தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

0
80

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது.

சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணி தனித் தனி அணியாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.

இன்னொரு தரப்பில், கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.

இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள்.

இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மாலையில் எண்ணப்பட்டன. இதில் ஆ.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்றார்.

அதே போல் இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி  அணியில் போட்டியிட்ட ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா,  அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்.