ஈஷா யோகா மையத்தில், மகாசிவராத்திரி விழாவில் நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்

0
50

ஈஷா யோகா மையத்தில்,  மகாசிவராத்திரி விழாவில்  நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்று வருகிறது.

கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு லிங்க பைரவி தேவியின் ஊர்வலத்துடன் தொடங்கியது.. தியானலிங்கத்தில் பஞ்சபூத கிரியா நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், விழா மேடையில் லிங்க பைரவி தேவிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஜக்கிவாசுதேவ் பல லட்சக்கணக்கான மக்களுக்கு யோகா விஞ்ஞானத்தை பரிமாற உறுதி ஏற்கும் விதமாக மகா யோக யக்ஞத்தை (வேள்வியை) ஏற்றி வைத்தார்.

விழா தொடக்கவுரை ஆற்றி ஜக்கிவாசுதேவ் பேசியதாவது:-

மகாசிவராத்திரி என்பது சிவனின் அருளை பெறுவதற்கு உகந்த ஒரு மகத்தான இரவாகும். இதை ஓரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த விழாவாக பார்க்க கூடாது. படைத்தலின் மூலமான சிவனின் எல்லையில்லா வெறுமையின் தீவிரத்தை கொண்டாடும் நாள். கோள்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனிதர்களின் உயிர் சக்தியானது இயற்கையாகவே மேல் நோக்கி நகரும்.
ஆகவே, இன்றைய இரவு முழுவதும் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு விழிப்பாகவும் விழிப்புணர்வாகவும் இருந்தால் நீங்கள் அளப்பரிய பலன்களை பெற முடியும். ஆரோக்கியம், நல்வாழ்விற்கு மட்டுமின்றி ஒருவரின் முக்திக்கும் இந்நாள் மிகவும் உறுதுணையாக இருக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.
வழக்கமாக, சத்குரு முன்னிலையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நேரடியாக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சக நடிகைகளுடன் இணைந்து நடிகை சமந்தா நடனமாடினார். மேலும் ஆதியோகி சிலை முன்பு எடுத்த செல்பி புகைப்படத்தையும் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மகாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகள் மட்டுமின்றி ரஷ்யன், சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ் போன்ற வெளிநாட்டு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட டி.வி.சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன்மூலம், இந்திய ஆன்மிக கலாசாரத்தின் மிக முக்கிய விழாவான சிவராத்திரி விழாவில் கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர்.