ஓடிடி எதிர்காலம் கருதி அஞ்சும் நவாஸுதீன்

0
29

ஓடிடி எதிர்காலம் கருதி அஞ்சும் நவாஸுதீன்

இந்தி சினிமாவின் முன்னணி கலைஞர் நவாஸுதீன் சித்திக். இந்திய ஸ்ட்ரீமிங் துறையிலும் தனிப் முத்திரை பதித்து வருபவரும் கூட. `சேக்ரட் கேம்ஸ்’, `சீரியஸ் மென்’, `ராத் அகேலி ஹை’ என்று இவரின் படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தொடர்ந்து ஓடிடியில் கவனம் செலுத்தி வரும் நவாஸுதீன் ஓடிடியின் எதிர்காலம் குறித்து பயப்படுவதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாலிவுட் ஹங்காமா தளத்திடம் பேசிய நவாஸுதீன், “பணத்தை மட்டுமே எண்ணமாக கொண்டு செயல்படும் பழைய தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தை தற்போது கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர். அந்த மாதிரியான எண்ணம் கொண்டவர்களிடம் நல்ல உள்ளடக்கத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் ஒரே ஃபார்முலாவை மீண்டும் மீண்டும் விற்பவர்கள். இது போன்றவர்கள் ஸ்ட்ரீமிங் தொழிலைக் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வெளிப்படையாகச் சொன்னால், ஓடிடி தளம் இந்தியாவில் சிறப்பான தொடக்கத்தை கண்டிருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதுபோன்ற தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரீமிங் துறையில் ஈடுபடும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு வியாபாரம்.

நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் உள்ள இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு உலக அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன என்பதால் இது தொடர வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போது நடக்கும் மாற்றம் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

ஏனென்றால், பெரிய தயாரிப்பாளர்களால் வணிகத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அவர்களுக்கு கலை பற்றி எந்த எண்ணமும் இல்லை. அவர்கள் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் மற்றும் ஒரு வில்லன் என எந்தக் கதையும் இல்லாத ஒரே ஃபார்முலாவை கொண்டு நிலைக்க நினைக்கிறார்கள்.

இதே ஃபார்முலாவை கடந்த 30-40 ஆண்டுகளாக தான் நாம் செய்து வருகிறோம். இன்னும் அது சலிப்படையாமல் இருந்து வருகிறது. என்றாலும் கடவுள் இவர்கள் போன்றவர்களை நுழைய விடாமல் தடுத்து வருகிறார் என நம்புகிறேன். எனக்கு கமர்ஷியல் சினிமா பிரச்னை இல்லை. ஆனால், பழைய படத்தை காப்பி அடிக்கும் போலி உள்ளடக்கம் கொண்ட படங்களில் தான் பொறுமை இல்லை” என்று கவலையுடன் கருத்துப் பகிர்ந்திருக்கிறார் நவாஸுதீன் சித்திக்.