“விவேக்கிற்கு பசுமையையும் எனக்கு கல்வியையும் பொறுப்பாக கொடுத்தார் அப்துல் கலாம்” : நடிகர் தாமு நெகிழ்ச்சி

0
27

“விவேக்கிற்கு பசுமையையும் எனக்கு கல்வியையும் பொறுப்பாக கொடுத்தார் அப்துல் கலாம்” : நடிகர் தாமு நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது.

கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19, அன்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கானொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது வழங்கப்பட்டது

இந்த விருது பெற்ற சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ளும் விதமாக ஜேகே அறக்கட்டளை அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் நடிகர் தாமு, ஜேகே கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜேகே மற்றும் இளம் விஞ்ஞானி ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முன்னதாக, மறைந்த நடிகர் ‘சின்னக்கலைவாணர்’ விவேக்கின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் நடிகர் தாமு பேசும்போது, “கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஐயாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் வருவதற்கு தாமதமான காரணத்தினால், என்னுடைய மிமிக்ரி திறமையை வைத்து சுமார் மூன்று மணி நேரம் கூடியிருந்த கூட்டத்தை கலகலப்பாக்கினேன்.. இதை அறிந்த அப்துல் கலாம், அந்த மேடையிலேயே என்னிடம், “நீ கல்விப்பணிக்காக உன்னை கொடுத்து விடு” என கூறினார். உடனே சரி என கூறிவிட்டேன்..

அன்று ஆரம்பித்த பணி, இதோ பத்து வருடங்களை கடந்து, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாம் ஐயா வகுத்த, கல்வி குறித்த பத்து கட்டளைகளை, மாணவர்களுக்குள் உருவேற்றி, அவர்களுக்கு கற்பதில் இருக்கும் சிரமங்களையும் பயங்களையும் போக்குவதை என்னுடைய தலையாய பணியாக இப்போதுவரை செய்து வருகிறேன்.. ஒவ்வொரு மாணவனுக்கும், அவனுடயை ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒளிந்துள்ள ஆசிரியரையும் அவனுக்கு அடையாளம் காட்டுவது தான் எங்கள் பணியின் நோக்கம்.

எனது வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள், இன்று நல்ல பதவிகளில் இருப்பதாக சொல்லி என்னை சந்தித்து பேசும்போது, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பில், மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறும்போது, அதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைத்துக்கொள்வேன்.. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் இதற்கான அங்கீகாரம் கிடைத்தால், இதுபோன்று இன்னும் பலர் இந்த கல்விப்பணியில் ஆர்வமாக இறங்குவார்கள் என என்னிடம் கூறுவார்கள். அந்தவகையில் தற்போது இந்த உயரிய விருது என்னது பணிக்காக கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..

என்னிடம் கல்விப்பணியை ஒப்படைத்தது போல, அதற்கு முன்பாகவே என் நண்பன் விவேக்கிடம் பசுமையை பாதுகாக்கும் பணியை ஒப்படைத்தார் அப்துல் கலாம். விவேக்கும் முழுமூச்சாக, இயற்கையை பாதுகாக்கும் பணியில் இறங்கி, ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாக கொண்டு தீவிரமாக இயங்கி வந்தார். இப்போது அவர் நம்முடன் இல்லையென்றாலும், அவர் உருவாக்கிய பாதையில், தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் நடும் மரங்களின் மூலம் உயிருடன் தான் வலம் வருவதாகவே நான் நினைக்கிறேன். அதனால் அவர் துவங்கி வைத்த பணி நிற்காமல் தொடரும் என்பது உறுதி. அவர் ஒரு கோடி மரங்கள் நடுவதை தனது லட்சிய கனவாக கொண்டதை போல, நான் ஐம்பது லட்சம் மாணவர்களுக்காகவது என்னுடைய சேவை சென்றுசேர வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன்” என்று கூறினார் தாமு.

தற்போதைய ஆன்லைன் கல்விமுறை குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, “நிச்சயமாக ஆன்லைன் கல்வி முறை மாணவர்களுக்கு நூறு சதவீதம் ஏற்றதல்ல.. ஆனால் இந்த இக்கட்டான சூழலில் 25 சதவீதத்தையாவது அது நிறைவு செய்யும் என்பதால் அதை தவிர்க்கவும் இயலாது. குறிப்பாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் தொடர்பிலேயே வைத்திருக்கவாவது அது உதவி செய்கிறது.. இந்த கொரோனா இரண்டாவது அலை நிச்சயமாக பெயிலியர் ஆகும்.. மீண்டும் கல்வி முறை சீராகும்.. அப்துல் கலாம் ஐயா கண்ட கனவுப்படி இந்த வருடம் இல்லாவிட்டாலும் வரும் 2023ல் அது நிறைவேறியே தீரும்” என்றார். .

தாமுவின் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவை (IPTSA) குறித்து ;

நடிகர் தாமு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கினார். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

2011 முதல் 2016 வரை ஐந்து ஆண்டுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மேற்பார்வையில் செயல்பட்டார் டாக்டர் தாமு. அந்தவகையில் இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும், கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..

தமிழ் இளைஞர்களின் நலனுக்காக, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், மற்றும் 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட இந்த அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்துள்ள அனுபவமுள்ள இந்தியாவின் கல்வி ஆர்வலர் தாமு என்றால் அது மிகையில்லை..

குறிப்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நேசத்துக்குரிய பக்தர்களில் ஒருவரான நடிகர் தாமு, அப்துல் கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர்.

இளைஞர்களின் தனிப்பட்ட நல்வாழ்வை வளர்ப்பது மற்றும் அவர்களின் சிறந்த எதிர்காலத்தை மேம்படுத்துதல், மேலும் இளம் தலைமுறையினரால் நம் இந்தியாவை பெருமைப்படுத்த வைப்பது போன்ற உயர்ந்த குறிக்கோளுடன் கல்வி சேவை புரிந்துள்ளதற்காக நடிகர் தாமுவுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவது மிக பொருத்தமான ஒன்று.

ஏற்கனவே சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நடிகர் தாமுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த விருது அவரது கிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு மாணிக்க கல் என்றே சொல்லலாம்.