மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடல் சென்னை, பெசன்ட் நகரில் இன்று தகனம் செய்யப்படுகிறது

0
275

மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் உடல் சென்னை, பெசன்ட் நகரில் இன்று தகனம் செய்யப்படுகிறது

சென்னை, தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.

பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. இவருடைய திடீர் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.

பழம்பெரும் பின்னணிப் பாடகியான திருமதி வாணிஜெயராம் அவர்களின் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திருமதி வாணிஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.