‘ஹீரோக்களை தவிர மற்றவர்களை வேறுமாதிரி நடத்தினார்கள்’ – நடிகர் மனோஜ் பாஜ்பாய்
பாலிவுட் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கி, மசாலாக்களைத் தாண்டி தீவிர சினிமாவின் முதன்மைக் கதாபாத்திரங்களாக வலம் வந்து, மற்ற மொழிகளில் வில்லனாக நடித்து வந்த மனோஜ் பாஜ்பாய் இப்போது இந்தியாவின் முன்னணி நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
மனோஜ் பாஜ்பாய் சத்தமில்லாமல் ஓடிடி மூலம் பாலிவுட்டில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் மூலம் புதிய உச்சதை எட்டியுள்ளார். மனோஜ் பாஜ்பாய் தமிழில் சமர், அஞ்சான் படங்களில் நடித்துள்ளார். அவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சினிமா துறை கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எப்படி மாற்றம் கண்டுள்ளது என்பதை பகிர்ந்துள்ளார். அதோடு அதற்கு முன்னதான சூழல் எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்துள்ளார் அவர்.
“முன்பெல்லாம் கதாநாயகர்களை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமகன் போல நடத்தப்பட்டுள்ளனர். அதோடு அந்த புறக்கணிப்பு ஷூட்டிங் நடைபெறும் செட் தொடங்கி போஸ்டர், ரசிகர்கள் என எல்லோரிடமும் இருந்துள்ளது. அதனை நானும் எதிர்கொண்டுள்ளேன். அதனால் தான் நான் பம்பாய்க்கு இதுவரை குடியேறவில்லை. எனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம் வில்லன் கதாபாத்திரம் தான். இருந்தாலும் அப்போது கொண்டாடப்பட்டது கதாநாயகர்கள்தான்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இதெல்லாம் மாறி வருவதாக நான் உணர்கிறேன். அதுவும் கொரோனா பெருந்தொற்று அனைத்தையும் மாற்றியுள்ளது. பெண்களை பிரதான கதாபாத்திரமாக மையப்படுத்தி வருகின்ற கதைகள் இப்போது நிறைய வருகின்றன. இப்போது இங்கு திறமை உள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார் அவர்.