன் மருத்துவ கல்விக்காக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நீட் என்ற நுழைவுத் தேர்வு எழுத ஜெய்ப்பூருக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த நுழைவுத்தேர்வு எவ்வளவு பிரச்சனைகளும், இன்னல்களை ஏற்படுத்தி பல மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுத்து சிரமத்திற்கு ஆளாக்குகிறது? சர்க்காரின் குடும்பத்தில் பெரும் இழப்பும் ஏற்படுகிறது? அதன் பின் சர்க்கார் மகனின் மருத்துவ கனவு நிறைவேறியதா? நீட் தேர்வால் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன? அதன் தடைகளை எதிர்த்து அருந்தவமும், இன்ஸ்பெக்டராக இருந்த வழக்கறிஞராக மாறும் மாணிக்கமும் எப்படி போராடுகிறார்கள் என்பதே படத்தின் கதை.

மருத்துவராக ஆசைப்படும் மகனின் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகும் கூத்து கலைஞரும் விவசாயியுமான சர்க்கார் கதாபாத்திரத்தில் வாழ்ந்து உள்ளார் விதார்த். ஒரு அப்பாவாக தன் குழந்தைகளின் நலனுக்காகத் தன்னை வருத்தி, பல வலிகளை தாங்கி அதை அப்படியே உடல் மொழி மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கண் கலங்க வைத்து உள்ளார்.

வாணி போஜன் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக சரசு கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். என்றாலும் முக்கியமான கோர்ட் காட்சிகளில் அவர் காணப்பட வில்லை, அது ஏன்? என்பதை படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

விதார்த்தின் மகன் அருந்தவமாக கிருத்திக் மோகன் தனது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தி உள்ளார்.

மாணிக்கம் கதாபாத்திரத்தில் ரகுமான் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து வழக்கறிஞராக மாறி படத்தின் இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் நீட் தேர்வை பற்றி மக்கள் சார்பாக அரசாங்கத்தின் பார்வைக்கு பல நியாயமான கேள்விகளை முன் வைத்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு உயிரூட்டி உள்ளார்.

கார்த்திக் ஒளிப்பதிவு, ராகவ் பிரசாத் இசை, கலா சரண் பின்னணி இசை, ராமசுதர்சன் எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு திரைக்கதைக்கு வலு சேர்த்து உள்ளது.

நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து அடுக்கடுக்கான கேள்விகளை தொடுக்கும் படமாக அஞ்சாமை உருவாகியுள்ளது. நீட் தேர்வின் நடை முறையால் ஏற்படும் மாணவர்களின் மன அழுத்தத்தை சிறப்பாக காட்சி படுத்தி உள்ளார்; இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன். என்றாலும் மருத்துவம் பயில மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்பதை செல்லாமல் முடித்துள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ள அஞ்சாமை நீட் தேர்வு நடைமுறைக்கு எதிரான சாட்டையடி.