கடைசீல பிரியாணி விமர்சனம்

0
102

கடைசீல பிரியாணி விமர்சனம்

இரண்டு மகன்களை தாய்,தாத்தா வளர்க்கின்றனர். கடைசி மகனை பிரித்து சென்று தந்தை வளர்கிறார். முரட்டு சுபாவம் கொண்ட வசந்த் செல்வம், தினேஷ்மணி ஆகிய இருமகன்களும் கொலை, சண்டை என்று வளர்க்கப்படுகின்றனர். கடைசி மகனான விஜய் ராம் தந்தை சொல் கேட்டு நல்ல பிள்ளையாக வளர்கிறார். இதனிடையே எதிர்பாராத விதமாக தந்தை கொல்லப்பட அனாதையாக தவிக்கும் விஜய் ராமை, அண்ணன்கள்  வசந்த் செல்வம், தினேஷ்மணி ஆகிய இருவரும் அழைந்து வந்து தந்தை சாவுக்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று அட்வைஸ் செய்கின்றனர்.கேரளாவில் உள்ள கோட்டயத்திற்கு  வேறு வழிஇல்லாமல் வேண்டா வெறுப்பாக செல்லும் விஜய் ராம் அண்ணன்களின் பழி வாங்கும் முயற்சியில் துணை போகிறார்.  ரப்பர் எஸ்டேட் முதலாளி விஷால் ராமை கொன்று விட்டு தப்பித்து செல்லும் போது மழை பெய்ய மலைக்காட்டில் சென்று கொண்டிருக்கும் மினி லாரியில் லிப்ட் கேட்டு மூன்று சகோதரர்களும் பின்னால் ஏறிக்கொள்கின்றனர். அங்கே ஒரு சவப்பெட்டி இருக்க, திடீரென்று அதிலிருந்து லாரி டிரைவர் மகன் எழுந்து வர அண்ணன்கள் வசந்த் செல்வம், தினேஷ்மணி பயத்தில் வண்டியிலிருந்து குதித்து இறந்து விடுகின்றனர். போலீஸ் சம்பவத்தை கேள்விப்பட்டு விரைகிறது. வண்டியிலிருந்து விஜய் ராம், லாரி டிரைவர்,அவரது மகன் ஆகியோர் காட்டில் தப்பித்து ஒடுகின்றனர். அவர்களை பிடிக்க பெரிய புள்ளியாக விளங்கும் தாதாவின் சைக்கோ மகன், போலீஸ் என்று சுற்றி வளைத்து காட்டில் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர். இந்த தேடுதல் வேட்டையில் விஜய் ராம் சிக்கினாரா? சைக்கோ தாதா மகன் அவரை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாண்டி பிரதர்ஸ் விஜய் ராம், வசந்த் செல்வம், தினேஷ் மணி  என்ற மூன்று மகன்களாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து அசத்துகின்றனர். தாதாவாக விஷால் ராம், தாதாவின் மகனாக  மலையாள நடிகர் ஹக்கீம் ஷா பார்வை, நடை, உடை, பாவனையில் மிரட்டியுள்ளார். சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி படத்திற்கு பின்னணி குரல் கொடுத்து ஒரு சீனில் தலைகாட்டி விட்டு செல்கிறார்.

இவர்களைத்தவிர லாரி டிரைவர் மற்றும் அவரது மகன் என்று படத்தின் இறுதிக் காட்சிக்கு நல்ல உத்திரவாதம் கொடுத்துள்ளனர்.

ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் மொஹம்மத் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

வினோத் தணிகாசலத்தின் பின்னணி இசை படத்தின் துரத்தல் காட்சிகளுக்கும், காடுகளின் சப்தங்களுக்கு ஏற்ப அழகாக கொடுத்துள்ளார்.
இக்னீசியஸ் அஸ்வின் எடிட்டிங் முதல் பாதியை இன்னும் திறம்பட கொடுத்திருக்கலாம்.

மலையாள வாசனையோடு ஒரு த்ரில்லிங் பயணத்தை பிளாக் காமெடியில் கொடுத்து வித்தியாசமான துரத்தல் திரைக்கதையை அச்சு அசலாக மலைக்காடுகளில் எடுத்துள்ள இயக்குனர் நிஷாந்த் களிதிண்டியை பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் நன்றாக பேசப்பட்டிருக்கும். முதல்படத்திலேயே புதிய முயற்சியில் தன் திறமையை காட்டி இயக்குனர் நிஷாந்த் களிதிண்டி கை தட்டல் பெறுகிறார்.

மொத்தத்தில் ஒய் நாட் எக்ஸ் மற்றும் மேஸ்ட்ரோஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சசிகாந்த் மற்றும் சக்கரவர்த்தி ராமசந்திரா தயாரித்து வெளிவந்திருக்கும் கடைசீல பிரியாணி நல்ல சுவை கலந்து வாசனையில் மணக்கிறது.