ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு?

0
39

ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு?

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார்.

சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அங்கு சில நாட்கள் அவர் தங்கி இருந்துவிட்டு சென்னை வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைபெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். 71 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த், தீபாவளிக்கு ரிலீஸாகும் தனது அண்ணாத்த திரைப்படத்தை தன் பேரனுடன் பார்த்துவிட்டு அது பற்றி ஆடியோவும் நேற்று வெளியிட்டிருந்தார்.

அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்த படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்’ என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் ஆஸ்பத்திரிக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.

தற்போது ரஜினிகாந்த் காவேரி ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும்.

ரத்த குழாயில் அடைப்பு, அது கிழிந்து போதல், ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு ஏதுவும் ஏற்படாது என டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.