மதில் விமர்சனம்

0
31

மதில் விமர்சனம்

சிறுவயது முதல் சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் கடினமாக உழைத்து அதை நிறைவேற்றியும் விடுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். மகள், மகன், மருமகளோடு புதுமனையில் குடியேறுகிறார். இந்த நேரத்தில் தேர்தல் நெருங்க அனைத்து சுவரையும் அரசியல் கட்சிகள் தங்கள் பெயரை எழுதி ஆக்ரமிக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமாரின் சுவரும் ஆக்ரமிக்கப்பட கோபமாகும் கே.எஸ.ரவிக்குமார், அந்த அரசியல் கட்சியில் பெயர், படம் அனைத்தையும் சுண்ணாம்பு அடித்து அழித்து விடுகிறார். அரசியல்வாதி மைம் கோபி ஆத்திரமடைந்து, மின்சாரத்தை துண்டித்தும், சுவரை இடித்தும், கே.எஸ்.ரவிக்குமாரை அவமானப்படுத்தியும் அனுப்பி விடுகிறார். இதனால் கே.எஸ்.ரவிக்குமார், மைம் கோபிக்கு சரியான பாடம் புகட்ட நினைக்கிறார். அவரின் வியூகம் என்ன? எவ்வாறு அரசியல்வாதிக்கு சவால் விட்டு ஜெயித்தார்? சுவருக்கு விடிவு காலம் வந்ததா? என்பதே மீதிக்கதை.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் குடும்ப தலைவராக தவறை தட்டிக் கேட்கும் குரலாக கே.எஸ்.ரவிக்குமார், மகளாக திவ்யா துரைசாமி, அரசியல்வாதியாக மைம் கோபி, நாடக நடிகர்களாகவும், நண்பர்களாகவும் வரும் பிக்பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோருடன் பலர் படத்திற்கு தூண்கள்.
ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவு, எல்.வி.முத்து கணேஷின் இசை படத்தின் விறுவிறுப்புக்கு உத்திரவாதம்.
எம்.தியாகராஜனின் படத்தொகுப்பு பரவாயில்லை. எழிச்சூர் அரவிந்தனின் வசனம் மட்டும் சில இடங்களில் எடிட் செய்ய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் அனைவரும் எதிர் கொண்ட பிரச்னையை ஒரு சாதாரண குடும்பத்தலைவர் எதிர்த்து தட்டிக் கேட்டு அரசியல்வாதிக்கு எவ்வாறு பாடம் புகட்டினார் என்பதை சிறப்பான காட்சிகளமைத்து இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர்.ஜவஹர். சுவர் போராட்டமே படத்தின் மையக்கரு, அதை கையிலெடுத்து, அனைவருக்குமான போராட்டமாக மாற்றி அரசியல் பலத்தை அடக்கி வாசித்திருக்கிறார்; இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவரின் முயற்சிக்கும், கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்புக்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் எஸ்.எஸ். க்ரூப் சிங்கசங்கரன் தயாரித்திருக்கும் மதில் படம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்.