ஜெய்பீம் விமர்சனம் : தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல கிடைக்கப்போகும் விருதுகளுக்கும் பெருமை சேர்க்கும் படம் ஜெய்பீம்

0
120

ஜெய்பீம் விமர்சனம் :
தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல கிடைக்கப்போகும் விருதுகளுக்கும்
பெருமை சேர்க்கும் படம் ஜெய்பீம்

இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு, பாம்பு பிடிக்கும் தொழிலை செய்தாலும் அவ்வப்போது செங்கல் சூளையில் வேலை செய்து தன் மனைவி செங்கேணி, மகளோடு சந்தோஷமாக வாழ்கிறார். ஊர்த்தலைவர் வீட்டில் பாம்பு பிடிக்க ராஜாகண்ணு சென்று வரும் சூழல் ஏற்படுகிறது. அதன் பின் ராஜாகண்ணு வெளியூருக்கு செங்கல் சூளையில் வேலை செய்ய சென்று விடுகிறார். இந்த சமயத்தில் ஊர்த்தலைவர் வீட்டில் இருக்கும் நகைகள் காணாமல் போக, ராஜாகண்ணு மேல் சந்தேகப்பட்டு ஊர்த்தலைவர் புகாரின் பேரில் ராஜாகண்ணுவை தேடி போலீஸ் வருகிறது. வீட்டில் கர்ப்பிணியான செங்கேணி மட்டும் இருப்பதை பார்த்து அவரை போலீஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அதன் பின் ராஜாகண்ணுவின் அக்கா, உறவினர்களான இருட்டப்பன்,மொசக்குட்டி ஆகியோரையும் அழைத்து வந்து அடித்து துன்புறுத்தி ராஜாகண்ணு இருக்கும் இடத்தை கேட்கின்றனர். ஆனால் யாருக்கும் ராஜாகண்ணு இருக்கும் இடம் தெரியாததால் போலீஸ் நிலையத்திலேயே கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இதையறியாத ராஜாகண்ணு தன் குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு வர போலீஸ் அவரை கைது செய்து அழைத்து வந்து நகைகள் இருக்கும் இடத்தை கேட்டு அடிக்கின்றனர். எதுமே தெரியாது என்று கூறியும் செவி சாய்க்காத போலீஸ் அராஜகத்தால் ராஜாகண்ணு துன்புறுத்தப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார். ராஜாகண்ணு, இருட்டப்பன், மொசக்குட்டி ஆகிய மூவர் மட்டும் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளாக தனி அறையில் வைக்கப்படுகின்றனர். மறுநாள் செங்கேணியிடம் போலீஸ் அதிகாரி மூவரும் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பி ஒடிவிட்டனர் என்று கூறுகின்றார். அதை நம்பாத செங்கேணி பல இடங்களில் தேடுகிறார், இறுதியில் அறிவோளி ஆசரியர் மைத்ரேயின் உதவியுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீல் சந்துருவை சந்திக்கிறார். அதன் பின் வழக்கு என்னவானது? வக்கீல் சந்துருவால் ராஜாகண்ணுவை கண்டு பிடிக்க முடிந்ததா? போலீஸ் ராஜாகண்ணுவை கண்டுபிடிக்க ஒத்துழைப்பு கொடுத்ததா? கைது செய்யப்பட்ட மூவரின் நிலை என்ன? திசை திரும்பி வழக்கின் முடிவு என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ராஜாகண்ணுவாக மணிகண்டன் கிராமத்து பழங்குடி இளைஞரின் செயல்பாடுகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் பிரதிபலித்து, மனைவி மேல் அபரிதமான பாசம் கொண்ட கணவராக, கல்வீடு கட்டித்தரும் ஆசை நிராசையாக, தன் நேர்மையான குணத்தை சந்தேகப்படும் இடத்தில் விட்டு கொடுக்காமல் போராடி இறுதியில் இன்னல்களை அனுபவித்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்படும் காட்சியில் சிறப்பாக தத்ரூபமான நடிப்பால் கை தட்டல் பெறுகிறார்.

செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் படம் முழுவதும் இவரின் முகபாவங்கள், நடை, உடை அனைத்தும் எளிய கிராமத்து பழங்குடி பெண்ணாகவும் அதே சமயம் கணவன் மேல் அபரிதமான அன்பு செலுத்தும் காதல் மனைவியாகவும், கணவனை போராடி மீட்க முடியாத இயலாமையை தன் கண்களிலும், செயலிலும் பிரதிபலித்து, எந்த ஒரு அழுத்தத்திற்கும், நிர்பந்தத்திற்கும் இடம் கொடுக்காமல், கணவனை தேடி கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிக்கு வக்கீலுக்கு உறுதுணையாகவும் செயல்படும் வல்லமை பெற்ற பெண்ணாக மாறும் தருணம் அருமை. இறுதியில் தன் கணவரை உயிரோடு மீட்க முடியாமல் போனாலும், மற்ற இருவருக்காகவும் கடைசி வரை போராடி வென்று க்ளைமேக்சில் வக்கீல் சந்துருவிற்கு கை கூப்பி நன்றி சொல்லும் இடம் மனதை நெகிழ செய்து விடுகிறார். ஊர்த்தலைவர், போலீஸ்கமிஷனர் வரை அனைவரையும் தன் நறுக் பதிலால் சவுக்கடி கொடுத்து பிரமிக்க வைத்து சிங்க நடை போட்டு சிம்ம சொப்னமாக தலை நிமிர்ந்து செல்லும் காட்சி அப்ளாஸ் அள்ளுகிறது. லிஜோமோல் ஜோஸ்சின் யதார்த்தமான நடிப்பிற்கு பல விருதுகள் குவியும் என்பது நிச்சயம்.

வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா அமைதியான அடக்கமான நடிப்பு வித்தியாசமான கெட்டப், அவருக்கு கனகச்சிதமாக பொறுந்தி, வலுவான அஸ்திவாரமாக இந்தப் படத்தில் அசத்தியுள்ளார். அவர் இல்லாமல் இந்த படம் நன்றாக இருக்காது. உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் அற்புதமாக நடித்தார். இவர் நடித்த படங்களிலேயே தி பெஸ்ட் படம் இது தான்.

ஐஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ், டிஜிபி ராதாகிருஷ்ணனாக ஜெயபிரகாஷ், ஏஜி ராம்மோகனாக ராவ் ரமேஷ், போலீஸ் உதவி ஆய்வாளராக வரும் தமிழ் அடிக்கும் அடியால்அலற வைத்து வெறுப்பை சம்பாதித்து கொள்கிறார்.

அரசு வக்கீலாக சிரித்தே மழுப்பும் குரு சோமசுந்தரம், ஜால்ரா போடும் வக்கீலாக எம்.எஸ்.பாஸ்கர், காட்டமான ஊராட்சித்தலைவராக இளவரசு, சின்ராசு, ராஜேந்திரன், அறிவொளி ஆசிரியராக ரஜிஷா விஜயன் என்று அத்தனை பேரும் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவி தேர்ந்த நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

யுகபாரதி, ராஜுமுருகன், அறிவு ஆகியோரின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கும் இசையாக கொடுத்து, பின்னணி இசையிலும் அதிரச் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை நகர விடாத வண்ணம் கட்டிப்போட்டு காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கண் எதிரே நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி அச்சத்தை கொடுத்து அசத்தி விடுகிறார்.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் கே.கதிர்pன் உழைப்பு தான் படத்தின் ஹைலைட்டான விஷயம். அனைத்தும் அருமை ஏற்படுத்தும் பிரமை அளப்பறியது.

நமக்கு அருகில் நடக்கும் கொடுரங்களை நாம் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதை செவிட்டில் அறைந்தார் போல் படமாக்கி இருக்கிறார் ஞானவேல்.

1990ல் கடலூரில் பழங்குடி இருளர் ராஜாகண்ணுவிற்கு லாக்அப்பில் விசாரணை என்ற பெயரில் நடைபெற்ற கொடுமை, அவர் இறப்பை மறைத்து நாடகமாடிய போலீசின் முகத்திரையை கிழித்த வக்கீல் சந்துருவின் சட்ட போராட்டமே இந்த ஜெய் பீம் படம். வக்கீலாக இருந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பல வழக்குகளை விரைவாக முடித்த பெருமையும் இவரைச் சாறும். இவர் வாதாடி ஜெயித்த கதையை மையமாக வைத்து தான் ஜெய்பீம் கதை உருவாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை தோய்வில்லாமல் இயக்கிய விதம், ஒவ்வொரு காட்சியும் 90ன் காலகட்டத்திற்கு அழைத்து சென்று போலீஸ், லாக்கப், தேடல்,கோர்ட், விசாரணை என்று பல கோணங்களில் பயணித்தாலும் அலுப்பு ஏற்படாத வண்ணம் விறுவிறுப்பாகவும். சாட்சியங்கள், ஜோடனைகளை சாமர்த்தியாமாக உடைத்து மனித உரிமை மீறல்களை அப்பட்டமாக தோலுரித்து, வக்கீலின் வாதத்திறமையால் சாதுர்யமாக விசாரித்து நீதி கிடைக்க அரும்பாடு படும் கடைசி தருணம் வரை பிரம்மிப்பும், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கலந்து கொடுத்து அசத்தி விடுகிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். இவரின் சீரிய முயற்சியும், பங்களிப்பும் பல வெற்றிகளை தரும், விருதுகளை குவிக்கும்.

மொத்தத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒங்கி ஒலிக்க செய்த அருமையான படம், அனைவரையும் கவர்ந்து தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல கிடைக்கப்போகும் விருதுகளுக்கும் பெருமை சேர்க்கும் படம்.