திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்

0
39

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்

டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தொடங்கியது. இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 67-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ சிறந்த தமிழ் படத்திற்கான விருது பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மத்திய அரசால் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா இப்போது வழங்கப்படுகிறது.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற அவர், இரண்டாவது முறையாக தற்போது இந்த விருதை பெற்றுள்ளார்.

திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தபோதே, நிச்சயம் தேசிய விருது வெல்வார் என பாராட்டப்பட்டது. அதற்கேற்ப சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த அவருக்கு, சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுள்ளது. இமான் சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார். அப்பா-மகள் உறவின் உன்னதத்தை பேசும் வகையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக அவர் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.