ஃபர்ஹானா விமர்சனம் : ஃபர்ஹானா உழைக்கும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விவரிக்கும் அழுத்தமான படம் | ரேட்டிங்: 3.5/5

0
414

ஃபர்ஹானா விமர்சனம் : ஃபர்ஹானா உழைக்கும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விவரிக்கும் அழுத்தமான படம் | ரேட்டிங்: 3.5/5

டீரிம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் ஃபர்ஹானா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன்.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், கிட்டு, ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- வசனம்-மனுஷ்யபுத்ரன், நெல்சன் வெங்கடேசன், சங்கர் தாஸ், திரைக்கதை- நெல்சன் வெங்கடேசன், சங்கர் தாஸ்,ரஞ்சித் ரவீந்திரன், இசை-ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு-கோகுல் பினாய், எடிட்டர்-சாபு ஜோசப், கலை-சிவசங்கர், பாடல்கள்-யுகபாரதி, உமாதேவி, பிஆர்ஒ-ஜான்சன்.

பழமைவாத முஸ்லீம் குடும்பத்தில் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒரு சாதாரண இல்லத்தரசி மற்றும் இரண்டு குழந்தைகளின் அம்மா. அவரது கணவர்; காலணி கடை நடத்தினாலும் போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறார். குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சனையால், அவள் கணவனையும் தந்தையையும் சமாதனப்படுத்தி வேலைக்கு செல்கிறாள். ஃபர்ஹானா ஒரு கால்-சென்டரில் வேலைக்கு சேர, இது எதிர்பாராத விதமாக அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. வேலைக்கு சென்ற இடத்தில் அதிக இன்சென்டிவ் கிடைக்கும் இன்னொரு டீம் பற்றி அறியும் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த டீமில் வேலைக்கு சேர அதன் பின் அவள் நன்றாக சம்பாதித்து குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறாள். ஆனால் அவள் வாழ்வில் புதிய பிரச்சனைகள் வருகின்றன. அது அவள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. தயாளன் (செல்வ ராகவன்) யார்? ஃபர்ஹானா அவனை எப்படிக் கையாளுகிறாள், அவளுக்கு வரும் பிரச்சனைகள்தான் கதையின் மையக்கரு.

ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் டைட்டில் ரோலில் நடித்து நேர்மையாகவும், பொருத்தமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி படம் முழுவதையும் தன் தோளில் சுமந்து அசத்தலுடன் நடித்திருக்கிறார். அவரது உழைப்பு அபரிதமானது.

ஐஸ்வர்யாவின் கணவர் கரீமாக ஜித்தன் ரமேஷ் ஒரு நல்ல கணவனாக தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நீதியை வழங்குகிறார். நடிகர் கிட்டி, ஃபர்ஹானாவின் மத மற்றும் கட்டுப்பாடான தந்தையான அஜீஸ் பாயாக நடித்து தன் பங்கை நன்றாக செய்கிறார். நித்யாவாக அனுமோல் ஒரு துணைக் கதாபாத்திரமாகவும், மாடர்ன் கேர்ள் சோபியாவாக ஐஸ்வர்யா தத்தா கவனிக்கப்படுகிறார். செல்வ ராகவன் இசையமைப்பாளர் தயாளன் பாத்திரம் நிறைய ஆழம் கொண்டதாகவும், கதை அவரைச் சுற்றியே செல்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் செல்வ ராகவன் இடையேயான காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை பாராட்டுக்குரியது. கோகுல் பெனாயின் காட்சிகள் ஈர்க்கின்றன. மெதுவான கதையைத் தவிர்த்து சாபு ஜோசப் எடிட்டிங் நன்றாக உள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு கண்ணியமானது. டெக்னிக்கலாக, ஃபர்ஹானாவை குறிப்பிடும்படியாக குறை எதுவும் இல்லை.

ஃபர்ஹானாவின் கதைக்களம் மிகவும் எளிமையானது. இஸ்லாம் குடும்பப்பெண்ணையும், அவளது வாழ்வியல் நெறிமுறைகளையும் கலந்து ஈர்க்கும் திருப்பங்களுடன் கதையாகப் பின்னப்பட்ட விதம் அதைச் செயல்படுத்தி எழுதிய விதத்தில் கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

மொத்தத்தில் டீரிம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் ஃபர்ஹானா உழைக்கும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விவரிக்கும் அழுத்தமான படம்.