மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்களில் 3 வேலையும் இலவச உணவு – முதல்வர் உத்தரவு

0
41

மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்களில் 3 வேலையும் இலவச உணவு – முதல்வர் உத்தரவு

பருவமழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

சென்னையில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கொளத்தூரில் ஆய்வு செய்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். உணவின் தரம் நன்றாக இருக்கிறதா என்பதை சாப்பிட்டுப் பார்த்து உறுதி செய்த பிறகு மக்களுக்கு வழங்கினார்.

சென்னை போரூர் அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து உறுதி செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், சென்னை மாநகராட்சியின் நிவாரண முகாம்களில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.