’ஹிருதயம்’ தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர்

0
119

‘ஹிருதயம்’ தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர்

‘ஹிருதயம்’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் கரண் ஜோகரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும் கைப்பற்றியிருக்கின்றன.

வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் – கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த ‘ஹிருதயம்’ படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் கரண் ஜோகரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘ஹிருதயம்’ வரவேற்பை பெற்றாலும் ஓடிடியில் வெளியான பிறகே இன்னும் வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்தது. சென்னையையே ‘ஹிருதயம்’ படத்தின் இதயமாக்கி ’ஹிட்’ அடித்துள்ளார் இயக்குநர் வினீத் சீனிவாசன்.குறிப்பாக, தமிழர்களையும் வடச்சென்னை மக்களையும் சரியாக பதிவு செய்ததற்காக பலரும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில், இன்று ரீமேக் உரிமை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோகன்லாலும் கரண் ஜோகரும் இதுகுறித்த அறிவிப்பை உற்சாகமுடன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். தீபிகா படுகோனே, சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கெஹ்ரையான்’ படத்தினை கரண் ஜோகர் கடைசியாக தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.