10 தேசிய விருதுகள் வென்ற இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்

0
91

10 தேசிய விருதுகள் வென்ற இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

பெரும்பாலும் மலையாள திரையுலகில் பணியாற்றிய அவருக்கு வயது 90. சில காலமாக வயது மூப்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த சேது மாதவனுக்கு மனைவி வல்சலா, சந்தோஷ், உமா மற்றும் சோனுகுமார் என மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.

தனது படைப்புகளுக்காக பத்து தேசிய திரைப்பட விருதுகள், சிறந்த இயக்கத்திற்கான நான்கு விருதுகள் உட்பட ஒன்பது கேரள மாநில விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் இயக்குநர் சேதுமாதவன். சிவக்குமார் மற்றும் ராதா நடிப்பில் அவர் இயக்கிய ‘மறுபாக்கம்’ என்ற தமிழ் திரைப்படம் 1991-ல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. முக்கியமாக 1962-ல் நடிகர் கமல் ஹாசனை மலையாளத்தில் ‘கண்ணும் காரலும்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சேதுமாதவன்.

1962-ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசனை ’கண்ணும் காரலும்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய சேதுமாதவன், பின்னாளில் அவரை வைத்து ‘நம்மவர்’, எம்.ஜி.ஆரின் நாளை நமதே உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். அதோடு 2009-ம் ஆண்டு ஜே.சி.டேனியல் விருதையும் பெற்றார் இயக்குநர் சேதுமாதவன்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “காலத்தால் அழியாத காவியங்களை திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச் சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.