வெளியானது “83” படத்தின் டிரெய்லர் – ரசிகர்கள் உற்சாகம்

0
94

வெளியானது “83” படத்தின் டிரெய்லர் – ரசிகர்கள் உற்சாகம்

இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ’83’ படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான அப்போதைய இந்திய அணியில் , ஸ்ரீகாந்த், மொகிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, மான் சிங், சந்தீப் படேல், கீர்த்தி ஆசாத், மதன்லால் உட்பட பங்கேற்றனர்.

அந்த சாதனை வெற்றியை மையமாக வைத்து, ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தி இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். கபில்தேவாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி, கவாஸ்கராக தஹிர் ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற நிகழ்வையும், கபில்தேவ் வாழ்க்கையையும் அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் முடிந்து எப்போதோ ரெடியாகிவிட்டாலும் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிரைலரில் ரன்வீர் சிங், ஜீவா ஆகியோர் மிரட்டலாக வருகின்றனர். பல காட்சிகள் கலகலப்பாகவும் உணர்ச்சிகரமாகவு ம் இருக்கிறது. இந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டிரைலரை சினிமா பிரபலங்கள் பாராட்டித் தள்ளியுள்ளனர். நடிகர் மாதவன், ரன்வீர் சிங்கையும் நடிகர் ஜீவாவையும் டிவிட்டரில் பாராட்டியுள்ளார். இது மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரைப் போலவே இயக்குநர் கரண் ஜோகரும் பாராட்டியுள்ளார். ‘நடிகர்கள் மற்றும் மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள். டிரைலர் உணர்ச்சிகரமாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. ரன்வீர், நீங்கள் எளிதாக கபில்தேவ் போல மாறியுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளார்.