கடைசி விவசாயி விமர்சனம்: கடைசி விவசாயி கடைக்கோடி மக்களை சென்றடைந்து சிந்திக்க வைக்கும் வெற்றியில் பிரமிக்க வைத்து விருதுகளை குவிக்கும்

0
212

கடைசி விவசாயி விமர்சனம்: கடைசி விவசாயி கடைக்கோடி மக்களை சென்றடைந்து சிந்திக்க வைக்கும் வெற்றியில் பிரமிக்க வைத்து விருதுகளை குவிக்கும்

ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன் சார்பில் ம.மணிகண்டன் தயாரிப்பில் விஜய்சேதுபதி வழங்கும் கடைசி விவசாயி படத்தில் தெய்வத்திரு.நல்லாண்டி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்சல் ரெபேக்கா, டி.முனீஸ்வரன், ஜி.காளிமுத்து, சாப்ளின் சுந்தர், காளைப்பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ம.மணிகண்டன்.இசை-சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்லி, ஒளிப்பதிவு-ம.மணிகண்டன், படத்தொகுப்பு-பி.அஜித்குமார், கலை இயக்குநர்-தோட்டாதரணி, பாடல்கள்-அறிவு, உடை-ம.மணிகண்டன், ஒலி-எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், சிகை-சரவணன், கலரிஸ்ட்-பாலாஜி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்-சிவா, விளம்பர வடிவமைப்பு-ஜெகன் மற்றும் சபா டிசைன்ஸ், முதன்மை நிர்வாகத்தயாரிப்பு-எம்.சிவகுமார், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

எண்பது வயதை கடந்த விவசாயி நல்லாண்டி, இந்த முதிய வயதிலும் விவசாயம் செய்து, ஆடு, மாடு, கோழி வளர்த்து சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவருக்கு ஒரே மகன் மனம் போன போக்கில் நாடோடியாக திரியும் விஜய்சேதுபதி. தந்தையின் நினைப்பு வரும் போது வந்து பார்த்து விட்டு செல்லும் பழக்கம் கொண்டவர். இதனிடையே கிராமத்தில் பழமையான ஆலமரம் மின்னல் தாக்கியதால் எரிந்து விட, இதற்கு பரிகாரமாக மரத்தடியில் இருக்கும் குலதெய்வத்திற்கு திருவிழா எடுத்தால் கெடுதல் போய் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு ஊர் பெரியவர்கள் முடிவு எடுக்கின்றனர்.இதற்காக சுற்று வட்டார கிராம பெரியவர்களிடம் விவசாய விளை பொருட்களை திருவிழாவிற்கு படையல் கொடுக்குமாறு கூறுகின்றனர். ஆனால் அனைவரும் விவசாய நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்று விடுவதால் விவசாயி நல்லாண்டியை நெற்மணிகளை விளைவித்து தருமாறு வலுவுறுத்துகின்றனர். நல்லாண்டியும் தன் நிலத்தில் உழுது நாற்று நட்டு காத்திருக்கிறார். இந்த சமயத்தில் நிலத்தின் அருகே மூன்று மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து தன் நிலத்திலேயே புதைத்து விடுகிறார். இந்தகவலை அறியும் போலீஸ் நல்லாண்டியை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அதன் பின் நல்லாண்டியால் திருவிழாவிற்கு நெற்மணிகளை விளைவித்து கொடுக்க முடிந்ததா? நல்லாண்டி நிரபராதி என்ற தீர்ப்பு கிடைத்ததா? பயிரிடப்பட்ட நெற்கதிரிகளை காப்பாற்ற முடிந்ததா? கோயில் திருவிழா வெற்றிகரமாக நடந்ததா? என்பதே க்ளைமேக்ஸ்.

தெய்வத்திரு.நல்லாண்டி நடை, உடை, பாவனை, பேச்சு என்று அசல் விவசாயி மாயாண்டியாக வாழ்ந்து மனதை விட்டு அகலாத நினைவுகளை விளைவித்து விட்டு அவர் மறைந்தாலும், ரசிகர்களின் மனதில் அறுவடை செய்து என்றும் நிலைத்து நிற்பார்.

விஜய்சேதுபதி, யோகிபாபு இருவரின் கதாபாத்திரத்தின் பங்களிப்பும் முக்கியமாக படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

நீதிபதியாக ரேய்சல் ரெபேக்கா அசத்தல் நடிப்பும் இறுதியில் உறுதியாக எடுக்கும் முடிவே படத்திற்கு பலம். டி.முனீஸ்வரன், ஜி.காளிமுத்து, சாப்ளின் சுந்தர், காளைப்பாண்டியன் மற்றும் பல கிராமத்து முகங்கள் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர்.

அறிவின் பாடல் வரிகளில் சந்தோஷ் நாராயண் மற்றும் ரிச்சர்ட் ஹார்லியின் இசை கிராமத்து மெல்லிசை.முருகன் பாடல்கள் படத்திற்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.

படத்தொகுப்பு-பி.அஜித்குமார், கலை இயக்குநர்-தோட்டாதரணி ஆகியோர் படத்தின் வெற்றிக்காக முழு மூச்சாக உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது.
விவாசாயின் வாழ்வியலை மாயாண்டியின் கதாபாத்திரத்தின் மூலமாக விரிவாக விவரித்து, அவரின் கடின உழைப்பு தடைபடும் போது நம்மையும் பதற வைத்து, இறுதிக் காட்சியில் ஒரு நிமிடம் அதிர்ச்சியடையவைத்து, பின்னர் நிம்மதி பெருமூச்சு விடும் அளவு மாயாண்டியாக உள்வாங்கி வாழ்ந்திருக்கும் நல்லாண்டியை நம் கண் முன் நிறுத்திய இயக்குனர் ம.மணிகண்டனுக்கு பாராட்டுக்கள். இப்படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி உடை, ஒளிப்பதிவு என்று கடினமாக பாறையை செதுக்கி அழகிய சிலையாக்கிய சிற்பி போல் ம.மணிகண்டன் இயக்கியிருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ட்ரைபல் ஆர்ட்ஸ் புரொடக்ஷன் சார்பில் ம.மணிகண்டன் தயாரிப்பில் விஜய்சேதுபதி வழங்கும் கடைசி விவசாயி கடைக்கோடி மக்களை சென்றடைந்து சிந்திக்க வைக்கும் வெற்றியில் பிரமிக்க வைத்து விருதுகளை குவிக்கும்.