சபாபதி விமர்சனம்: வெல்வான் வாகை சூடுவான்

0
79

சபாபதி விமர்சனம்: வெல்வான் வாகை சூடுவான்

ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான எம்.எஸ்.பாஸ்கர், திக்கு திணறி பேசும் குறைபாடு கொண்ட தன் மகன் சந்தானத்தை எப்படியாவது வேலையில் சேர்த்து விட வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருக்கிறார். தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அப்பாவி குணம் கொண்ட சந்தானம் பல இடங்களில் நேர்காணலுக்கு சென்றாலும் இழிவுபடுத்தப்பட்டு மன வேதனை அடைகிறார். இதனை அறியாத தந்தையின் வற்புறுத்தல் சந்தானத்தை குடிக்க வைக்கிறது. குடி போதையில் வீட்டிற்கு வரும் சந்தானத்தை பார்த்து தந்தை கோபப்பட, வீட்டை விட்டு வெளியே வருகிறார். அந்த சமயம் பார்த்து அரசியல்வாதியின் கார் விபத்துக்குள்ளாகி அதிலிருக்கும் 20 கோடி பணம் கொண்ட ஒரு பெட்டி சந்தானத்தின் அருகில் விழுகிறது. அதை சுயநினைவில்லாமல் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு வருகிறார் சந்தானம். மறுநாள் தொலைந்த பேட்டி அரசியல்வாதியுடையது என்று தொலைக்காட்சி தகவலில் தெரியவர அதை எடுத்துக் கொண்டு அரசியல்வாதி சாயாஜி ஷிண்டேவிடம் ஒப்படைக்க வருகிறார். சந்தானம் அரசியல்வாதியிடம் ஒப்படைத்தாரா? அதன் பின் சிக்கலில் மாட்டிக் கொள்வது ஏன்? விதியின் விளையாட்டு சந்தானத்தை எங்கு கொண்டு சேர்க்கிறது? என்பதே மீதிக்கதை.

சந்தானம் சபாபதி என்ற கதாபாத்திரத்தை நன்றாக உள் வாங்கி நடித்து முகபாவனை திக்கி திணறி அச்சு அசலாக பேச்சால் நடிப்பை வெளிப்படுத்தி, அப்பாவித்தனம் கலந்த காமெடி கொடுத்து படம் முழுவதும் இவரின் பங்களிப்பு சிறப்பு. பாசம், காதல், நட்பு, ஈகை குணம் என்று சந்தானம் அடிக்கும் லூட்டி ரசிக்க வைத்து சிரிக்க வைக்கிறார்.வெல்டன்.

கணபதி வாத்தியாராக எம்.எஸ்.பாஸ்கர் சந்தானத்தின் தந்தை கதாபாத்திரம் அருமை. அவரின் படபடவென பேச்சும், கோவம் படம் முழுவதும் பிரதிபலித்து சந்தானத்தின் கேரக்டருக்கு துணையாக இருந்து மெருகேற்றியுள்ளார்.
சாவித்தியாக பிரீத்தி வர்மா முக்கியத்துவம் இல்லை என்றாலும் முத்தாய்ப்பாக வருகிறார்.

குக் வித் கோமாளி புகழ், சாயாஜி ஷிண்டே, வம்சி, மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன், மாறன்,உமா பத்மநாபன், ரமா, முத்து படத்தை தாங்கி பிடித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

பின்னணி இசையும், பாடல்களிலும் சாம் சி.எஸ் படத்திற்கு கேற்ற டெம்போவை கொடுத்து கை தட்டல் பெறுகின்றார்.

பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் படத்தின் வெற்றி பங்களிப்பை வாரி வழங்கியுள்ளனர்.

சபாபதி என்ற சாதாரண அப்பாவி மனிதனின் வாழ்க்கையில் விதி விளையாடும் விளையாட்டு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு நிலையை புரட்டி போடுகிறது என்பதைச் சொல்லும் திரைக்கதையில் கொஞ்சம் காதல், நட்பு கலந்து அரசியல் நெடியோடு காமெடியுடன் அர்த்தமுள்ள மெசேஜையும் இறுதியில் கொடுத்து அளவான பேச்சுடன் சந்தானத்திற்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைத்திருக்கும் விதத்தில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ். புதுவித சிந்தனையோடு சித்தரித்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படத்தை கொடுத்து பாராட்டு பெறுகிறார் இயக்குனர் ஸ்ரீனிவாசராவ்.

மொத்தத்தில் ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில் வெளி வந்துள்ள சபாபதி சரி நிகர் போட்டியாக களமிறங்கினாலும் நின்று வெல்வான் வாகை சூடுவான்.