மாஸ்டர் விமர்சனம்

0
6

மாஸ்டர் விமர்சனம்

சென்னையில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் ஜே.டி. (விஜய்) அடிக்கடி குடித்துக் கொண்டே இருக்கிறார்;. சில சமயங்களில் கல்லூரிக்கும் தள்ளாடிக் கொண்டே தான் வருகிறார். ஆனால், அவரை மாணவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மாணவர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட மாஸ். ஆனால், பேராசிரியர்கள், முதல்வர் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகத் தரப்பில் நல்ல இமேஜ் இல்லை. இச்சூழலில் மாணவர் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவெடுக்கிறது. தேர்தல் வேண்டும் என்று விஜய் சொல்கிறார். தேர்தலை நடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதில் அசம்பாவிதம் நடந்தால் பணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக தேர்தல் முடிந்த பிறகு கலவரம் வெடிக்கிறது. இதனால் விஜய் பணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

அதன் பின்னர் நாகர்கோவிலில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார்.

அங்குள்ள மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி தன் அடியாள் போல செயல்படுத்திக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இந்த பள்ளி விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர் மாணவர்களை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுத்துகிறார்.

நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த விஜய் அங்கேயிருக்கும் சூழலை அறிந்து கொள்ளாமல் எப்போதும் குடியும், தூக்கமுமாக வாழ்க்கையைக் கழிக்கிறார். அவர்தான் தங்களைக் காப்பாற்றுவார் என்று காத்திருக்கும் இரண்டு சிறுவர்கள் விஜய் சேதுபதியால் கொல்லப்பட, அதன் பிறகு தான் விஜய் முழித்துக் கொள்கிறார். குடியை விடுகிறார். சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களை விஜய் திருத்த முயல்கிறார். அதனால், விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கும் மோதல் உருவாகிறது. அத்துமீறி அநியாயங்களை செய்யும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்கி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

ஜே.டி. கதாபாத்திரத்தில் கல்லூரிப் பேராசிரியராக வரும் விஜய் வழக்கமான பில்டப் காட்சிகள், பன்ச் வசனங்கள் இல்லாமல், எமோஷனல், பாடி லாங்குவேச் மூலம் அசத்தியிருக்கிறார். இளமையான தோற்றத்தை அப்படியே மெயின்டெயின் செய்து சண்டை, டான்ஸ் என தன் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால், பாதிப் படத்திற்கு மேல் விஜய் குடித்துக்கொண்டே இருப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதை போகிற போக்கில் வசனத்தில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.அது ஏற்புடையதாக இல்லை.

நெகட்டிவ்வான பவானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய மிரட்டலான நடிப்பின் மூலம் விஜய்க்கு டஃப் கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார். இன்டெர்வெல் ப்ளாக்கில் ‘ஐ ஆம் வெய்ட்டிங்” என விஜய்சேதுபதி பேசும் வசனத்திற்கு செம்ம ரெஸ்பான்ஸ். கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும்போது விஜய்க்கு டஃப் கொடுத்து, டயலாக் டெலிவரி மூலம் விஜய்யை மிஞ்சிவிடுகிறார்.

விஜய், விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக அர்ஜுன் தாஸ் மிகவும் கவனிக்கப்படும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளார்.

அப்பாவி மாணவர்ளைக் காப்பற்றத் துடிக்கும் ஒரு சமூக சேவகியாக, நாயகனுக்கு கொஞ்சம் உதவி செய்யும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகன் சிறப்பாக நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா எதுக்கு? புரியவில்லை. ஆனால், ஆண்ட்ரியா படத்தில் உள்ளார், வீணடிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தில் எதற்கு நடிக்க சம்மதித்தோம் என படத்தைப் பார்த்தபின் ஆண்ட்ரியா நிச்சயம் யோசிப்பார்.

நாசர், அழகம்பெருமாள், சாந்தனு, கௌரி கிஷண், ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம், நாகேந்திர பிரசாத், ஸ்ரீநாத், ரம்யா, சாய் தீனா, ரமேஷ் திலக், சேத்தன், கல்யாணி நடராஜன், லல்லு, சுனில் ரெட்டி, அருண் அலெக்ஸாண்டர், விஜய் முருகன் உள்ளிட்டோர் சிறிது நேரம் வந்தாலும் நம்மனதில் நிற்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகாக படமாக்கியுள்ளார்.

அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ஓட்டத்திற்கு அனிருத்தின் இசை தான் ப்ளஸ். பின்னணி இசை அட்டகாசம்.

மாநகரம், கைதி என தரமான படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் கருவாக மாணவர்களுக்கான அரசியல் புரிதல் வேண்டும், சிறார் குற்றங்களின் பின்னணி, அதற்கான காரணம், அவர்களை மீட்கும் வழி என புதிய ஒரு கதை களத்தை கையில் எடுத்தது நல்ல விஷயம்தான் ஆனால் திரைக்கதையில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். எல்லா கேரக்டர்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்று மூன்று மணி நேரம் எடுத்திருக்கிறார். பாதிப் படத்திற்கு மேல் கதாநாயகன் குடித்துக்கொண்டே இருப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை மட்டும் மிகக் கச்சிதமாகக் கையாண்ட விதம் சிறப்பு.

மொத்தத்தில் மாஸ்டர் ஜஸ்ட் பாஸ்.