4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று திறப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து (செப்டம்பர் 6-ம் தேதி வரை) தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன.
இன்று பெரும்பாலான தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும் வருகிற வெள்ளிக்கிழமை அதிக படங்கள் திரைக்கு வரும் என்பதால் அன்று முதல் 100 சதவீதம் தியேட்டர்கள் இயங்கும் என்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தியேட்டர்கள் திறப்பதால் திரைக்கு வராமல் முடங்கி உள்ள 40-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாக ரிலீசாகாமல் இருக்கும் விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை உடனடியாக திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
இதுபோல் படப்பிடிப்பு முடிந்த கங்கனா ரணாவத் நடித்துள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, காஜல் அகர்வால் நடித்த கருங்காப்பியம், அருண் விஜய் நடித்துள்ள அக்னி சிறகுகள், சினம், சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், விஜய் ஆண்டனியின் தமிழரசன், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, விஷால், ஆர்யா நடித்துள்ள எனிமி, விக்ரம் பிரபுவின் டாணாக்காரன், கவுதம் கார்த்திக்கின் ஆனந்தம் விளையாடும் வீடு, சுந்தர்.சியின் அரண்மனை 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.
சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ், பிரபுதேவா நடித்துள்ள பாஹீரா, அசோக் செல்வன் நடித்துள்ள ஹாஸ்டல், ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம், அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த, சந்தானம் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம், திரிஷாவின் ராங்கி, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள கட்டில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓமன பெண்ணே, சிவாவின் சுமோ, இடியட், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஆர்.கே.சுரேசின் விசித்திரன் உள்ளிட்ட மேலும் பல படங்களும் திரைக்கு வர உள்ளன.
ஓ.டி.டியில் வெளியிட பேசி வந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் தியேட்டரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை, நயன்தாராவின் நெற்றிக்கண் படங்களையும் தியேட்டரில் திரையிட ஆலோசிக்கிறார்கள்.
அதேபோல பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல் குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று முழுவதும் மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடந்தன.
இதுவரை கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடற்கரைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.
நான்கு மாத காலத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூங்காக்கள், கடற்கரைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.