மருத விமர்சனம்: ‘மருத” ஒரு சிறந்த விருந்து கொடுத்து குடும்ப உறவு மற்றும் தமிழ் கலாச்சாரம் பேசுகிறது

0
68

மருத விமர்சனம்: ‘மருத” ஒரு சிறந்த விருந்து கொடுத்து குடும்ப உறவு மற்றும் தமிழ் கலாச்சாரம் பேசுகிறது

பிக்வே பிக்சர்ஸ் சபாபதி தயரித்து ஜிஆர்எஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் மருத. ராதிகா சரத்குமார், விஜி, சரவணன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். விஜியின் மகள் லவ்லின், விஜிக்கு மகளாகவே நடித்து இருக்கிறார்.
பட்டுக்கோட்டை ரமேஷ் பி.ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார்.

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் சகோதரர் (சரவணன்) சகோதரி (ராதிகா). ராதிகாவின் கணவர் மாரிமுத்து. இவர் மதுவுக்கு அடிமையானவர். ராதிகாவின் மகனின் காது குத்து விழாவுக்காக தாய் மாமன் சரவணன் வீம்புக்;கு அதிக செய்முறை செய்கிறார். இதனால் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர் கோபமடைந்து கணவனிடம் தகாராறு செய்வதுடன் அவரை அனைவர் மத்தியில் அவமானப்படுத்துகிறார். பின்னர், ராதிகாவின் அண்ணன் சரவணன் செய்த செய்முறையை திருப்பி செய்ய முடியாமல் செல்கின்றனர். சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர் கோபமடைந்து ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை அவமானப்படுத்த, மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால், வறுமைக்கு தள்ளப்படுகிறார் ராதிகா. கோபம் தனியாத விஜி சந்திரசேகர், எப்படியாவது ராதிகாவிடம் செய்முறைப் பணத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் ஊதாரித்தனமாக சுற்றி வளர்ந்து வரும் ராதிகாவின் ஒரே மகன் ஜிஆர்எஸ், விஜி சந்திரசேகரின் மகளும், காதலிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் தன் மகளை வசதியான மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்க தான் செய்த செய்முறை பாக்கியை வசூலிக்க பத்திரிகை அடிக்கிறார் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர். இரண்டாவது முறையாக அண்ணன் வீட்டில் செய்முறை நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது ராதிகா வீட்டுக்கு வரும் விஜி சந்திரசேகர் எச்சரிக்கிறார். இந்தமுறை செய்முறை பணம் அவ்வளவையும் திருப்பி தராவிட்டால் நடுத்தெருவில் மானத்தை வாங்கிவிடுவேன் என்று மிரட்டுகிறார். வறுமை நிலையில் இருக்கும் ராதிகாவால் செய்முறை செய்ய முடிந்ததா? அதனால் அவர் சந்திக்கும் அவமானம் என்ன? நாயகனின் காதல் கனவு நிறைவேறியதா? இறுதியாக ராதிகாவிடம் இருந்து செய்முறையை வசூலித்தாரா விஜி சந்திரசேகர், இவர்களின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கிராமங்களில் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாகளில் செய்ய வேண்டிய செய்முறையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியது மட்டுமின்றி நடித்துள்ளார் ஜிஆர்எஸ். பாரதிராஜாவின் உதவியாளரான இவர் மண் வாசனை மாறாமல் பாரதிராஜா பாணியில் படத்தை இயக்க முயற்சித்து இருக்கிறார். படத்தின் முதல் பாதியில் ஜிஆர்எஸ் செய்யும் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை. அதேபோல் இரண்டாம் பாதி நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். நடிப்பில் ஜொலிக்க வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும்.
ஜிஆர்எஸ் அம்மாவாக ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அண்ணன் பாசம், அம்மா பாசம் என நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு போட்டியாக வில்லியாக விஜி சந்திரசேகர் தனது நடிப்பில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார். முழுகதையும் ராதிகா, விஜி ஆகியோர் மீதே செல்கிறது.

அமைதியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார் சரவணன்.
லவ்லின் சந்திரசேகர் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். படத்தில் கிராமத்து கெட்டப்பில் அழகாக காணப்படுகிறார்.

மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ஜிஆர்எஸ், கஞ்சா கருப்பு, வந்து போகிறார்கள்.

இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் தாலாட்டு. பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்தின் அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

மொத்தத்தில் பிக் வே பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மருத” ஒரு சிறந்த விருந்து கொடுத்து குடும்ப உறவு மற்றும் தமிழ் கலாச்சாரம் பேசுகிறது.