பீஸ்ட் : மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்

0
64

பீஸ்ட் : மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய்

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். சமீபத்தில், இப்படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது.

விஜய் ‘பீஸ்ட்’ படத்திற்காக 120 நாட்கள் ஒதுக்கியுள்ளார். தற்போதுவரை ஜார்ஜியா, சென்னை, டெல்லி என்று இதுவரை 75 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர் அடுத்ததாக சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்தப் பின்பு பிரம்மாண்ட இறுதிக்கட்ட சண்டைக் காட்சிக்காக மீண்டும்  ’பீஸ்ட்’ படக்குழு ஜார்ஜியா செல்லவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் மூன்று வில்லன்கள் என்றும் அதில் செல்வராகவன் மெயின் வில்லன் என்றும் சொல்லப்படுகிறது. டிசம்பரில் முழு படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நெல்சன் திலீப்குமார் “ பீஸ்ட் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ‘வேற மாரி’ இருக்கும். புது ஜானரில் பண்ணிருக்கேன். விஜய் சார் வைத்து பண்ணும்போது விஜய் சாருக்கும் புதிதாக இருக்கவேண்டும். எனக்கும் புது முயற்சியாக இருக்கவேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் படத்தை இயக்கியிருக்கிறேன். கண்டிப்பாக புதிதாக இருக்கும்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.