மெல்லிசை கலைஞர்களுக்கு 20 லட்சத்திற்கு மேல் நன்கொடை நிதி வசூலித்து உதவிய பாடகர் சத்யன் மகாலிங்கம்!

0
170

மெல்லிசை கலைஞர்களுக்கு 20 லட்சத்திற்கு மேல் நன்கொடை நிதி வசூலித்து உதவிய பாடகர் சத்யன் மகாலிங்கம்!

தனி மனிதனாக பாடகர் சத்யன் மகாலிங்கம் பாடி இதுவரை 20 லட்சத்திற்கு மேல் நன்கொடை நிதி வசூலித்து சாதனை படைத்து உதவியுள்ளார்.

இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக உள்ள சத்யன் மகாலிங்கம் அவர்கள் வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை இசைத்துறையில் பாடகராக அடியெடுத்து வைத்தார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் பாடியுள்ளார்.

“விழித்திரு” என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளரான இவர், தற்பொழுது மேலும் பல தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

மேடைப்பாடகராக தன் இசைப்பயணத்தை துவக்கிய சத்யன் மகாலிங்கம், தான் கடந்து வந்த மேடை மெல்லிசை பாதையை மறக்காமல், இந்த இக்கட்டான கொரோனா கால கட்டத்தில், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு உதவ, முகநூல் வாயிலாக மூன்று மாதங்களுக்கும் மேலாக தினந்தோறும் பாடி வருகின்றார். அதன் மூலமாக வசூலாகும் நன்கொடைகளை தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்களை ஒருங்கிணைத்து செயல்படும் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கு நேரடியாக வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் அளித்து, அவர்கள் மூலமாக சென்னையில் உள்ள பெரும்பான்மையான இசைக் கலைஞர்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களுக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் 1000 / – செலுத்த உதவி உள்ளார் . இந்த வகையில் இதுவரை 16 லட்சம்ரூபாய் இவர் திரட்டிய நிதியில் இருந்து இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, மாவட்டம் தோறும் உள்ள இசைக் குழுக்களுக்கு முகநூல் வாயிலாக தினமும் இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பினை அளித்து, அந்த இசைக்குழுவிற்கு 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளன்று வரும் நன்கொடையையும் நேரடியாக அவரவர்களின் வங்கி கணக்கிற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்து, பல இசைக் குடும்பங்களுக்கு உதவி உள்ளார். தனி மனிதனாக இவர் பாடி இதுவரை 20 லட்சத்திற்கு மேல் நன்கொடை நிதி வசூலித்து சாதனை படைத்து உதவியுள்ளார்.

இதற்கும் மேலாக சென்னையில் உள்ள இசைக் கலைஞர்களின் இரண்டு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் மற்றும் +2 தேர்வில் 85% அதிகமான மதிப்பெண்கள் எடுத்த இசைக்கலைஞர்களின் குழந்தைகளுக்கும் உதவ உள்ளார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.

அண்ணா நகர் விமலம் மெஸ், சிங்கப்பூர் அப்பலோ செல்லப்பாஸ் மற்றும் சிங்கப்பூர் பனானா லீப் ரெஸ்டாரன்ட், ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவரின் இத்தகைய சாதனைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்

இவரின் சாதனையை போற்றும் வகையில் தமிழகம் முழுவதுமுள்ள மேடை மெல்லிசைக் கலைஞர்கள் ஒன்று கூடி இவரின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாக முகநூலில் இவரின் “100 வது நாள்” நிகழ்ச்சியினை வரும் 2020, ஆகஸ்ட், 11ஆம் தேதி, வெகு சிறப்பாக கொண்டாட உள்ளார்கள்.