ஏமாற்றம் அளித்த ஆஸ்கர் குழு: இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’

0
38

ஏமாற்றம் அளித்த ஆஸ்கர் குழு: இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் இடம்பெறவில்லை.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் குவித்தது. சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்ற நிலையில், கடந்த மாதம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் படங்கள் பட்டியலிலும் ‘ஜெய் பீம்’ நேரடியாக இடம்பிடித்து புருவம் உயர்த்த வைத்தது. இந்தத் தகுதிப் பட்டியலில் ’ஜெய் பீம்’ படத்துடன் சேர்த்து மொத்தம் 276 படங்கள் போட்டியிட்டன.

இந்தப் படங்களில் 10 படங்கள் மட்டும் தற்போது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இதில், ‘ஜெய் பீம்’ இடம்பெறவில்லை. நிச்சயம் ஆஸ்கர் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் பீம்’ இடம்பெறாததால் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும், ‘ஆஸ்கர் வெல்லவில்லை என்றால் என்ன? மக்களின் மனங்களில் ஏற்கனவே ஆஸ்கரை வென்றுவிட்டது’ என்று அதே ஆதரவு நெகிழ்ச்சியுடன் கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்வாகியுள்ள ’Belfast’, ‘CODA’, ’Don’t Look Up’, ‘Drive My Car’,’Dune’,’King Richard’, ’Licorice Pizza’, ’Nightmare Alley’, ‘The Power of the Dog’,’West Side Story’ இந்தப் 10 படங்களில் டிகாப்ரியோ நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டோண்ட் லுக் அப்’ இந்திய ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில்தான், தற்போது தேர்வாகியுள்ள 10 படங்களில் தேர்வாகும் சிறந்தப் படம் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஜெய் பீம்’ படத்துடன் மூன்று தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் தேர்வானது. அந்தப் படமும் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகவில்லை. தமிழ் ரசிகர்களைப் போலவே மலையாள ரசிகர்களுக்கும் இது மிகுந்த ஏமாற்றம்தான்.

மேலும், இறுதி பரிந்துரைப் படங்களுக்கான பட்டியல் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த காஸ்டியும் டிசைனர் என 23 பிரிவுகளுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களையும் ஆஸ்கர் விருதுக்குழு தற்போது அறிவித்துள்ளது.