மண்டேலா விமர்சனம்

0
14

மண்டேலா விமர்சனம்

சூரங்குடி கிராமத்தில் வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு பகுதிப் பிரிவுகளை சேர்ந்த மகன்கள் சாதியை கையிலெடுத்துக்கொண்டு சண்டையிட அதை தடுக்க முடியாமல் திணறும் தந்தையும் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கிலி முருகன். இந்த மகன்களால் சூரங்குடி கிராமம் தண்ணீர், கழிப்பறை, ரோடு, பஸ் போக்குவரத்து என்ற அடிப்படை வசதி இல்லாமல் எப்பொழுதும் அடிதடியுடனேயே காலம் கழிகிறது. இந்த கிராமத்தில் தொழிற்சாலை கட்ட  தலைவரான சங்கிலி முருகன் சம்மதம் தெரிவித்தால் முப்பது கோடி பணம் வரும் என்பதையறியும் அவருடைய மகன்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் நிற்கின்றனர். தேர்தலுக்கு ஜெயிக்க இருக்கும் சாதி ஒட்டு சரிசமமாக இருக்கிறது. இந்த சமயத்தில் எல்லோராலும் அவமதிக்கப்படும் சவரத் தொழில் செய்யும் யோகிபாபுவிற்கு புதிதாக வாக்காளர் அட்டை கிடைக்கிறது. அது முதல் இரண்டு மகன்களும் யோகிபாபுவை மரியாதையோடு நடத்தி, அவர் கேட்கும் அனைத்தையும் போட்டிப் போட்டுக் கொண்டு செய்கின்றனர்.  யோகி பாபு முதலில் தன்னலம் மட்டுமே கருதி பணத்தை இவர்களிடமிருந்து கறக்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களால் பாதிக்கப்பட்டு சிந்திக்க தொடங்குகிறார். இறுதியில் நடந்தது என்ன? யாருக்கு ஒட்டு போட்டார்? க்ளைமேக்ஸில் அவரை காப்பாற்ற வந்தவர்கள் யார்? என்பதே மீதிக்கதை.

இளிச்சவாயன், ஸ்மயில் என்று அழைக்கப்பட்ட யோகிபாபு, மண்டேலா என்ற பெயர் மாற்றப்பட்ட பின் கிடைக்கும் சலுகை, மரியாதையை திறம்பட கையாண்டு, அவருக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து, தன் நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்த முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கிறார் யோகிபாபு.இது தான் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்று.

சங்கிலி முருகன் ஊர் தலைவர் கெட்டப்புடன் வலம் வருவதும், எடுக்கும் நல்ல முடிவுகள் மகன்களால் தவுடு பொடியாகும் போது நொருங்குவதும், இறுதியில் இவரின் உதவிக்கரம் படத்தின் முடிவை நிர்ணயிக்கும் ஆயுதமாக பயன்பட்டிருக்கிறது சிறப்பு.

ஷீலா ராஜ்குமார் தபால் ஊழியராக வந்து யோகிபாபுவிற்கு அனைத்து உதவிகளையும் செய்யும் பெண்ணாக அருமையாக நடித்திருக்கிறார். யோகிபாபுவின் உதவியாளராக வரும் கிருதாகான் கேரக்டரில் வரும் சிறுவனின் நடிப்பு அற்புதம். மற்றும் ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி, ஊர்மக்கள் உள்பட அனைவரும் படத்தில் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர்.

பரத் சங்கரின் இசையும், வித்யூ அய்யன்னாவின் ஒளிப்பதிவும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் பயணிக்க உதவவதோடு இக்களத்திற்கு பொருந்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அழகு மட்டுமல்ல பாடல்களிலும் அதே அளவுக்கு ரசிக்க வைத்திருப்பதும் அற்புதம்.

படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சிவரை ரசிக்க வைத்து கட்டி போட்டு காமெடி கலந்து கிராமத்து கிண்டல் பேச்சோடு கச்சிதமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். படத்தின் க்ளைமாக்ஸ் யூகிக்க முடிந்தாலும், அதை மிக சுவாரசியமாக நகர்த்தி, வசனங்களை மிக நேர்த்தியாக கொடுத்து இறுதிக் காட்சியில் வேட்பாளர்களா? மண்டேலவா? யார் ஜெயித்தார்கள் என்பதை அசத்தலான திரைக்கதை மூலம் யோசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சொல்ல நினைத்ததை மிக கச்சிதமாக சொல்லியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ஒவ்வொருவரின் ஒட்டுரிமையை சொல்லி அதை எப்படி பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்தக்கூடாது என்பதை தௌ;ளத்தெளிவாகவும், அனைவருக்கும் புரியும்படியும் சிம்பிளாக சொல்லி சிறப்புடன் இயக்கியிருக்கிறார் மடோன் அஷ்வின். பாராட்டுக்கள் பல குவியும், வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் மண்டேலா அனைவரின் மனதிலும் ஆட்சி செய்து வெற்றி வாகை சூடுவான்.