ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? படக்குழு விளக்கம்!

0
21

ஓடிடி-யில் வெளியாகிறதா ‘தலைவி’? படக்குழு விளக்கம்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவி படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, தலைவி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இதனை தலைவி படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தலைவி படத்தை முதலில் திரையரங்கில் தான் வெளியிடுவோம், அதன்பின்னர் தான் ஓடிடி-யில் வெளியிடப்படும் என விளக்கம் அளித்துள்ளது.