டெடி விமர்சனம்

0
58

டெடி விமர்சனம்

ஒரு விபத்தில் காயமடைந்த ஸ்ரீவித்யா (சாயீஷா) மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று அவரை ஒரு கும்பல் கடத்தி விடுகின்றனர். அப்போது அவரின் ஆத்மா ஒரு ‘டெடி” பியர் பொம்மைக்குள் புகுந்துகொள்கிறது. அதன்பிறகு அந்த டெடிக்கு நடக்கும், பேசும் திறன் கிடைத்துவிடுகிறது. இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர், புத்திசாலியான ஆர்யாவை (சிவா) சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. ஆர்யாவும் அதற்கு உதவ முன்வருகிறார்.இருவரும் சேர்ந்து சாயீஷாவை கண்டு பிடித்தார்களா? சாயீஷாவுக்கு என்ன ஆனது, அவர் ஏன் கடத்தப்படுகிறார்? டெடிக்குள் சாயீஷா ஆத்மா எப்படி புகுந்தது? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஓசிடியால் பாதிக்கப்பட்ட அதிமேதாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர்யா துறுதுறுவென நடித்திருக்கிறார். நடிப்பிலும், ஆக்ஷன் காட்சியிலும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளார்.

சாயீஷாவிற்கு சின்ன ரோல் தான் என்பதால் படத்தில் பெரிதாக ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெடியாக நடித்த நடிகர் ஈ.பி.கோகுலன் மொத்த படத்திற்கும் உயிர் ஊட்டியுள்ளார். அந்த டெடியின் அழகான அசைவுகளை சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். டெடி கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்துகிறார்.
வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
டாக்டராக சாக்ஷி அகர்வால், ஆர்யாவுக்கு நண்பர்களாக நடித்திருக்கும் சதிஷ் மற்றும் கருணாகரன் ஆகியோர் தங்களது பங்களிப்பை கச்சிதமாக கொடுத்;திருக்கிறார்கள்.

டி.இமானின் இசை மற்றும் பின்னணி இசையும், சக்தி சரவணனின் ஸ்டண்ட் காட்சிகள், எஸ்.யுவா ஒளிப்பதிவு படத்தின் வேகத்தை கூட்டியுள்ளது. பாடல்கள் ஓகே.

மருத்துத்துறையில் நடக்கும் ஒரு பிரச்னையை மையப்படுத்தி பலபடங்கள் வெளிவந்துள்ள நிலையில், கரடி பொம்மையை வைத்து டெடி என்ற கதாபாத்திரத்துடன் தமிழில் ஒரு படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன். அனிமேஷன் கதாபாத்திரமான டெடியை பார்க்கும் போது அனிமேஷன் போல் அல்லாமல் ஒரு பொம்மை நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டி உள்ளார். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதி விறுவிறுப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. லாஜிக் மீறல்கள் தெளிவாக தெரிகிறது.திரைக்கதையில் இன்னும் கோஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ஸ்டுடியோ கீரின் சார்பில் கே.இ.ஞானேவேல்ராஜா மற்றும் ஆதனா ஞானேவேல்ராஜா தயாரிப்பில் வெளிவந்துள்ள டெடி சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.