வி விமர்சனம்

0
36

வி விமர்சனம்

சுற்றுலாவிற்கு செல்லும் ஐந்து காதல் ஜோடிகள் போனில் புதிய வி என்ற செயலி ஒன்றில் பதிவு செய்கின்றனர். அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறந்த தேதியை தெரிவிக்கும் செயலி. இவர்களின் பதிவிற்கு அந்த செயலியில் இறந்த தேதி ஒரே நாளில் வருகிறது என்பதை காட்ட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். அதன் பின் பைக்கில் பயணத்தை தொடரும் ஐந்து ஜோடிகளையும் லாரி ஒன்று துரத்துகிறது. மரண பயத்தில் இருக்கும் அனைவருக்கும் தப்பித்தால் போதும் என்று ஒரு விடுதியில் தங்க செல்கின்றனர். அங்கே சபீதா ஆனந்த் அவர்களின் வருகையை பதிவு செய்து அறைகளை கொடுக்கிறார். அறைகளில் ஒய்வெடுக்க செல்லும் அனைவருக்கும் அந்த செயலி தெரிவிக்கும் நபர் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்ட நபர் கொஞ்ச நேரத்தில் காணாமலும் போய் விடுகின்றனர். இதனால் செய்வதறியாது தவிக்கும் எஞ்சிய நண்பர்;கள் சபிதா ஆனந்தை தேட அவர் இல்லாமல் விடுதியில் அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. விடுதிக்கு வெளியில் செல்ல முடியாமல் கேட் பூட்டியிருக்க, காம்பவுண்ட் சுவரிலும் மின்சாரம்  பாய்வதால் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்கின்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்க்கும் போது கதவு திறந்திருக்க அதில் தப்பித்து ஒடும் இரண்டு பேரில் ராகுல் மட்டும் உயிரோடு இருக்க அங்கே தங்களை துரத்திய லாரி இருப்பதை பார்த்து அதில் ஏறிக் கொள்கிறார். அதன்பின் தான் தன் நண்பர்களின் சடலங்கள் அந்த லாரியில் இருப்பதை பார்த்து ராகுல் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இந்த துரத்தலுக்கும், கொலைகளுக்கும் யார் காரணம்? ஏன் இவர்களை மட்டும் குறி வைத்து லாரி பின் தொடர்கிறது? அந்த லாரியை ஒட்டி வந்தவருக்கும் கொலைகளுக்கும் சம்பந்தம் என்ன? மர்மம் என்ன? என்பதே திகிலான மீதிக்கதை.

ராகவ், லுதியா, திவ்யன், ஆர்.என்.ஆர்.மனோகர், சபிதா ஆனந்த் இவர்களுடன் நண்பர்களாக வருபவர்கள் கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக மாறி சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இசை -இளங்கோகலைவாணன், ஒளிப்பதிவு-அணில் கே சாமி,  படத்தொகுப்பு-வி.டி.ஹீஜித்  திகிலும் திரில்லும் நிறைந்த பயணத்தை சுறுசுறுப்பாக கொடுத்திருக்கின்றனர்.

இந்த திகில் நிறைந்த மரண பயணத்தின் இறுதியில் ஒரு சோக கதையை கொடுத்து இயல்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். பணத்திமிரால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் இளம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய, அந்த கயவர்களை அவர்கள் பெற்றோர்கள் சமார்த்தியமாக தப்பிக்க வைத்து விட, அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவர்கள் வழியிலேயே சென்று எப்படி தந்திரமாக பழி வாங்குகின்றனர்? எப்படி தண்டனை கொடுக்கின்றனர்? என்பதை சிறப்பான சம்பவங்கள் மூலமாக கதைக்களத்தை அமைத்து விறுவிறுப்பாக கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன்.

ஏற்கனவே பல படங்களில் பார்த்திருந்தாலும் பழி வாங்கும் விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பதிலும், தோய்வில்லாமல் கொடுத்திருக்கும் காட்சிகளில் தான் தனித்து நிற்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன்.

மொத்தத்தில் ட்ரூ சோல் பிக்சர்ஸ் சார்பில் ரூபேஷ்குமார் தயாரித்திருக்கும் வி படம் திகில் நிறைந்த த்ரில்லில் வியக்க வைக்கிறது.