‘ஆட்சிகள் மாறினாலும் கொடுமைகள் மாறவில்லை’ – பா.ரஞ்சித் ஓப்பன் டாக்!

0
338

‘ஆட்சிகள் மாறினாலும் கொடுமைகள் மாறவில்லை’ – பா.ரஞ்சித் ஓப்பன் டாக்!

வேங்கை வயல் சம்பவத்தில் தமிழக அரசு விரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தில் சிறுமி ஸ்ரீமதி, ஹரிக்கிருஷ்ணன் அன்புதுரை, ஜி.எம் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள நிலையில் அறிமுக இயக்குநர் ஷான் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகிபாபு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பா.ரஞ்சித், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவுகளை கலந்த விவாகரம் பற்றி பேசினார்.

இது குறித்து பா.ரஞ்சித் பேசும் போது, “ ஆட்சிகள் மாறினாலும், தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதிகள், தீண்டாமை கொடுமைகள் மாறாது என்பதை வேங்கை வயல் மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறன.

சமூகநீதியில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்க கூடிய திமுக அரசு இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்; திமுக ஆட்சியில் திருவண்ணாமலை கீழூர், வேங்கை வயல் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆகையால் இது போன்ற சம்பவங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சில நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், சாதிய அடக்குமுறை ஒழிந்ததா என்றால், அதில் பெரிய பின்னடவே இருக்கிறது. ஆகையால் அதை சரியாக புரிந்து கொண்டு அவர்கள் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று பேசினார்.