மாநாடு விமர்சனம் : பிரம்மாண்ட சிம்மாசனத்தில் தனியாக ஜொலிக்கும் மாநாடு

0
93

மாநாடு விமர்சனம் :
பிரம்மாண்ட சிம்மாசனத்தில் தனியாக ஜொலிக்கும் மாநாடு

நண்பன் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க துபாயிலிருந்து கோவைக்கு வருகிறார் சிம்பு. திருமண கோலத்தில் இருக்கும் மணப்பெண்ணை கடத்தி பிரேம்ஜிக்கு கட்டி வைப்பதே சிம்புவின் பிளான். இதற்கு உதவியாக கருணாகரன், கல்யாணி இருக்க, சக்சஸ்புல்லாக கடத்தி காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருக்கின்றனர். திடீரென்று டேனியல் குறுக்கே வர விபத்து ஏற்பட்டு போலீசிடம் மாட்டிக்கொள்கின்றனர். போலீஸ் அவர்களை பிடித்து பாழடைந்த பங்களாவிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கே போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா டேனியலுக்கு பதில் சிம்புவை மிரட்டி ஆவணங்களை தயார்படுத்தி முதல்வரை கொல்ல அனுப்புகிறார். அங்கே நடக்கும் சதியை கண்டுபிடிக்கும் சிம்புவினால் முதல்வரை காப்பாற்ற முடியாமல் போகிறது. முதல்வர் இறக்க, சிம்புவும் இறக்க மதக்கலவரத்தையும் தூண்டி விடுகின்றனர். அதற்கு பிறகு சிம்பு ஒரே நாள் நடக்கும் டைம் லூப்பில் மாட்டிக்கொள்ள மீண்டும் உயிர்பெற்று முதல்வரை காப்பாற்ற துரிதமாக செயல்படுகிறார். அதே சமயம் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவும் டைம் லூப்பில் மாட்டிக்கொள்ள இருவரும் எதிரும் புதிருமாக எடுக்கும் முடிவுகளால் யார் காப்பாற்றப்பட்டார்கள்? யார் படுகொலை செய்யப்பட்டார்கள்? என்பதே த்ரில்லிங் க்ளைமேக்ஸ்.

சிம்பு நோ பஞ்ச் வசனம், நோ மாஸ் என்ட்ரி சிம்பிளான அமைதியான நடை, உடை, பாவனை, உச்சரிப்பு என்று யதார்த்தமான நடிப்பு சிம்புவிற்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்து கை கொடுத்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா- சிம்பு மோதிக்கொள்ளும் காட்சிகள் விறுவிறுப்புக்கும் அதிரடி சேசிங் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. சிம்புவிற்கு மாஸ் வெற்றியை கொடுக்கும் படம்.

எஸ்.ஜே.சூர்யா சில காட்சிகளுக்கு பிறகு வந்தாலும் அதன் பின் படம் முழுவதும் தன் தோளிலேயே சுமந்து செல்வது போல் சிறப்பான, க்ளாஸான நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், மாடுலேஷன் முகபாவங்களாலும் உறக்கச் சிறக்க நடிப்பாற்றலால் அசத்தி விடுகிறார். சொல்லிலும் சரி செயலிலும் சரி கில்லி மாதிரி தெறிக்க விடுகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல், கருணாகரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமாக அஸ்திவாரம் போட்டுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையும், ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பத்pவு ஒன்றுபட்ட முயற்சியால் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு படத்தின் வெற்றிக்கு அயராது உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு படத்தின் வேகத்தை அதிகப்படுத்தி உற்சாகத்தோடு பார்க்க தூண்டுகிறது.

ஒரே நாளில் டைம் லூப்பில் மாட்டிக் கொள்ளும் இருவர் எதிரும் புதிருமாக களமிறங்கும் கதைக்களத்தில் புதுவித முயற்சியாக அரசியல் கலந்து எதிர்பாராத திருப்பங்கள் கொடுத்து விறுவிறுப்பாக காட்சிகளமைத்து, தோய்வில்லாமல் இறுதிக் காட்சி வரை எடுத்துச்சென்று லாஜிக்கை மறந்து ரசிக்கும் வண்ணம் அசத்தலான த்ரில்லிங் அனுபவத்தை பயணத்தை லாவகமாக கையாண்டு வசூல் வேட்டையில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள மாநாடு யாரையும் சுட்டு வீழ்த்தாமல் பிரம்மாண்ட சிம்மாசனத்தில் தனியாக ஜொலிக்கிறது.